வாய்முன்ன தாக வலிப்பினும் போகாதே நாய்பின்ன தாகத் தகர் - பழமொழி நானூறு 156

நேரிசை வெண்பா

தன்னலி கிற்பான் தலைவரின் தானவற்குப்
பின்னலி வானைப் பெறல்வேண்டும் - என்னதூஉம்
வாய்முன்ன தாக வலிப்பினும் போகாதே
நாய்பின்ன தாகத் தகர். 156

- பழமொழி நானூறு

பொருளுரை:

எத்துணை வருந்தி வாய் முன்னதாகும்படி கட்டியிழுத்தாலும் ஆடு நாய் தன் பின்னே வர, முன்னே போதல் இல்லை; ஆதலால், தன்னை நலியவல்லவன் மீதூர்ந்து மேல்வரின் அவருக்குத் துணையாய் அவன் பின்னின்று தன்னை வருத்த வருபவனைத் தான் துணையாகப் பெறுதல் வேண்டும்.

கருத்து:

பகையிரண்டனுள் ஒன்றனைத் துணையாக்கிக் கொள்க என்றது இது.

விளக்கம்:

நாய் பின்னர் வர ஆடு முற்சேறல் இல்லையாதலால் துணையாயினானை நட்பாகக் கொள்ளவே பகைவர்கள் தன்மேல் வருதல் இலர் - 'நலிகிற்பான்' வினையெச்சமின்றிப் பெயராய் நின்றது.

தன்றுணை யின்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று! – 875 பகைத்திறம் தெரிதல் என்பது திருக்குறள்.

'வாய் முன்னதாக வலிப்பினும் போகாதே நாய் பின்னதாகத் தகர்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-22, 11:40 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே