வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து – நாலடியார் 269
இன்னிசை வெண்பா
பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து 269 நன்னெறியில் செல்வம், நாலடியார்
பொருளுரை:
பொன்னின்நிறத்தையுடைய உயர்ந்த செந்நெல் என்னும் பயிர் மேல்மூடிய தாளுடன் உள்ளிருக்குங் கருவும் வாட, மின்னல் மிளிரும் மேகம் கடலுள்ளும் நீர்சொரிந்து பெய்யும்; அறியாமையுடைய புன்மக்கள் சிறந்த செல்வத்தை அடைந்தால் அவர் கொடைத்திறமும் அதுபோன்ற இயல்பினதே ஆகும்.
கான்று - நீர்சொரிந்து, வண்மை - கொடைத்திறம்
கருத்து:
புன்மக்கள் செல்வம் தேவையற்றோர்க்கு எல்லாங் கொடுக்கும்படி நேர்ந்து வீணாகச் செலவழியும்
விளக்கம்:
கடலுள்ளும் என்றார் களருள்ளுமென்றற்கு; மேகம் பயிரின் மேற்செல்லும் போது நீரை வெளிப்படுத்தாமற் கடலுலிங் களரிலுஞ் செல்லுங்கால் வீணாய் வெளிப்படுத்துதலின், உகுக்கும் என்னாது கான்றுகுக்கும் என்றார்; கான்றல் – வெளிப்படுத்துதல்;
வெண்மை அறியாமையுணர்த்திற்று; பெய்தற்குரிய தகுதியான இடத்தில் பெய்யாமற் காற்றால் ஈர்ந்து அலைப்புண்ட விடத்தே மேகம் நீரைக் கக்கிவிடுதலின், அவ்வாறே உதவுதற்குரிய தகுதியாளர் இன்னார் என்றறியாமல் தம்மை வன்கண்மை செய்யுந் தறுகணாளர்க்கும் வீணர்க்குமே கயவர் தமது செல்வத்தை உகுத்து விடுவாரென்றார்,‘வண்மையும் அன்ன தகைத்து' என்றார்.