என் அன்னை

அன்னமிட்ட கை
-----------------------

ஆக்கிவைத்த சுடச்சுட சாதத்தில்
கொத்தவரைக் காய் வற்றல் குழம்பு சேர்த்து
உருக்கிய மணக்கும் பசுநெய்யும் சேர்த்து
பக்குவமாய்க் கலந்து பொங்கும் அன்புடன்
உருளை பொரியலுடன் கையில் கவளங்களாய்
இட்டு ஊட்டிவிட்டாள் குழம்பின் மணம்
வாயில் இருக்கையிலேயே உறியில்
தோய்த்து வைத்த பசுப்பால் தயிருடன்
கலந்த தயிர் சாதமும் அத்துடன்
தொட்டுக் கொள்ள சுவைத்தரும் இஞ்சி
மாங்காய் ஊறுகாயும் சேர்த்து கையில்
தயிர் சாதக காவலர்கள் இட்டு ஊட்டிவிட்டாள்


என்னை ஆளாக்கியவள்
என் அன்னை
--------------------------------------

வயிறார அமுதமாம் அன்னம் ஊட்டியபின்
பள்ளிக்கு அனுப்பிவைத்தாள் நாள் ஆசானிடம்
நல்ல பாடங்கள் எல்லாம் கசடற கற்க
பின்னர் அதற்கு தக நிற்க
வீட்டிலும் என் அன்னை எனக்கு
ஒவ்வைத் தமிழும் பாரதிக் கவிதையும்
இறைவன் நாம தோத்திர பாடல்களும்
தினமும் தவறாது எனக்கு ஓதிவந்தாள்
இன்னும் உறங்கும் முன் இரவில்
எனக்கு வாழ்வில் நல்லதைக் காட்டும்
புராண இதிகாச கதைகளும் தவராது
சொல்லி வளர்த்தாள் என்னை

நான் இன்று யார்
------------------------------
இன்று 'மகானுபாவன்' 'குணாதிலகம் '
என்றெல்லாம் சான்றோர் என்னை புகழ்ந்து
பேச வைத்தாள் எந்தெய்வம் என் அன்னை
எத்தனைப் பிறவி எடுத்தாலும் அன்னையே
உன்னை நான் மறவேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-22, 10:06 am)
Tanglish : en annai
பார்வை : 810

மேலே