நானேது நீயேது நாதன்நடம் அஞ்செழுத்துத் தானேது - உண்மை விளக்கம் 2

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.

நேரிசை வெண்பா

ஆறாறு தத்துவமே(து) ஆணவமே(து) அன்றேதான்
மாறா வினையேது மற்றிவற்றின் - வேறாகா
நானேது நீயேது நாதன்நடம் அஞ்செழுத்துத்
தானேது தேசிகனே சாற்று. 2

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

முப்பத்தாறு தத்துவம் யாது? அநாதியே விட்டு நீங்காத ஆணவ மலம் யாது? வினை யாது? இம்மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டிருக்கும் என்னுடைய சொரூபம் யாது? உன்னுடைய சொரூபம் யாது?

பரமேசுவரனுடைய திருநடம் யாது? பஞ்சாட்சரத்தின் உண்மை யாது?

குருமூர்த்தியே நீ அருளவேண்டும்.

பதவுரை:

ஆறாறு தத்துவம் ஏது - முப்பத்தாறு தத்துவம் யாது,

அன்றே தான் மாறா ஆணவம் ஏது - அநாதியே விட்டு நீங்காத ஆணவ மலம் யாது,
வினை ஏது - வினை யாது,

மற்று இவற்றின் வேறாக நான் ஏது - இம்மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டிருக்கும் என்னுடைய சொரூபம் யாது,

நீ ஏது - உன்னுடைய சொரூபம் யாது, நாதன் நடம் (ஏது) - பரமேசுவரனுடைய திருநடம் யாது,

அஞ்செழுத்துத் தான் ஏது - பஞ்சாக்கரத்தின் உண்மை யாது,

தேசிகனே சாற்று - குருமூர்த்தியே நீ அருளவேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-22, 6:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே