எதிர்பார்த்தவள் இதயம்

மணமகளாய் அவள்
**** **** **** ****
அக்காவிற்கு இறுக்கமாகும்
சட்டைகளை உடுத்தப் பழக்கிய
அம்மாவின் சாதுர்யத்தில்
ஆரம்பமாகியது இரண்டாவதாய்
பிறந்தவளுக்கான எதிலும்
இரண்டாவது என்கிற தரப்படுத்தல்
*
இரண்டு வருடங்களுக்கு முந்தி
அவள் படித்தப் பாடப்புத்தகங்களப்
பத்திரப்படுத்திப் புதிய அட்டைப்போட்டுப் புதுப்புத்தகம்
என்று நம்பவைத்ததும்
அவள் பயன் படுத்திய
அனைத்தையும் இரண்டாவதாய்
பிறந்தவளுக்காய் ஒதுக்குவதுமான
வாழ்வில் புதியதைக் கேட்கும்
வாயில் பூட்டைப் போட்டுவிடும் வறுமையின் இயலாமைக் கரங்கள்.
*
பழக்கப்படுத்திப் பழக்கப்படுத்திப்
பழகிப்போகச் செய்த இந்த
இரண்டாவதற்கு ஒரு
முடிவு வராதா என்ற ஏக்கத்திற்கு
முற்றுப்புள்ளியிட்டதென்னவோ
அக்காவின் திருமணந்தான்..
*
புகுந்த வீட்டுக்குப் போனவளை
கண்ணீர்மல்க வழியனுப்பியக்
குடும்பத்தாருக்கு மத்தியில்
உள்ளுக்குள் மகிழ்ச்சிப்பொங்க வழியனுப்பிவைத்ததென்னவோ
இரண்டாமவளென்றாலதை
நம்பித்தானாக வேண்டும்
**
இனி இந்த வீட்டில்
நானே முதல்வள்
எனக்கே இனி எல்லாம் முதன்மை
இனி எனக்காகவும்
என் முற்றத்து மல்லிகை தன்
முதல் முகையை அவிழ்க்கும்
இனி எனக்கும்
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் வசந்தம் என்று
முதன்மைகளை எதிர்பார்த்து
மூன்றாண்டுகள் கழிந்து
முதன் முதலாகப்
பூச்சூடிக் கொள்வதற்காக
இதோ அவள்
மணவரையில் அமர்ந்துவிட்டாள்
பிரசவத்தில் குழந்தை உயிரைக்
காப்பாற்ற தன்னுயிரைத்
துறந்த அக்கா புருசனுக்கு
இரண்டாந்தாரமாக..
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Aug-22, 2:15 am)
பார்வை : 186

மேலே