காதலி--பிழையிலாக் கவிதை

பிழையிலாக் கவிதை நீயடி !
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

வாழ்வினில் ஒருமுறை
வந்திடும் புதுமையே /
தாழ்விலும் உயர்விலும்
தாங்கிடும் பொறுமையே !

சூழ்நிலை யாவினும்
சூழ்ந்திடும் இனிமையே/
ஆழ்கடல் சுழலென
அணைத்திடும் வலிமையே !

மாசிலாத் தமிழதன்
மாண்புறு கவிதை /
காசினி தன்னிலே
கண்கவர் எளிமையே!

குறிலினில் நெடிலினில்
குறுகிய ஒற்றினில்/
அறிவினில் தெளிவினில்
அழகியப் பாடலே!

அசைகளில் சீர்களில்
அணிகளில் தளைகளில் /
இசைந்திடும் எதுகையாய் இனித்திடும் மோனையே /

இலக்கண வரம்புகள்
யாவினும் அடங்கியே/
இலக்கிலே உயர்ந்திடும்
இமயமே சிகரமே !

மழையெனப் பொழிந்திடும்
மதுரமாம் தமிழிலே/
பிழையிலாக் கவிதையாய்ப்
பிறந்தவள் நீயடி!!

வழுவிலா மரபிலே
வந்தவள் உன்னையே/
தொழுதிடும் கரங்களால் துணையெனப் பற்றினேன் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (8-Aug-22, 11:23 am)
பார்வை : 112

மேலே