விநாயகர் துதி - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என் குடும்ப நண்பரும், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வசிக்கும் தமிழ் ஆர்வலர் வே.ஆவுடையப்பன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் துதியின் பொருளுரை தந்துள்ளேன்.

திரிகூடராசப்பக் கவிராயரின் 'திருக்குற்றாலக் குறவஞ்சி' பாடற் தொகுப்பின் தற்சிறப்புப்பாயிரமாக
1. விநாயகர் துதி, 2. முருகக்கடவுள், 3. திரிகூடநாதர், 4. குழல்வாய்மொழியம்மை,
5. சைவசமயாச்சாரியார் நால்வருள் மூவர், 6. அகத்திய முனிவர், மாணிக்கவாசக சுவாமிகள்,
7. சரசுவதி, 8. நூற்பயன், 9. அவையடக்கம் என்று ஒன்பது பாடல்கள் உள்ளன. நூலில் 119 பாடல்கள் உள்ளன.

விநாயகர் துதி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பூமலி யிதழி மாலை புனைந்தகுற் றாலத் தீசர்
கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மாமதத் தருவி பாயு மலையென வளர்ந்த மேனிக்
காமலி தருப்போ லைந்து கைவலான் காவ லானே.

பொருளுரை:

நிறைந்த இதழ்களுடன் கூடிய வாசனை மிகுந்த கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலைகள் அணிந்த குற்றாலத்தின் அருட்கடவுளான சிவபெருமானின் தாமரைமலர் போன்ற பாதங்களைப் போற்றிக் குறவஞ்சித் தமிழை நான் பாட, மதம் பிடித்த யானையின் ஓசையைப் போல இரைச்சலுடன் பாயும் பெரும் அருவி பாய்கின்ற மலை போன்று உயர்ந்த மேனியுடைய, கற்பகச் சோலையில் உள்ள கற்பகத் தருப்போல், ஐந்து கைகளையுடைய வல்லவனாகிய விநாயகப் பெருமான் எனக்குக் காவலாக இருப்பான்' என்று விநாயகனை வணங்கி வேண்டுகிறார்.

விளக்கம்:

பூமலி இதழி மாலை - தோற்றம் மிக்க பூக்கள் நிரம்பிய பூங்கொத்துக்களால் ஆன மாலை.
இது சிவபெருமானுக்குரிய அடையாள மாலை. ஈசன் - சிவபெருமான் இங்கு குற்றாலநாதர்.

அசையா மலையினின்றும் பாய்ந்தோடுவது அருவி. அசையு மலையாகிய யானையிடத்தினின்றும் பாய்ந்தோடுவது மத நீர்.

கற்பகத்தருப்போல் வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் கொடைக்கை என்பதைக் குறிக்க 'காமலி தருப்போல் ஐந்துகை' எனப்பட்டது.

பிள்ளையார்ப் பெருமானுக்கு ஐந்து கைகள் உள்ளன. ஐந்தாவது கையாகிய தும்பிக்கையான் நம்பிக்கை தந்து காத்தருள்வான் என்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-22, 4:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே