தாஜ்மஹால்
தாஜ்மஹால்
இந்த கதை வாசிக்கு முன் நான் வாசித்த ஒரு கதையை சொல்லி விடுகிறேன் “உலக புகழ் பெற்ற உருது கதைகள்” தமிழ் வடிவம் முக்தார் பத்ரி, வெளியீடு முல்லை பதிப்பகம். இதில் “வேலி போடப்படாத கனவு” எழுதியது “யாசின் அஹ்மத்”
கதையின் நாயகன் ஒரு அரசு ஊழியன், அவனிடம் ஒரு குறை உண்டு அதாவது கை சுத்தம். நேர்மையாய் இருக்கவேண்டும் என்று நினைப்பவன். அவன் வாங்கும் ஊதியத்தில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் அவன் மனைவி ஆசையாய் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறு வீட்டை விட்டு தனியாக ஒரு வீடு கட்டி கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். அவளின் ஆசையை பூர்த்தி செய்ய இவனால் சேமிப்பு பணத்தை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு இடமும் லட்சக்கணக்கில் விற்றது.
அவனின் பணிக்காலம் அரையளவு முடியும்போது அவன் மனைவி தான் போட்டிருந்த நகைகளை எல்லாம் விற்று ஒரு இடம் வாங்க சொல்கிறாள். அவளது ஆசை அருகில் அவர்கள் இனத்தை சேர்ந்தவர்களாகவும், அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறாள்.
தகுந்த ஏஜண்ட் மூலம் அப்படிப்பட்ட இடத்தை பார்த்து விலை பேசுகிறான். அருகில் நிறைய வீடுகள் ஆகி கொண்டிருந்தன.பள்ளிவாசல் கூட அங்கிருந்தது. எப்படியோ மனைவி நகைகளை விற்ற பணத்தை கொண்டு இடத்தை முடித்து விட்டான்.
அடுத்து வீடு கட்ட வங்கி வங்கியாய் இந்த பத்திரத்தை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான்.அப்பொழுதுதான் அரசு நில அலுவலகத்தின் மூலமாக அவன் வாங்கிய இடம் வீடு கட்ட அனுமதி மறுக்கப்பட்ட இடம் என தெரிகிறது. அதை சரி செய்ய கூடிய திறமை (அதாவது…கையூட்டு) அவனிடம் இல்லை. இரண்டு வருடம் போராடி தோல்வியுடன் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விடுகிறான்.
அதற்குள் மகளின் திருமணம், அதற்கு பின் வந்த செலவுகள், இப்படி வாழ்க்கையின் பணி இறுதிக்கு வர எப்படியாகிலும் வந்த ஓய்வு பெறும்போது வந்த பணத்திலாவது அந்த இடத்தில் வீட்டை கட்டிவிடவேண்டும் என்று அங்கு செல்கிறான்.
அந்த இடத்தை வேறு யாரோ அபகரித்து வீட்டை கட்டி இருக்கிறார்கள்..!
இதனை வாசித்து எனக்கு தோன்றிய கதை கீழே கொடுத்துள்ளேன். இதில் வாசகர்கள் பரிதாப படக்கூடிய பாத்திரம் கதீஜாவா, சலாவுதீனா..?
சலாவுதீன் மனம் சஞ்சலத்தில் இருந்தது. கடைசி வரை தன் அன்பு மனைவி கதீஜாவின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ?
கதீஜா அவளை நினைக்கும்போது அவன் மனம் படபடத்தது, அவளின் வசீகர முகம், கண் இமைகளின் சிமிட்டலும், செம்மை நிலவு போன்ற முகமும், குங்கும கலரும் இவனை பரவசப்படுத்தியது. அவள் அவனுக்குத்தான் என்று நிச்சயித்த பின்னால் அவளை சந்திக்க அவன் ஒவ்வொரு தினமும் பட்ட பாடு..!
அப்பொழுதுதான் அரசு வியாபார நிறுவனம் ஒன்றில் அடிமட்ட ஊழியனாய் சேந்திருந்தான். அவள் மேல் நிலை இறுதி வகுப்பு முடிக்கும் தருவாயில் இருந்தாள். முடித்தவுடன் இருவருக்கும் நிக்காஹ் முடித்து விடலாம் என்று முடிவாகியிருந்தது.
அவள் மாலையில் பள்ளி முடிந்து செல்லும்போது இவனுக்கு நிறுவனத்தில் தலைக்கு மேல் வேலை இருக்கும், எப்படியோ கெஞ்சி கூத்தாடி, நண்பனிடம் ஓசி சைக்கிளை வாங்கிக்கொண்டு அவள் பள்ளிக்கூடம் விட்டு தோழிகளுடன் வெளியில் வருவதை ஓரமாய் நின்று இரசித்து விட்டு திரும்பவும் சைக்கிளை மிதித்து அரக்க பரக்க ஓடி வருவான். அதன் பின் அன்று இரவு படுக்கப்போகும் வரை அவனுக்கு அதே நினைவுதான். கதீஜா கதீஜா..
அன்று ஒரு நாள் அசந்தர்ப்பமாய் கதீஜா அவன் எதிரே வந்து விட்டாள். அவனை கண்டவுடன் அவள் முகம் இன்னும் சிவக்க இவனுக்கு வானமும் நிலவும் இரத்த சிவப்பாய் இருப்பது போலவே அவள் தோன்றினாள். அவள் கையை தொட்டு பார்க்க அவன் மனம் ஆசைப்பட்டாலும் சூழல் கருதி தன்னை அடக்கி கொண்டான்.
கதீஜா..அன்புடன் ஆசையாய் அழைத்தான். அவள் மெல்ல கண்களை உயர்த்தினாள், நம்ம கல்யாணம் முடிஞ்ச உடனே உன்னை “தாஜ்மஹால்” கூட்டிட்டு போய் காட்ட போறேன், மயக்கமாய் சொன்னான். அவள் ‘நிசமாவா’ என்பது போல் கண்கள் விரிய அவனை பார்த்தாள். பாவம் அவள் பாடபுத்தகத்தில் அதை பற்றி படித்திருந்ததுதான். அவளிடம் அடுத்த வார்த்தையை யோசித்து பேச நினைப்பதற்குள் கதீஜாவின் தோழிகள் அங்கு வர இருவரும் சத்தமில்லாமல் பிரிந்து போக வேண்டியதாயிற்று.
“நிக்காஹ்” முடிந்து பத்து நாட்கள் ஓடியிருந்தது, சலாவுதீன் கதீஜாவின் மயக்கம் இன்னும் தீராமல் இருந்தான். மாலை எப்பொழுது வரும், அவளிடம் எப்போது போய் சேர்ந்து இருவரும் வெளியே போவோம் என்று துடித்தான்.
கதீஜா நாம சொந்தமா ஒரு வீடு கட்டணும், கணவனிடம் மெல்ல சொன்னாள். அவன் சட்டென்று, உனக்காக “தாஜ்மஹாலே” கட்டுவேன், மயக்கமாய் சொன்னான்.
அவள் மெல்ல சிரித்து ‘தாஜ்மஹால்’ பார்க்க போலாமுன்னு சொல்லி மூணு மாசமாச்சு, அதை விடுங்க, இந்த இரண்டு ரூமுல நம்மனால எப்படி இருக்க முடியும்னு யோசிச்சு பாருங்க.
அவளின் வார்த்தை அவனை இந்த மண்ணுலகிற்கு இழுத்து வந்தது. அப்பொழுதுதான் தாஜ்மாஹலுக்கு கூட்டி போவதாய் சொன்னதை எந்தளவுக்கு ஞாபகம் வைத்து மனதுக்குள் பூட்டி கொண்டிருகிறாள் என்பதை உணர்ந்தான். அதை விட அவள் இந்த இரண்டே இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் எப்படி இருப்பது? இந்த கேள்வி அவனை மிரண்டு போக செய்தது.
இந்த இரண்டு அறைக்குள் அவன் அப்பா, அம்மா, இருவரும் போக இவனும் கதீஜாவும் இருக்கிறார்கள். பொது கழிப்பிடமாய் நான்கு வீடுகளுக்கு பொதுவாய் இரண்டு
இருந்ததையும், குளிக்கும் அறைகள் கூட இரண்டுதான் பொதுவாக இருந்ததையும் அப்பொழுதுதான் அவனால் உணர முடிந்தது.
இவ்வளவு நாள் கதீஜா வராதவரைக்கும் அதை பற்றிய சிந்தனைகள் எதுவுமே இல்லாமல்தான் இருந்திருக்கிறான். இப்பொழுது தான் அவனுக்கு உரைத்தது, பாவம் கதீஜா என்ன செய்வாள்?
நாம எப்படியும் ஒரு வீடு கட்டணும், மனைவியிடம் மயக்கமில்லாமல் அவனால் இந்த சொல்லை சொல்ல முடிந்தது. ஆனால் எப்படி என்பது அவனுக்கு பதில் தெரியவில்லை. வாப்பாவுக்கும் சரியான தொழில் இல்லை,ஏதோ அவ்வப்போது மார்க்கெட் பக்கம் சென்று வியாபாரம் செய்வார். கிடைத்த சொற்ப வருமானம் இவனை வளர்க்க சரியாக இருந்தது. மூவரும் இந்த ஒண்டு குடித்தனத்தில் வாழ்ந்து வாடகையும் கொடுத்து கொண்டிருந்தது. இவனுக்கு இந்த வேலை கூட நீண்ட நாள் தற்காலிக ஊழியனாக அந்த நிறுவனத்தில் வேலை செய்து, அதிகாரியை கையை காலை பிடித்து வேலையை நிரந்தரப்படுத்தி ஒட்டிக்கொண்டிருக்கிறான்.
அவன் வாப்பாவின் வருமானத்தை நம்பாமல் அவன் அம்மா பெருமூச்சு விட்டது இவன் சம்பளம் மாத சம்பளம் வந்த பின்னால்தான். அதுவும் போகப் போக வரவுக்கும் செலவுக்கும் சரியாக போய்க்கொண்டு இருந்தது. கதீஜாவை கரம் பிடிக்க ஆன செலவுகளை அடைக்கவும், அவளை அக்கம் பக்கம் வெளி இடங்களுக்கு கூட்டி செல்வதற்கும், ஆன செலவுகள் வரவை விட அதிகமாகவே இருந்தது.
இந்த நிலைமையில் இவன் புது வீடு ஒன்று கட்டமுடியுமா? நினைத்து கூட பார்க்க முடியாது. அதை கதீஜாவிடம் சொல்ல முடியுமா?
இரண்டாவது வருடம் கதீஜா தாயானாள், அவளின் மருத்துவ செலவுகள் இவனை இறுக்கி பிடிக்க, பல்லை கடித்து செலவுகளை இறுக்கி பிடித்தான். அவைகள் தறி கெட்டு அவனை இழுத்து கொண்டு சென்றது.
கதீஜா மகள் நசிரீனை பெற்று வீட்டுக்கு வரும்போது சலாவுதீனின் அம்மாவும், வாப்பாவும் உலகை விட்டு போயிருந்தனர். அதனால் இவர்கள் மூவருமாய் அந்த வீட்டுக்குள் குடி போக, புது வீடு வாங்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டு வழக்கம் போலவே இந்த குடித்தனத்தில் இவர்கள் வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது. செலவுகள் இப்பொழுது நசிரீனுக்கும் அவளை பெற்றதால் கதீஜாவிற்கு ஏற்பட்ட மருத்துவ செலவுகளுக்காகவும் இவனது ஊதியம் கரைந்து போக ஆரம்பித்தது
நசிரீனா பள்ளி இறுதி வகுப்பு வந்து விட்டாள். அவளுக்கு வரன் தேட கதீஜா முயற்சி செய்ய ஆரம்பித்திருந்தாள். எப்படியும் மேல் நிலை முடித்து தன்னை போலவே அவளுக்கும் ஒரு வரனை முடித்து விடவேண்டும் என்று அவனிடம் நச்சரிக்க ஆரம்பித்தாள்.
சலாவுதீனுக்கு சம்பளம் கொஞ்சம் உசந்திருந்தாலும், செலவுகள் என்னவோ இரட்டிப்பாகத்தான் இருந்தது. இனி நசிரினாவின் கல்யாணம் வந்து விட்டால்..! செலவுகளுக்கு என்ன செய்வது? கதீஜாவும் அக்கம் பக்கம் சின்ன வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தாள்.
எப்படியோ இவர்களின் திட்டப்படி நசிரீனாவிற்கு மேல்நிலை படிப்பு முடிந்தவுடன் திருமணம் அமையாவிட்டாலும், அதற்கு பின் ஒரு வருடம் கழித்து மார்க்கெட்டில் இருந்த இப்ராஹிமின் பையன் வரன் ஒன்று கிடைத்தது. ஆனால் பையனுக்கு இவன் அப்பாவை போல நிரந்தர வியாபாரமும் இல்லை, வேலையும் இல்லை. இப்ரஹிமின் இவனுக்கு ஒரு காலத்தில் தோழனாய் இதே ஊரை சுற்றி வந்தவன். இன்று சம்பந்தியாய்..!
நட்பு வரவுகளை நிர்மாணிக்கவில்லை, இப்ரமிஹின் மனைவிதான் நிரணயித்தாள். கதீஜா போட்டிருந்த எல்லா நகைகளும் நசிரீனாவின் கழுத்துக்கு மாறின. அது போக புதிதாக ஒன்றிரண்டும், கல்யாண செலவுகளுக்கும், இவன் வயிற்றை கட்டி வாயை கட்டி சேர்த்து வைத்தது கரைந்து போனது.
நசிரினாவையாவது கொஞ்சம் பெரிய இடத்தில் தந்திருக்கலாம் என்னும் ஆசை கதீஜாவின் மனதுக்குள் இருந்தது. ஆனால் அந்த பெரிய இடத்துக்கு போக தாங்களும் கொஞ்சம் பெரிய இடமாக இருக்க வேண்டுமே..!
சலாவுதீனின் வருமானம் நசிரீனாவின் கணவனை வீட்டோடு வைத்து கொள்வதற்கும், அவனது வியாபாரம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த செலவுகளுக்கும் சேர்த்து கரைந்து போக ஆரம்பித்தது. எப்படி நால்வருக்கும், அந்த ஒண்டு குடித்தன வீடு சரியாகி போனது என்பது யாருக்கும் தெரியவில்லை. அடுத்தடுத்து வரிசையாய் அவளின் பிள்ளை பெறுவுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் கதீஜாவின் வருமானமும் சேர்த்து அடித்து கொண்டு போனது
நசிரியா பெற்ற எல்லா பறவைகளும், அந்தந்த காலத்தில் சிறகை விரித்து பறந்து போக, அவர்களுடனே நசிரியாவும் அவள் கணவனும் போய் விட, இன்றும் வயதான இருவர் மட்டுமே அந்த ஒண்டு குடித்தனத்தில் அமர்ந்திருந்தனர்.
சலாவுதீன் “செவ்வான முகம் கொண்ட கதீஜாவை” அவள் முகத்தில் தேட அது எங்கோ தொலைந்து போய் சுருக்கம் விழுந்து அனுபவ கோடுகளாய் சதை திரட்சிகள் தொங்க அவனை பார்த்தபடி இருந்தாள்.
அவளும் சலாவுதீனின் முகத்தை பார்த்தாள். ஒரு காலத்தில் தன்னை திருட்டுத் தனமாய் பார்க்க சைக்கிளில் வந்த சலாவுதீனின் முகம் தானா? தான் தினமும் அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்து இரசித்து சென்ற நினைவுகள் வந்து போக.. இன்று முகமே காணாமல் போய், குழி விழுந்த கண்களாய் ஒட்டிப்போய் வெறும் எலும்புக் கூடாய் தெரியும் அவனது முகம்.
சலாவுதீன் கதீஜாவிடம் ஏம்மா நசிரியோட மாப்பிள்ளையும்,அவ புள்ளைங்களும் “தாஜ்மஹாலை” பார்க்க போறாங்களாம். நசிரும் அவ புருசனும் கூட போறாங்களாம். நசீரா போன் பண்ணினா, பணம் தேவைப்படுதாம்.
என்னோட ரிட்டையர்டு ஆன பணம் கையில இருக்கறது தெரிஞ்சு போயிருக்கும்.
சலாவுதீனிடமிருந்து மெல்லிய முணுமுணுப்பு, கதீஜா,தன்னிடம் நாமும் போலாமா என்று கேட்பாள் என்று எதிர்பார்த்தான்.
கதீஜாவிடமிருந்து சிரிப்பொன்று மட்டுமே வெளிப்பட்டது. தாஜ்மஹாலை அவள் என்றோ மறந்து போயிருந்தாள்.