குடும்பம் ஒரு அழகிய கூடு
குடும்பம் ஒரு அழகிய கூடு
என் பெயர் சம்யுக்தா.நான் ஒரு அரசாங்க அதிகாரி. மின்சாரதுறையில் வீடுகளுக்கு மின்சாரம்
வழங்க வேண்டிய விதி முறைகளையும்,மக்களின் விண்ணப்பங்களையும் சரி பார்த்து அவை
சரியாக இருந்தால் அவர்களுக்கு மின்சாரம் வழங்க வழி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய முக்கிய
வேலையில் இருப்பவள்.
என்னிடம் ஒவ்வொரு நாளும் அனுமதி பெற வருவோர் மிக அதிகம். ஆகவே காலையில் வந்ததும்
கோப்புகளுடன் போராட்டம், வேலைக்கு வந்ததும் வேறு சிந்தனைகளுக்கு . நேரமில்லாமல்
மூச்சுத் திணற வைக்கும். வேலைக்கு நடுவே அதிகாரிகளிடம் சிபாரிசு கடிதங்கள் வர அந்த
கோப்புகள் முன்னே கவனிக்க வேண்டிய கட்டாயம்.
ஒரு நாள் கூட லீவு எடுக்க முடியாமல் அலுவலகமே கதியாக உழைப்பு.
அலுவுலகத்தில் இருந்து அன்று நான் சீக்கிரமாக கிளம்பி, வீட்டுக்குப் போகிறதுக்கு
முன்னால்,பக்கத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோவுக்குப் போனேன். “பேமிலியோட போட்டோ
எடுக்கணும்” என்றேன். “இன்னைக்கு முடியாது, என் பெண்டாட்டி ஊருக்கு போயிட்டாளே” என்றார்
ஸ்டுடியோகாரர்.
“என்னோட பேமிலி சார். குழந்தைகளை கூட்டிக் கிட்டு வரேன்” என்றேன் ஒரு கோபம் கலந்த
தொனியோடு.
“ஓ, அப்படிங்களா சரிங்க, என்னுடைய பெயர் ஆறுமுகம் நான் இரவு எட்டு மணி வரை இருப்பேன்
அதற்குள்ளே வந்திடுங்க என்றார். குழந்தைங்களை அழ வச்சி கூட்டிட்டு வராதீங்க, முகம் டல்லடிக்கும்
”- அப்புறம் போட்டோ நன்றாக வரலை என்று குறை கூறுவீங்க என அவர் ஒரு ஐந்து நிமிடம் கதை
கூறினார், என் மனதில் ஏதோ நாங்கள் குழந்தைகளை கொடுமைப் படுத்துவதைப் போல அவர் அதை
பார்த்தது போல இருந்தது அவர் கூறியது.
எனக்குப் பெற்றோர் இல்லை. மாமனார் மாமியார் ஊரில் தறி நெய்கின்றனர். இங்கு வர
மறுக்கின்றனர். “கை கால் நல்லா இருக்கும் போது தறி போட்டு நாலு காசு பார்க்க வேண்டும் என்று
மாமனார் கூறியது என் காதில் ஒலித்தது ? ”
விட்டால் தூங்கி விடுவேன் போல உடம்பு வலி.வீட்டிற்கு வந்ததும் கணவரிடம்
“சீக்கிரம் கிளம்புங்க! ஒரு பேமிலி போட்டோ எடுத்து என்லார்ஜ் பண்ணி வீட்டுல மாட்டிடலாம்” என்று
சொல்லிக்கொண்டே பீரோவைத் திறந்தேன். ஐயே ! என்ன இது?
பீரோ லாக்கரில் பார்க்கவே வாந்தி வரும்படியான பிய்ந்து போன பழைய செருப்பு!
உடனே தூக்கி விட்டெரிந்தேன்.
“ என்ன காரியம் பண்ணிட்டே, சம்யு ? ” என்றார் என் கணவர் பதறியபடி.
அதற்குள் வந்து விட்ட என் ஆறு வயது மகள் பிரபாவும் மூன்று வயது மகன் பிரசாத்தும், “ஏம்மா
உனக்கு கொஞ்சமாவது மானர்ஸ் இருக்கா? ஒரு மொபைல் போனை இப்படியா தூக்கிப் போடுவே? ”
என்று திட்ட ஆரம்பித்தனர்.
நான் புரியாமல் விழிக்க, என் கணவர் அது புதிய மாடல் சாம்சங் என்றார். அவரின் சீரியஸான
முகத்தைப் பார்த்து ஒருவேளை சாம்சங், புது மாடல் மொபைல் ஃபோன் என் கண்ணுக்குப் பழைய
செருப்பாகத் தெரிகிறதோ என்று பயந்து விட்டேன்.
அதற்குள் என் மகள் செருப்பின் பிய்ந்த வாரை கையில் மாட்டிக் கொண்டு லொட் லொட்
லொட்டென்று அடிப்பகுதியை சில முறை அழுத்தி “ஹலோ, நான் பாப்பா பேசறேன், ராம்
அங்கிள்தானே பேசரது? ” என்று இல்லாத ஒரு அங்கிளோடு கலாய்க்க, மகன் சார்ஜரில் இருந்த என்
மொபைல் போனை எடுத்து வீசி விட்டு, சார்ஜரின் வாரை இழுத்து செருப்பின் துளையில்
செலுத்தினான்!
“டேய், என் மொபைல்ல சார்ஜே இல்லைடா! ” என்று நான் கத்த –என் கத்தல் யாருக்குமே
கேட்கவில்லை ? வேறு சமயமயிருந்தால் ஒரு அடி கொடுத்து நன்றாக திட்டியும் இருப்பேன்,
போட்டோக்ராபர் கூறிய குழந்தைகள் அழக் கூடாது?என்ற அந்த ஒரு சொல்லிற்கு இணங்கி வந்த
கோபத்தை அடக்கினேன்.
குழந்தைகளை வெது வெது என்ற நீரில் குளிக்க வைத்து உடை போட்டு அலங்கரிப்பதற்குள்...
“இந்த சட்டைதான் எனக்கு வேணும், அந்த சட்டை வேண்டாம் ; என் கவுனை அவன் எடுத்து கீழே
போட்டு மிதிக்கிறான் , அக்கா என்னை கதாமாதுங்கறா..(எருமை கடா மாடுங்கறா) கீழே கும்மிடி
போடுடீ போன்ற பலதரப்பட்ட சச்சரவுகள்...சில சமாதானங்கள்!
இதுகள் நாயும் பூனையுமா அடிச்சுக்கிறதே என்று நினைத்தேன். கண்ணீர் என் கன்னத்தில்
விழுவதற்குள் கிக்கீ என்று சிரித்தன இரண்டும்.வாய் வாய் அப்படி ஒரு கூப்பாடு.
ஆடாமல் ஆடுகிறேன், ஓடாமல் ஓடுகிறேன்? என்று பெண் பாடி டான்ஸ் ஆட, பையன் ரோ ரோ ரோ
ய போட் ரைம் சொல்ல ஆரம்பித்தான். மெல்லி மெல்லி மெல்லி மெல்லி மெல்லி...(அடுத்த வரி
ஞாபகம் வருகிற வரை கணக்கற்ற மெல்லி மெல்லி போய் கொண்டுதான் இருக்கும்) லைப்பட்ட டீம்.
(Life is but a dream- தான். அது என் மகன் வாய்க்குள் மணிக்கு அறுபது கிலோ மீட்டர் வேகத்தில்
வரும்போது இப்படி ஆகி விடும்.)
.
நான் வீட்டைப் பூட்ட, பைக்கை ஸ்டார்ட் செய்தார் அவர். பைக் மேல் மகள்.
“சம்யு சம்யு, கொஞ்சம் சீக்கிரம் வா...” கணவர் பரபரக்க, தெருப் பெண்கள் களுக்கென்று சிரித்தது
எனக்கு கேட்டது.
வேகமாக ஓடினேன். ஒரு கையில் பைக்கையும் இன்னொரு கையில் பிரபாவையும் பிடித்திருந்தார்
அவர்.
“பிரபாவை பிடி, நம்ம பையனை இழு ! ”
“ என்னாச்சு? என்று கேட்டேன் ”
“ நம்ம பையன் பாண்ட்டோட ஜிப்பை கீழே இறக்கி விட்டுட்டான் டீ ! ”
நான் தலையில் அடித்துக் கொண்டேன். எங்கள் பைக்கை உதைத்து ஒரு நிமிடம் ஓட்டி உறும விட
வேண்டும். அப்போதுதான் அது புறப்படும். இவர் பைக்கை கையில் பிடித்து பைக்கை ஸ்டார்ட்
பண்ணும் நேரம் சின்னவன் அவன் கை வரிசை காட்டியிருக்கிறான்! கிளம்ப ஒருநொடி இருக்கும்
போது.......
“அம்மா..அம்மா.. ” மகள் சுரண்டினாள்.
“என்ன? ”
“பாத்ரூம் வருது என்றாள் !”
“அம்மா...எனக்கும்..தான் . ! ” பையனும் சேர்ந்து கொண்டான்.
கடவுளே !
பாத்ரூம் சென்றவுடன் பல மொழிகளில் பாட்டு இருவரும் சேர்த்து மூடிய கதவின் பின் இருந்து
பாடிட,நான் அவற்றை ரசிக்கமுடியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தேன். கோபம் தலைக்கு
மேல் ஏறியது.
அம்மா பாத்ரூம் அலம்பிவிடு என கத்தல் கேட்க உள்ளே சென்ற நான் கண்ட காட்சி இருவரும்
ஒருவர் மேல் ஒருவர் தண்ணியை அடித்து கொண்டு இருப்பது.உள் துணியெல்லாம் நனைந்து
இருவரும் சிரித்தனர்.
உள்ளம் கோபத்தில் கொதித்தது. மெல்ல சுய நினைவுக்கு வந்து கோபத்தை காட்டிடாமல் வெளியே
கத்தி பலமுறை “ஐயோ! ” கூறி என்னையே நான் சமாளித்து கொண்டேன்.
பத்து நிமிடத்துக்கு மேல் ஆனதால், நான் குழந்தைகளை வெளியே அனுப்பி பாத்ரூமை தாளிட்டேன்.
அவர்கள் இன்னொரு பாத்ரூமில் புகுந்து கொண்டனர் என்பதை கவனிக்காமல் . அவர் குழந்தைகள்
வருவார்களென்று என்று காத்திருக்க , நானும் போய் விட்டார்கள் என்று நினைக்க ....!
“குழந்தைங்க எங்கே?” இருவரும் சேர்ந்து கேட்டோம்.
பாத்ரூமில் கதம்ப சப்தம்...
“விந்திய மாசல யமுகா யங்கா.. ! அதான்! சோ சக்கம்! ” தேசிய கீதத்துக்கு டப்பாங்குத்து ஆடிக்
கொண்டும், தண்ணீர் வெளியேறப் பதித்திருக்கும் கையகல நீலநிற பிளாஸ்டிக் சல்லடைக்கு சல்யூட்
அடித்துக் கொண்டும் ஒன்றன் மேல் ஒன்று தண்ணீர் இறைத்துக் கொண்டும் விளையாட, நான்
சிரித்துக் கொண்டே அழுது விடும் நிலைக்குப் போனேன்!
திரும்ப அவர்கள் இருவரையும் பிடித்திழுத்து உடைகளை மாற்றி விட்டு கையை பிடித்து கொண்டு
வெளியே வந்து பைக்கில் உட்கார வைத்தேன். பைக்கும் கிளம்பி சிறிது தூரம் செல்லும் வேளையில்
ஒரு சந்தேகம் ஒழுங்காக பூட்டு போட்டேனா? பால் எடுத்து வைத்தேனா? ஞாபகமில்லை பாதி
வழியில் அண்டை வீட்டாரிடமிருந்து கணவருக்கு ஃபோன் வந்தது. “மோட்டார் போட்டு விட்டு
ஸ்விட்சை ஆஃப் பண்ணலையா? தண்ணிர் ரொம்பி வழிகிறதே ? ”என அவர் கூற எனக்கு பயித்தியம்
பிடித்து விட்டது.
அவரிடம் என் கணவர் கொஞ்சம் மாடியிலே போய் ஒரு காலியான வாட்டர் பிளாஸ்டிக் தொட்டியை
அந்த தண்ணீரின் நுழை வாயிலில் வைக்க சொன்னார்.அவர் சரி என்றவுடன் நன்றியை தெரிவித்து
பயணத்தை தொடர்தோம்.
ஸ்டுடியோவில் ஆறுமுகம் வாங்கம்மா என்று வரவேற்று இவங்க தான் குழந்தைகளா என வினவிய
படி அவரது தொழிலை தொடங்கினார். எல்லா விளக்குகளும் எரிய குழந்தைகள் குதூகலித்தனர்.
நாங்கள் அங்கு சென்று உட்கார
போட்டோகிராபர் கேட்டார், “நல்லாதான் சிரிங்களேன்? ஏன் புருசனும் பெண்டாட்டியும் அழுது
வடியறீங்க? ” என்று கேட்டதும் என் கோபமெல்லாம் அவர்மீது திரும்பியது. ஆறுமுகத்திடம் என்
ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தேன்.
அவர் என்னிடம் சம்யு மெதுவா பேசு வந்த காரியத்தை முடித்து விட்டு சீக்கிரம் போகலாம் என்று
என்கையை அழுத்திட நான் குழந்தைகளை சரியாக அமர்த்திவிட்டு அவருடன் நின்றேன்,முடிந்தவரை
சிரிப்புடன் முகத்தை வைத்து கொண்டு நின்று ஆறுமுகத்தை போட்டோ எடுக்க சொன்னேன்.
ஒரு பேமிலி போட்டோ எடுப்பதற்குள் குழந்தைகள் இருவரும் மீண்டும் என் கையை சுரண்டி அம்மா
பசி என்று ஆரம்பிக்க, அவர் என்னை பார்த்து போகலாம் வா என்று அழைத்தார்.
என் அலுவலகத்தில் மூன்று நாள் ஒன்றாக வேலை செய்த அளவிற்கு சோர்வு என்னை வந்தடைய
தொடக்க பள்ளி கூட ஆசிரியர்களை மனதில் தொழுது கொண்டே வண்டியில் ஏறினேன்.
குடும்பம் ஒரு அழகான கூடு என்ற வாசகத்தை அங்கு ஒரு விளம்பரத்தில் பார்த்து
எனக்குளேயேசிரித்துக் கொண்டேன்.