நிமிடங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் யுகம் நான்

நிமிடங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் யுகம் நான்

எதையும் லெகுவாக எட்டிவிடும் தூரங்கள், சுவர்களுக்கு அடுத்தே இருந்தன, ஒட்டிக்கொண்ட விரல்களுக்கு மேலேறும் உறுதியில்லை, வேவு பார்க்கும் விழிகள் ஏதும் உள்ளனவா என்று திரும்பிப்பார்க்கவுமில்லை. இன்னும் அந்த அரக்குநிற சுவரில் தான் பின் பக்கமாக சாய்ந்துகொண்டிருக்கிறேன்.

கோப்பில் சரிவர இணைக்கப்படாத தாட்களின் கனம், எப்போதுவேண்டுமானாலும் நழுவக்கூடும், அதற்கு முன்னால் காற்றிலோ, ஆகாயத்திலோ அதை பறக்கவிடவேண்டும், ஏதோ ஒருவிழி என்னை பார்க்கின்ற முன்னே பறக்கும் நிறத்தாட்களுக்கு நடுவில் அற்பம் மறைந்துகொள்ளலாம்

எல்லா சந்திப்புகளும் இப்படியேதான் நடக்கின்றன, யாரோ என்னை தேடுவதும், அவர்களுக்குப்பின்னால்
நான் தொடர்வதும், அருகாமையில் ஒளிந்துவிட்டு, என் இன்மை அவர்களை கலங்க செயகிறதா என்று பார்த்ததும், அதற்குமேல் அவர்களை நெருங்க கால்கள் முன் வருவதில்லை. அழுகையுடனோ கோபத்துடனோ திரும்புகிறவர்களிடமிருந்து மாறி ஒளிந்தாகவேண்டும்

தூண்களில்லாத என் மனம் போல், வெறுமை விரிந்த தாழ்வாரத்தில் ஒளிவை எங்கே தேடுவேன், இந்த காலடி சத்தத்தின் எதிரொலிகட்தான் எத்தனை குரூரம்.

அழகான எஸ்கலேட்டரின் கைப்பிடிகளை எனக்குப் பிடித்தமானவரின் கைரேகைகள் தழுவி போகின்றன, முகப்பில் யாருமில்லை, வேறொரு ரேகைகளை அதன்மேல் பதியவிடக் கூடாது, அவர்களுடைய பிரங்ஞைக்கு அகப்படாமல் அந்த ரேகை அழிக்க முனைகிறேன்

காட்சிக்கு வந்துபோகும் சில முகங்களை, மலர்களுக்கு மறைவிலோ, லைப்ரரியில் புத்தகங்களின் மறைவிலோ இருத்திக் காணவே அதிகம் விழைகிறேன், அந்த விழிகள் மலர்களிடமோ, புத்தகங்களிடமோ விலைப்போகும்போது, அவைகளை ரசித்தவாறே கடந்துவிடுகிறேன்

எதேர்ச்சையாக மோதிச்செல்லும் பழக்கமான பார்வை, என்னிடம் எதையோ கேட்கவருகிறதாகவே தோன்றுகிறது, கேள்வி பார்வையினுடையதா, என் எண்ணத்தினுடையதா என்றுதான்
தெரியவில்லை.கேள்விகள் மறையும்வரை அந்த பார்வையும் மறைவதாயில்லை

""சரியாக நினைவிலில்லை, ஏதோவொரு புதுவருடத்தின் முதல் நொடியில், ஹரிக்கேன் விளக்குகளின் வெளிச்சங்களுக்கு மத்தியில் சராசரியாக சேலைக்கட்டிப்பழகிவிட்டு ""இப்போ அக்சப்ட் பண்றியா நான் பெரிய பொண்ணாகிட்டேன்னு"" என்று அவள் சொல்லும்போது மணிக்கணக்காக ஏற்படுகிற சிலிர்ப்பிலிருந்து,, இன்றெல்லாம், இதைப்போன்று எதிலும் இலயித்திருக்காமலேயே மீச்சுலபமாக அமுக்கி ரசித்துச்செல்லும் பக்குவத்தை எனக்கு உணர்த்தி போயிருக்கிறது காலம்

காக்கையின் கரைதல், அதிகக்கால ஜாகிங்கில், கையசைத்துக்கடக்கும் பெயர்த்தெரியாத நபர்கள், நான்கைந்துக்கு மேற்பட்ட காதல் , குயில்களின் குக்கூ, எப்போதாவது கடந்துபோகும் ஒரு வாகனத்தின் மிதம் மிஞ்சாத காற்றொலிப்பான் சத்தம், பஞ்சுமிட்டாய், சோன் பப்படி, ஐஸ்க்ரீம் விற்பவனின் சிறுமணியோசை, அருகாமையிலில்லாமல் எங்கிருந்து வருகிறதோ என்றறியாமல், முன்கதவு திறக்கப்பட்ட ஏதோ சில வீடுகளிலிருந்து கேட்கும் சீரியல் அலைவரிசை, குழந்தைகளுக்கு புல்லாங்குழல் விற்பவனின் அரைகுறை ராகம், மாலைப்பூக்களின் வாசனை, ஆளில்லாத பூங்காக்களில், வெற்று நாற்காலியிடம் மௌனம் பேசும் உணர்வு, எத்தனை அழகானது""" .

இப்படியெல்லாமென அதிகம் வாழ்ந்துவிட்டேன்

எண்ண ஓட்டங்களை மறக்கவே, இரவில் மெட்ரோ ரயிலில் கடைநிலை தரிப்புவரை பயணித்துவிட்டு திரும்புகிறேன், நீண்ட வேகன்களில், ஒன்றிரண்டு பேருக்கு மேற்பட்டோர் புலப்படமாட்டார்கள், அவர்களும், அவர்களுக்கான உலகமும் மனிதர்களிடமிருந்து அப்பாற்பட்டிருக்கும். அங்கிருப்போரின் காத்திருப்புகள் எல்லாம் மரநிழல்களிலிருந்து விலகி அதிக நாட்கள் ஆகியிருக்கலாம், சில நேரம் எனக்கும்
அப்படித்தானோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. உம்மென்றிருக்கும் உதடுகள் விரிய அங்கே அறிமுகம் யாருமில்லை. அந்த சூழலும் அமைதியும்தான் என்னை ஆட்கொள்ளுவதை ஏற்கிறேன். வேறு எதனிடமுமில்லாமல், அதற்கென்றே என்னை வளைந்துகொடுக்கிறேன்,
இதுவரை தாண்டிவந்த எதையுமே யோசிக்கவிடாமலிருக்கும் அற்பநேரம் இது. இதை முழுமையாக்கும் மீதி நேரங்களை அலசவேண்டும் இனி.

காரை, மிதமான வேகத்தில் செலுத்தி, நள்ளிரவில், உயரமான பாலத்தின் நீளவாக்கில் நடுவில், ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு, ஜன்னலைத் திறந்து ஒரு சிகரெட் பிடிப்பதும், இரண்டுசிப் காக்பர்ன் டின் வைன் சுவைப்பதும், அங்கே இறங்கி பாதசாரி வாக்வேயிலிருந்து எதையோ வெறித்துக் கொண்டிருப்பதும்
வழக்கத்திற்கு மாறாக சோம்பல் முறிக்கையில் தொண்டையால் எழுப்பப்படும் துடிக்குரல் எந்த எல்லைவரை டிராவல் செய்திருக்கும் என்றே தெரியாமல் இருப்பதும் என சென்ற இடமெல்லாம் ஒரு நகரத்தை விழுங்கியிருப்பேன்.

மேலுமான தனிமைக்கு என்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன்

தரவுகளிலிருந்தோ, வேட்கைகளிலிருந்தோ
தப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்

தடவிப்பார்த்ததில், ரியால்களுக்கிடையே ஒரு ஐந்துரூபாய் இந்திய நாணயம் இருந்தது

பூவாத்தலையா போட்டுப்பார்க்கிறேன்

"நிமிடங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் யுகம் நான்"

அனுசரன்

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் (3-Aug-22, 11:04 pm)
பார்வை : 131

மேலே