39ஆன்மீக வழியில் அமைதி
அத்தியாயம் – 39
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
மனிதன் ஆன்மீக வழியில் அமைதி காண வேண்டுமானால் உலகில் சத்தியம் அசத்தியம் எது என்பதைப்பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தூரத்தில் கிடக்கும் கயிறை சில நேரங்களில் நாம் பார்த்துவிட்டு, பாம்பு என்று மனதில் நினைத்துகொண்டு பயந்து விடுகிறோம், அதன் அருகிலே செல்வதற்குகூட பயந்துகொண்டு நின்று விடுகிறோம். அந்தக் கயிற்றை அருகில் இருந்து பார்த்துவிட்டு வந்தவன் கயிறு என்று நம்மிடம் கூறியதற்குப் பிறகு அல்லது நாம் அருகில் சென்று பார்த்தபின்பு அது பாம்பு அல்ல கயிறு என்று முடிவுக்கு வந்து விடுகிறோம். அதுபோல்தான் கயிறு என்பது சத்தியம், கயிற்றினை பாம்பு என்று நாம் நினைத்து பயந்து கொண்டு இருந்தது அசத்தியம் அல்லது நித்யா ஆகும்.
விவேக அறிவு மூலம் சத்தியம் அசத்தியம் எது என்பதை அறிந்து கொள்ள முடியும். விவேக அறிவு என்பது கயிறா, பாம்பா என்பதை உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது போன்றதாகும். உலகில் காணப்படும் இன்பங்கள் எல்லாம் சத்தியமானது நிரந்தரமானது என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதில் மனிதன் மதி மயங்கிக் கிடக்கிறான். உலகில் காணும் இன்பங்ககளை மனிதன் மகிழ்ச்சியாக நன்கு அனுபவவிக்கிறான். அவ்வாறு அனுபவிக்கும்போது சில நேரங்களில் அவன் துன்பப்படும்போதுதான் அவன் காணும் அல்லது அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் நிரந்தரம் அல்ல என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறான். அதேபோல் உலகில் காணும் துன்பங்களும் நிரந்தரம் அல்ல. துன்பங்கள் நிரந்தரம் அல்ல என்பதை மனிதன் துன்பத்திலிருந்து விடுதலை அடைந்து இன்பத்தை அனுபவவிக்கும்போது அவன் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆன்மீக நோக்கில் சிந்தித்துப் பார்த்தால் ஆத்மா என்பது நிரந்தரம். ஆத்மா என்பது சத்தியமானது ஆகும். ஆத்மா என்பது எது? என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதனை ‘நான்‘ என்ற சொல்வதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். ‘நான்’ என்று நாம் சொல்வது நமது உடலை மட்டும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அதனை ஆன்மீக வழியில் சிந்தித்துப் பாருங்கள். ‘நான்’ என்பது நமது உடலில் இருக்கும் உயிர் அல்லது ஆத்மா என்பதை புரிந்து கொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக ராஜா என்ற பெயரில் ஒருவன் இருக்கிறான் அவன் இறந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பேச்சு வழக்கில் ராஜாவை எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை. பாடியை (இறந்த உடல்) எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்றுதான் கேட்பார்கள். ராஜாவின் உடலில் உயிர் இருக்கும்வரை ராஜா என்று அவனை அழைக்கிறோம். உடலை விட்டு உயிர் அல்லது ஆத்மா பிரியும்போது ராஜா என்ற பெயரும் மரியாதையும் போய் விடுகிறது. இதிலிருந்து ஆன்மீக வழியில் சிந்தித்துப் பார்க்கும்போது உடல் என்பது ஆத்மா அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
நாம் காலை முதல் இரவு படுப்பதற்குப் போகும்வரை உலகில் அதிகமாக கூறும் சொல் இந்த ‘நான்’ என்ற சொல்லாகும். அடுத்து அதிகமாக சொல்லும் சொல் ‘என்னால்’, ‘என்னுடையது’ என்ற சொற்கள் ஆகும். பொதுவாக நாம் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது அதனைப்பற்றி நம்மை அறியாமல் மனதில் நினைத்துக் கொண்டபிறகுதான் அதனைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக நான் படித்துக் கொண்டிருக்கிறேன், நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். இதில் ‘நான்’ என்ற சொல்லின் பொருள் இங்கு உடலை மட்டும் எண்ணிக்கொண்டு சொல்கிறோம்.
இந்த ‘நான்’ என்ற பொருள் தரக்கூடிய மற்றொரு சொல் ‘என்னுடையது’ ‘என்னால்’ என்பது ஆகும். எடுத்துக்காட்டாக இந்த நீலக்கலர் பேனா என்னுடையது. இந்தப் படம் என்னால் வரையப்பட்டது. ‘என்னால்’, ‘என்னுடையது’ என்ற சொற்களும் ‘நான்’ என்ற பொருள் தரக்கூடியதுதான். சில இடங்களில் இந்த ‘நான்’ என்பதைப் பயன்படுத்த முடியாது. ‘நான்’ என்ற கூறும் சொல் நம் மனதில் நினைத்து கொண்டு, சொல்வது, பேசுவது, இந்த உடலை நினைத்துக்கொண்டுதான் சொல்கிறோம். அதேபோல் என்னால், என்னுடையது என்று கூறுவதும் நம் உடலை மனதில் நினைத்துக்கொண்டுதான் கூறுகிறோம். நான் என்பது நமது உடல் என்ற பொருள் தரக்கூடிய சொல்தானே என்று எல்லா இடங்களிலும் இந்த ’நான்’ என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தினால், அல்லது நினைத்துப் பார்க்கும்போது அது நகைச்சுவையாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக நாம் உடல்நலக்குறைவு காரணமாக டாக்டரை சென்று பார்க்கிறோம். டாக்டர் நோயாளியிடம் உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது என்று கேட்பார். இந்த இடத்திலும் நான் என்ற சொல் உடல் என்ற பொருளைத்தான் கொடுக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவரிடம் ‘நான்’ (உடல்) நலமில்லாமல் இருக்கிறது என்று கூறினால் அந்த டாக்டர் சிரித்துக்கொண்டே என்ன சொல்வார் என்பதை நினைத்துப் பாருங்கள். உலகப் பார்வையில் ‘நான்’ என்பதை உடலைக் குறிக்கும். அது மருத்துவருக்குப் புரிந்து கொள்ள முடியமா? எனவே ‘நான்’ என்ற சொல்லை இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்துவதற்கு அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அறிவுபூர்வமாக அந்தச் சொல்லை பயன்படுத்த வேண்டும். இந்த ‘நான்’ என்ற சொல் மனம், அறிவு மற்றும் உடல் என்ற மூன்று நிலைகளிலும் இருந்துகொண்டு பொருள் கொடுக்கக் கூடியது.
ஆன்மீக வழியில் எளிதில் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆத்மா என்பது ‘நான்’ என்ற சொல்லின் பொருள் ஆகும். நான் என்ற சொல் அறிவுபூர்வமான சொல் ஆகும். அதேபோன்று ‘நான்’ என்பது உணர்வு பூர்வமான சொல் ஆகும். நான் என்ற சொல்லின் பொருள் மற்றொரு இடத்தில் மனதையும் குறிக்கும். எப்படி என்றால் நான் என்று நாம் கூறும்போது ‘நான்’ என்பதை நினைப்பது முதலில் நம் மனம்தான் என்பதை இந்த இடத்தில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஆத்மா என்பது உடல், மனம், அறிவு என்ற மூன்று நிலைகளிலும் செயல்படுகிறது. அதாவது ஆத்மா ஒவ்வொரு மனிதனிடமும் மனம், அறிவு மற்றும் உடல் என மூன்று நிலைகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நான் படித்துக் கொண்டு இருக்கிறேன் என்பதில் நான் என்ற சொல் உடலைக் குறிக்கிறது. நாம் படித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் உங்களிடம் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன அவரிடம் கூறுவோம். நான் படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றுதான் கூறுவோம். இந்த இடத்தில் ‘நான்’ என்ற சொல் நமது மனதில் தோன்றியபின்தான் அவரிடம் ‘நான்’ என்ற சொல்லைப் பயன்படுத்திக் கூறுகிறோம். இந்த இடத்தில் சிந்தித்துப் பார்த்தால் ‘நான்’ என்ற சொல் நம் மனதாக செயல்படுகிறது. நாம் படித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் உங்களிடம் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் நான் படித்துக் கொண்டு இருக்கிறேன் என்பதில் படிப்பது என்ற செயலை கூறும்போது இந்த இடத்தில் அறிவாக ‘நான்’ என்ற சொல் செயல்படுகிறது.
எது உண்மையான நான்? நான் அல்லாதது என்ன? என்று சிந்தித்துப் பார்த்தால் ஆத்மா என்பது ‘நான்’ என்பதற்கு ஆன்மீக நோக்கில் சரியான சொல்லாகும். உண்மையின் தத்துவம் ஆத்மா ஆகும். உண்மைக்கு வேறுபட்டுக் காணப்படும் பொருள் தரக்கூடிய சொற்களெல்லாம் அனாத்மா ஆகும். அதாவது அனாத்மா என்பது எளிதில் புரிந்து கொள்ள வேண்டுமானால் அசத்தியம் என்பதாகும். நமது ஆத்மாவுக்கு எப்போதும் அழிவில்லை. ஆத்மா என்பது நிரந்தரமானது சத்தியமானது அனாத்மாவுக்கு அழிவு உண்டு. அது நிரந்தரமானதல்ல. ஆத்மா எது அனாத்மா எது என்பதை அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு உணர்ந்து கொள்ள வேண்டுமானால் ஆன்மீக வழியில் சென்றால்தான் அதனைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
உலகில் நாம் காணும் இன்ப துன்பங்கள் நிரந்தரம் அல்ல என்ற நிலைக்கு நமது மனம் பக்குவப்பட வேண்டும். அவ்வாறு மனம் பக்குவப்பட்டு விட்டால் நாம் ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு புரிந்துகொள்வதற்கு ஆன்மீக வழியில் நெருங்கி விட்டோம் என்பதை உணரலாம். ஒருவன் வியாபாரத்தில் ஈடுபட்டு அதில் எதிர்பாராதவிதமாக அதிகமாக லாபம் அடைந்து கார், பங்களா தோப்பு என்று அளவுக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறான். அவன் கவலையில்லாமல் இன்பத்தில் மிதந்து கொண்டிருக்கிறான். அவ்வாறு அவன் இன்பங்களில் மிதந்து அனுபவவித்துக் கொண்டிருக்கும்போது, நாம் அடைந்துள்ள இந்த இன்பங்கள்தான் வாழ்க்கையில் நிரந்தரமானது என்று எண்ணிக்கொண்டு இன்பத்தை நன்கு அனுபவவிக்கிறோம்.
வியாபாரத்தில் அவன் எதிர்பாராதவிதமாக பெருத்த நஷ்டம் அடைந்து ஈட்டிய கார், பங்களா தோப்பு அனைத்தையும் இழந்து துன்பத்தில் மூழ்கி விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் அப்போது மனம் வருந்தி வாழ்க்கையில் விரக்தி நிலைக்கே சென்று விடுகிறான். அப்போதுதான் உலகில் அவன் துன்பம் என்பதையே உணர்கிறான். வியாபாரத்தில் லாபம் நஷ்டம் அடைந்து பொருள் நஷ்டம் அடைவது சகஜம் என்பதை உணர்ந்து மனம் தளராமல் இருக்க வேண்டும். நமது மனதை இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மனதை பக்குவ நிலைக்கு கொண்டு செல்லும்போது நாம் தேடும் விரும்பும் அமைதி இயல்பாக நமக்கு கிடைக்கும். (அமைதி தொடரும்)
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்