நண்பனாய் இரு

நண்பனாய் இரு..!

இளவரசி முகம் பார்த்து பேசினாள், மாறனால் அவள் முகம் பார்த்து கேட்க முடியவில்லை. அவன் உள்ளமும் உடலும் நடுங்கி கொண்டிருந்தன. அவள் சொன்ன விசயத்தை கேட்டு, ஆனால் அவள்..!
இங்க பாரு மாறா ஒண்ணை நல்லா புரிஞ்சுக்கோ, வாழ்க்கையில வெற்றிங்கறது நம்ம தேவைகளை எந்த அளவுக்கு நிறைவேத்தியிருக்கறோம் அப்படீங்கறதுலதான் இருக்கு.
அப்ப நான் உனக்கு தேவையில்லையா?
நீ தேவையில்லைன்னு நான் சொன்னேனா, நண்பனா இரு, புருசனாத்தான் இருக்கணும்னு ஏன் நினைக்கறே?
நீ பேசறதை பார்த்தா நம்ம வீட்டுல பேசி வச்சது நடக்காது அப்படீங்கறமாதிரி தெரியுது. நான் உன்னையத்தான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படீங்கற லட்சியத்துல இருந்தேன்.
மறுபடி சொல்றேன், வாழ்க்கையில லட்சியம் வேற தேவைகள் வேற, இப்ப எனக்கு தேவைகள் மாறுபடுது, அதைய நோக்கித்தான் என் பயணம் போகும், போகணும். நீ எனக்கு நண்பனா உதவி பண்ணனும், கண்டிப்பா பண்ணுவே..உறுதியாய் சொன்னாள்.
அதற்கு மேல் மாறனால் எதுவும் பேசமுடியவில்லை, அவள் இனி என்ன சொன்னாலும் கேட்க போவதில்லை. இது இரு வீட்டார் எப்பொழுதோ பேசி வைத்த சம்பந்தம். ஆனால் இளவரசியின் குடும்பத்தில் இப்படியாகும் என்று யாரும் நினைக்கவில்லை. அவளின் அப்பா ஒரு நாள் படுக்கப்போனவர் எழவே இல்லை. மாரடைப்பு என்றார்கள்.
இவளுக்கு பின் மூன்று பேர், அதில் இரண்டு பெண்கள், கடைசி பையன். இதோடு இவள் கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரப்போகிறவள்.
தொழில், வருமானம் ஒன்றுமே இல்லை, அவர்களிடம். இருப்பதற்கு ஒரு வீடு அவ்வளவுதான்.அவள் அப்பாவே ஒரு மில்லில் வேலை பார்த்து கொண்டிருந்தவர். அவர் இறப்பிற்கு மில் கொடுத்திருந்த கொஞ்சம் தொகைதான் அவர்கள் கையிருப்பு.
மாறன் கல்லூரி படிப்பு முடித்து இரண்டு வருடங்களாக கல்யாணத்துக்கு காத்திருக்கிறான். இவள் அப்பா இறப்பதற்கு முன் இவன் அவர்கள் வீட்டில்தான் சுற்றி கொண்டிருப்பான். அவர்களுக்கு உதவியும் செய்து கொண்டிருப்பான். கல்யாணம் ஆகாமலேயே, வீட்டோடு மாப்பிள்ளையாகிட்டான் என்று அப்பொழுதே கேலி பேசுவார்கள். கிடைக்கும் வேலைக்கு போகவேண்டுமே, என்று ஒரு கடையில் வேலை செய்கிறான். நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறான்.
மாறன் இவளின் முடிவை கேட்டு தளர்ந்த நடையுடன் போவதை பார்த்து கொண்டிருந்தாள் இளவரசி.
யாரோ தோளை தொட சட்டென்று பழைய கனவுகளில் இருந்து மீண்டான் மாறன்.
ஹாஸ்பிடல்ல இருந்து கொண்டாந்துட்டாங்க, வாங்க கடைசியா முகத்தை பார்த்துடலாம், மனைவி அவன் தோளை தொட்டு செல்ல, எழுந்து உள்புறமாக நடந்தான்.
அவள் உடலை சுற்றி அழுகுரல்கள். வீடு நல்ல விசாலமாய் இருந்தது தரையில் மார்பில் போடப்பட்டு எங்கும் பணக்காரத்தனத்துடன் இருந்தது முன்னறையின் நடுவில் இவள் உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது.
அருகில் சென்று அவள் முகத்தை பார்த்தான். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஓடியிருக்கும். அன்று அவளிடம் பேசி விட்டு திரும்பியவன், மறு நாளே தன் துணி மணிகளை எடுத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பினான்.
அருகில் இருந்தால் ஒரு வேளை இவளை பார்க்க வேண்டியிருக்குமோ என்னும் பயத்தில் தொலை தூரம் போனான். எங்கு போனாலும் ஊரை பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தது.
இவனுக்கு கல்யாணம் ஆன போது கூட இரண்டு மூன்று நாட்களில் கல்யாணத்தை முடித்து விடுமுறை இல்லை என்று மனைவியை சென்னைக்கு கூப்பி போய் விட்டான். அதன் பின் அவன் அதிகமாக வரவில்லை. அப்படி வந்தாலும் ஒரு நாள் தங்கி மறு நாள் கிளம்பிவிடுவான். அம்மா கூட திட்டுவாள், என்னடா காலுல சக்கரத்தை கட்டிட்டு வந்துட்டியா என்று. இவனது வைராக்கியமே அவளது முகத்தை மறுபடி பார்க்கவே கூடாது என்பதுதான். நண்பர்கள் கூட கேலி செய்தார்கள் “ஏண்டா அவளுக்கு பயந்து நீ ஓடி ஒளியறதை பார்த்தா வேடிக்கையா இருக்குடா”
இளவரசிக்கு பெரிய இடத்தில் கல்யாணம் ஆனது, மாப்பிள்ளை நான்கைந்து ஊர் தள்ளி பெருந்தன குடும்பம், எல்லாம் இவன் காதுகளுக்கு வர மனம் அவளை பழி வாங்க துடித்தது, ஆனாலும் தன்னை அடக்கிக்கொண்டு வாழ்க்கையின் மற்ற துயரங்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள ஆரம்பித்தான்.
இளவரசி இறந்து போயும் அவள் முகம் புன்னகையுடன் இருப்பது போல தோன்றியது. “பார்த்தியா உன்னைய வர வச்சுட்டேன்” அப்படி சொல்வது போல அவனுக்கு தோன்றியது. ஆரம்பத்தில் இவள் மருத்துவமனையில் இறந்து விட்டாள் என்னும் செய்தி கேள்விப்பட்டான். குழந்தைகள் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தான். இளவரசியின் வீட்டுக்கு போக கூடாது என்றுதான் இருந்தான்.ஆனால் அவள் இறந்த உடலை பெற்றவர்கள் வீட்டுக்குத்தான் கொண்டு போக வேண்டும் என்று இறப்பதற்கு முன்னால் பிடிவாதம் பிடித்தாதால் இங்கு கொண்டு வந்து விட்டார்கள்.
அம்மாதான் விரட்டினாள், போடா அந்த பொண்ணு அவ்வளவு வசதி வந்த பின்னாலும் நம்ம வீட்டுல வந்து நீச்ச தண்ணி குடிச்சுட்டுதான் போகும். அதைவிட இவன் மனைவிக்கு இளவர்சி சொந்தமாகிறாள். அதனால் அவளும் கட்டாயமாக போக வேண்டி இருக்கிறது. அவளுடன் இவனும் வந்தான்.
இளவரசியின் முகம் பார்த்து இவனுக்கு அழுகையோ சோகமோ வரவில்லை. மனைவி பின் புறம் இவன் தோளை தொட மெல்ல நகர்ந்து மற்றவர்களுக்கு வழி விட்டு வெளியே வந்தான். மனைவி அவனை கூட்டிக்கொண்டு சென்றாள்.
ஆயிற்று பத்திருபது நாட்கள் ஊர் வாசம், நாளை மனைவியை அழைத்து கொண்டு சென்னை கிளம்ப வேண்டும். இருந்த விடுமுறை நாட்களில் அவள் ஊருக்கும் சென்று குழந்தைகளை அங்கேயே விட்டு விட்டு இவளை மட்டும் கூட்டிக்கொண்டு அம்மா அப்பாவுடன் இருக்க வந்து விட்டான். நாளை மனைவி ஊருக்கு போய் குழந்தைகளை கூப்பிட்டு கொண்டு சென்னை கிளம்ப வேண்டும்.
வாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இவன் வெளியே வந்தான். நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் காரில் இருந்து இறங்கி இவனை நோக்கி வந்தார். கை கூப்பியவர் “மாறன்”
நான்தான் என்றான், நீங்க ..
நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இறந்து போனாங்களே இளவரசி அவங்களோட புருசன்.
இவன் மனம் திக்கென்றாலும் வாங்க வாங்க உள்ளே.. அழைத்தான்.
இல்லைங்க, நான் வரமுடியாது, இன்னைக்கு அவளுக்கு சாமி கும்பிடறோம், உங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு போறதுக்கு வந்திருக்கேன். போனதும் வந்துடலாம்.
மாறனுக்கு வியப்பாய் இருந்தாலும், ஒரு வித நடுக்கமும் இருந்தது. இது என்ன புது சிக்கல்? மனம் நினைத்தாலும் அனிச்சையாக சட்டையை மாட்டிக்கொண்டு மனைவியிடம் சொல்லி விட்டு அவருடன் காரில் ஏறினான்.
சாமியெல்லாம் கும்பிட்டு விட்டு “என் கூட கொஞ்சம் வாங்க” அவனை தனியாக தோட்டத்து பக்கம் அழைத்து சென்றார் இளவரசியின் கணவர். இவன் ஒரு வித பயம் கலந்த மனதுடனே அவருடன் சென்றார்.
தென்னந்தோப்பில் எதிரும் புதிருமாய் இருந்த கல்லில் உட்கார்ந்தவர் இப்படி உட்காருங்க அவனை உட்காரவைத்தவர் “நீங்க ரொம்ப பயந்த மாதிரி இருக்கறீங்க” சரியா சொல்லி சிரித்தவர், பயப்படாதீங்க இளவரசி கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களோட பழகனது, உங்க குடும்பமும், அவங்க குடும்பமும் சம்பந்தம் வச்சுக்க நினைச்சது எல்லாமே சொன்னா..
இத்தனை வருசம் இந்த குடும்பத்தை நல்லா கவனிச்சிகிட்டா, கடவுளுக்கு அது பொறுக்கலை, இந்த வியாதிய கொடுத்து கூட்டிகிட்டு போயிட்டான், கண் கலங்கியவர், சட்டென தன்னை சரியாக்கி கொண்டு உங்களுக்கு நல்லா தெரியும் அவங்க அப்பா திடீருன்னு இறந்து போனதால நிறைய கடன் ஆயிருந்தது. இதிய கட்ட முடியாம அவங்க குடும்பம் தத்தளிச்சிகிட்டு இருந்தது.
நான் அந்த நேரத்துல என் மனைவிய இழந்து கைக்குழந்தையோட தவிச்சுகிட்டு இருந்தேன். எல்லோரும் என்னை மறு கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க, அப்படி பார்த்துதான் இளவரசிய இரண்டாம் தாரமா கட்டிக்கிட்டேன். அவளை கல்யாணத்துக்கு பேசி முடிவு பண்ணுன மறு நாளே என் கிட்ட வந்து உங்களை அவ கல்யாணம் பண்ணிக்க நினைச்சதும், ஆனா இப்பா குடும்பம் இருக்கற நிலையில உங்களுக்கும் சரியான வேலை இல்லாம கஷ்டப்படறப்ப, இந்த கல்யாணத்துனால யாருக்கு நன்மை? அப்படீன்னு யோசிச்சு உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்ட தையும் சொன்னா.
அது மட்டுமில்லை, இவளுக்கு குழந்தை பிறந்துட்டா எங்க இந்த குழந்தைய கவனிக்காம போயிடுமோன்னு இந்த குழந்தைக்கு விவரம் வர்றவரைக்கும் நமக்கு அடுத்த குழந்தை வேண்டாம் அப்படீன்னு வைராக்கியமா இருந்தா. என் முதல் குழந்தைக்கு ஆறு வயசாகி ஓரளவுக்கு விவரம் வந்த பின்னாலதான் எங்களுக்கு ஒர் பையன் பிறந்தான்.
அப்பவே வாய் விட்டு ஒண்ணு கேட்டா, என்னைய பார்த்துக்கற மாதிரி என் குடும்பத்தை நீங்க பார்த்துக்கணும்னு. எனக்கு அப்ப புரியலை, இப்படி போயிடுவான்னு, அவர் கண்ணீர் விட்டு நின்றார்.
இதுவரை அவர் சொல்வதை பிரமிப்புடன் கேட்டு கொண்டிருந்த மாறன் சட்டென அவர் தோளை அணைத்து கொண்டான்.
எப்படியோ நானும் அவளோட குடும்பத்தை இதுவரைக்கும் காப்பாத்தி அவங்க தங்கச்சிகளை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி வச்சுட்டேன், பையனையும் படிக்க வச்சிருக்கேன். இனி அவங்க அவங்க முயற்சி பண்ணி முன்னுக்கு வந்தா போதும். அந்த அழுகையுடனேயே சொல்லி முடித்தார்.
“அப்பா” குரல் வர இருவரும் நிமிர்ந்தனர், எதிரே பத்து பனிரெண்டு வயது பெண் குழந்தையும் அருகில் ஆறேழு வயது பையனும், அங்க உங்களை தேடிகிட்டிருக்காங்க, நீங்க தோப்புக்கு வந்துட்டீங்க,
இவ என்னோட பொண்ணு, இவன் என்னோட பையன், இந்த அங்கிள் யாரு தெரியுமா? உங்கம்மாவோட பெஸ்ட் பிரண்டு. அவருக்கு உங்க பேரை சொல்லுங்க?
பரமேஸ்வரி, மாறன், அவர்கள் இருவரும் சொல்ல அதிர்ச்சியாய் நின்றான். என்ன திகைச்சு போயிட்டீங்க, இந்த பேரை நானே அவகிட்ட வற்புறுத்தி வைக்க சொன்னேன். ஏன்னா ஒரு நல்ல மனைவிய எனக்கு விட்டு கொடுத்து போனீங்க இல்லையா..!
உணர்ச்சிவசப்பட்டிருந்தான் மாறன் அவர்கள் மூவரையும் ஒரு சேர அணைத்து இல்லைங்க உங்க மூணு பேரையும் எனக்கு நண்பர்களாக்கிட்டு போனாங்க இல்லையா இளவரசி, அவங்களுக்கு நான் நன்றி சொல்றேன்.

அவ அப்பவே சொன்னா நண்பனா கண்டிப்பா நீ வருவேன்னு, அப்ப என்னால அதை புரிஞ்சிக்க முடியலை. இப்ப புரியுது. இனி நானும், என் குடும்பமும் அடிக்கடி
உங்களை பார்க்க வருவோம், நீங்களும் கண்டிப்பா வரணும், சொன்னவனுக்கு கண் கலங்கி இருந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Aug-22, 11:40 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : nanbanaai iru
பார்வை : 243

மேலே