40ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 40
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்

நாம் இன்பத்திலும் துன்பத்திலும் மனதை ஒரு நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று படிப்பது எளிது. அதனை மற்றவர்களுக்கு உபதேசிப்பது எளிது. மற்றவர்கள் கூற நாம் கேட்பது எளிதுதான். நமது மனதைக் கலங்காமல் ஒரு நிலையில் வைத்துக் கொள்வதற்கு ஆன்மிகம் பெரிதும் துணை புரிகிறது. நமது மனம் துன்பத்திலும் இன்பத்திலும் ஒரு நிலைக்கு சமநிலைக்கு மனபக்குவப்பட்டு விட்டால் அதன் மூலம் நாம் தேடும் விரும்பும் அமைதியைப் பெறுவதற்கு முடியும்

மனித வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் இன்பமும் துன்பமும் கலந்து வருவதுண்டு. மனிதன் தனக்கு வந்த இன்பத்தைக் கண்டவுடன் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது. அதேபோல் துன்பம் வந்தவுடன் மனம் கலங்கி விடுவதும் கூடாது. நாம் அடையும் இன்பத்திலும் துன்பத்திலும் மனம் ஒரு நிலையில் வைத்துக் கொள்வதே மன பக்குவ நிலையை நோக்கி நாம் செல்கிறோம் என்பதை உணர முடியும். இந்த மனபக்குவ நிலை அடைவதற்கு ஆன்மிகம் துணை புரிகிறது. மனபக்குவ நிலைக்கு ஆன்மீக வழியில் பயிற்சி பெற வேண்டும். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று ஆன்மீக வழியில் சிந்தித்தால் நமது மனம் பக்குவ நிலை அடைந்து விடும். அவ்வாறு நமது மனம் பக்குவ நிலையை அடையும்போது நம்மை அறியாமல் மனம் அமைதியில் ஆழ்ந்து விடும்.

பொதுவாக மனிதர்கள் அனைவரும் அமைதியை விரும்புவார்கள். உலக ஆசையை மனதிலிருந்து விட்டு விடுவதற்கு விரும்புவதில்லை. ஆசையே துன்பத்துக்கு முதல் காரணம் என்று புத்தர் போதித்துள்ளார். உலகில் நமது மனமும் உடலும் எவ்விதமெல்லாம் துன்பங்களுக்கு ஆளாகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்றவர்களால் நமக்கு வரக்கூடிய துன்பங்கள், நமது செயல்பாடுகளால் வரக்கூடிய துன்பங்கள் என்பதை பிரித்து அறிந்து நாம் செயல்பட வேண்டும். நமக்கு எந்த விதத்தில் துன்பங்கள் வரப்பெற்றாலும் அதனை நாம் தாங்கும் மனநிலைக்கு வருவதற்கு ஆன்மிகம் பெரிதும் துணை புரிகிறது.

யார் நம்மைத் துன்பப்படுத்தினாலும் அஞ்சாமல் மனம் கலங்காமல் இருந்து கொள்வதற்கு மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னா செய்தார்க்கும் இனியவை செய்து மனதை பக்குவ நிலைக்கு கொண்டு வரவேண்டும். பொறுமையுடன் அறிவுபூர்வமாக சிந்தித்து மற்றவர்கள் செய்யும் தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவது ஆண்மையாகும் என்று வடலூர் வள்ளலார் கூறியுள்ளார். இதனை நமது வாழ்வில் கடைபிடித்தால் மற்றவர்களால் வரக்கூடிய துன்பங்களில் இருந்து மனதளவில் விடுதலை கிடைக்கும்.

நமது வாழ்க்கை முறையை நன்கு ஆராய்ந்து மிகத் தவறானது என்பதை அறிந்து உணர்ந்து அதனை மாற்றி அமைப்பதற்கு தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி காண வேண்டும். இதனை நாம் வாழ்வில் ஆராய்ந்து கடைபிடித்தால் நமக்கு நாமே வரவழைத்துக் கொண்ட துன்பங்களில் இருந்து எளிதில் விடுபடுவதற்கு முடியும். பிறர் நமக்குச் செய்த தீமைகளை பெருந்தன்மையுடன் மன்னிக்கும் மனநிலைக்கு வர வேண்டும்.

இதனை திருவள்ளுவர்

“ இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல் “ (குறள் 314)

என்ற திருக்குறள் மூலம் நமக்கு வழி காட்டியுள்ளார். மற்றவர்களை குறை சொல்லாமல், நம் வாழ்வில் நாம் நடக்கும் வழியில் தவறு குற்றம் எதுவும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவ்வாறு செயல்படும்போது மனதளவில் உறுதியாக அமைதி கிடைக்கும். மற்றவர்களிடம் குறை காணாமல் இருப்பதற்கு ஆன்மிகம் நமக்கு வழி காட்டுகிறது.

பிறர் நமக்குச் செய்த தீமைகளை நாம் பொறுமையாக சம்பந்தப்பட்டவரிடம் சுட்டிக்காட்டி அவர் திருந்தும்படி முயற்சி செய்யலாம். அவர் நமக்குச் செய்த தவறை சுட்டிக்காட்டியும் அவர் உணர்ந்த பின்பும் திருந்தவில்லையானால், அதற்காக அவரை நாம் கடிந்து கொள்ளவோ, தண்டிக்கவோ வேண்டாம். அவரிடம் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாம் ஒதுங்கி விடுவது மிகவும் நல்லது. உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்தில் அன்புடன் இருப்பவர்கள் மனதில் அமைதி தானாக வந்து சேரும்.

ஞானிகள் நமது உடலை ஸ்தூல சரீரம், சூக்ம சரீரம் மற்றும் காரண சரீரம் என மூன்று பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர். ஸ்தூல சரீரம் என்பது நாம் கண்ணால் பார்த்துக் கொண்டு இருக்கும் சரீரம் ஆகும். நம் கண்ணுக்குத் தெரியாமல் நாம் உணர்ந்து கொள்ளகூடிய மனம்தான் சூக்ம சரீரம். இதனை நம் கண்களால் பார்க்க முடியாது. ஆனால் நம்மிடம் சூக்ம சரீரம் இருப்பதை உணர முடியும். எதனிடமிருந்து நமது உடல் தோன்றியதோ, நமது மனம் எதிலிருந்து தோன்றியதோ அதுவே காரண சரீரம் ஆகும். ஞானிகள் குறிப்பிட்ட இந்த மூன்றுவிதமான சரீரங்களினால்தான் மனிதன் இன்ப துன்பங்களை அனுபவவிக்கிறான் என்று கூறியுள்ளார்கள்.

மனிதனுக்கு மூன்று விதமான அவஸ்தைகள் உள்ளன. அவை விழிப்பு நிலை, கனவு நிலை, மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகும். விழிப்பு நிலை என்பது நாம் உலக விசயங்களில் ஈடுபட்டு இருக்கும்போது உள்ள நிலை ஆகும். நாம் விழிப்பு நிலையில் உள்ளது போல் எண்ணங்களின் அலைகள் மனதில் தோன்றி உண்மை நிகழ்வுகள் போன்று இரவில் தூங்கும்போது உணரக்கூடிய கனவு காணும் நிலையாகும். கனவு நிலையில் உடலும் நமது ஐம்புலன்களும் செயல்படாமல் அமைதியாக இருக்கும். எடுத்துக்காட்டாக நாம் கனவு காணும்போது நமது கண்கள் மூடிய நிலையில் இருக்கும். ஆனால் கனவில் வரக்கூடிய காட்சிகளை நம் கண்களால் பார்த்துக் கொண்டிருப்போம். இதேபோன்றுதான் கனவில் உலக விசயங்களில் நமது எண்ணங்கள் ஐம்புலன்கள் செயல்படுவதுபோல் சுழன்று கொண்டே இருக்கும்.

இரவில் தூங்கும்போது கனவுநிலையில் இந்த உலகில் நாம் காணாத அதிசயக் காட்சிகள்கூட வரும். எடுத்துக்காட்டாக நாம் பறப்பது போல், பாலைவனத்தில் ஓடுவதுபோல் இன்னும் மனம் மகிழ்ச்சி தரக்கூடிய இயற்கை காட்சிகள் தோன்றும். இவையெல்லாம் உண்மையில் நிகழ்வதுபோல் தோன்றும். ஆனால் உண்மையில் கனவில் தோன்றிய நிகழ்வுகள் ஏதும் அப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதில்லை. நம்மில் பலருக்கு பகலில் தூங்கும்போதுகூட கனவுகள் காண்பது உண்டு. பகல் கனவு பலிதம் ஆவதில்லை என்று கூறுவார்கள்.

ஆழ்ந்த உறக்க நிலை என்பது நமது மனம், மனதில் உருவாகும் எண்ணங்கள், மற்றும் ஐம்புலன்கள் அனைத்தும் அடங்கி இருப்பது. அதாவது தூங்கும்போது அனைத்து உணர்வுகளும் ஐம்புலன்களும் அடங்கி அமைதி நிலையில் இருப்பது ஆழ்ந்த உறக்கநிலை எனப்படும். ஆழ்ந்த உறக்க நிலையை தற்காலிக இறப்பு என்றுகூட கூறலாம். ஆழ்ந்த உறக்கத்தில் உலக நினைவுகள் இல்லாத நிலையாகும். அது ஒரு ஆனந்த நிலை என்று கூறலாம். ஆழ்ந்த உறக்க நிலையில் நாம் விரும்பும் தேடும் அமைதி கிடைக்கும்.

ஆழ்ந்த உறக்க நிலை அனைவருக்கும் வரும் என்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக ஒருவன் உலகில் பொருள் சேர்ப்பதிலேயே அல்லும் பகலும் அவனது மனம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அவனுக்கு எப்படி ஆழ்ந்த உறக்க நிலை கிடைக்கும். தூக்கத்தில் இருக்கும்போதுகூட பொருளுக்காக அவன் மனம் அலைந்து கொண்டுதான் இருக்கும். ஆழ்ந்த உறக்கநிலை வருவதற்கு ஆன்மீக பயிற்சியில் மனம் ஈடுபட வேண்டும். நமது மனம் பக்குவ நிலைக்கு வர வேண்டும். நமக்கு மனம் பக்குவ நிலைக்கு வரும்போது ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கலாம். ஆழ்ந்த உறக்க நிலையை ஆன்மா அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சத்சித்தியானந்தம் என்பதே ஆத்மா. சத் என்றால் நித்தியம், சித் என்றால் அறிவு, ஆனந்தம் என்பது நிறைவு ஆகும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (11-Aug-22, 9:48 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 65

மேலே