தெள்ளியசீர் ஆகமங்கள் சொன்ன அடைவிலே உரைக்கக்கேள் - உண்மை விளக்கம் 3

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.

நேரிசை வெண்பா

உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உன்றனக்கு
வள்ளலரு ளாலன்று வாய்மலர்ந்து – தெள்ளியசீர்
ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த
யோகம் நிகழ்புதல்வா உற்று. 3

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

விளங்குகின்ற ஆனந்த யோகத்திலே (அடங்கி நிற்கும்) புதல்வனே! பரமசிவன் கருணையினாலே அநாதியே திருவாய் மலர்ந்தருளிய சிறந்த ஆகமங்களிலே யுள்ளபடி செவ்விய முறையாக உனக்கு இதனை யாஞ் சொல்ல நீ நன்கு உற்றுக் கவனித்துக் கேட்பாய்.

பதவுரை:

ஆனந்தயோகம் நிகழ் புதல்வா - விளங்குகின்ற ஆனந்த யோகத்திலே (அடங்கி நிற்கும்) புதல்வனே,

வள்ளல் அருளால் அன்று வாய்மலர்ந்து சொன்ன சீர் ஆகமங்கள் உள்ளபடி தெள்ளிய அடைவிலே - பரமசிவன் கருணையினாலே அநாதியே திருவாய் மலர்ந்தருளிய சிறந்த ஆகமங்களிலே யுள்ளபடி செவ்விய முறையாக,

உன்றனக்கு - உனக்கு, இத்தை உரைக்க உற்றுக்கேள் - இதனை யாஞ் சொல்ல நீ நன்கு கேட்பாய்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-22, 7:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே