அலுக்காத அழகுகள்

தன்  கறுப்பு குழந்தைக்கு 
வானம் இட்ட திருஷ்டிப்பொட்டு
நிலா
தென்னங்கீற்றிடை
அமுதமழை சிந்து அழகு

காற்றோடு மரம் கைகோர்க்க
பெரும் மழையின் மிச்சமாய்
மேனி சிலிர்க்க விழும்
சிறு தூரல்

கருமேகத்தை கதிரவன் தீண்ட
வர்ணப்பாகுபாடு காட்டும்
வானவில்

மலைச்சரிவில்
மடியும் போது
சிந்திய குருதியாய்
சிவக்கும் செவ்வானம்

நிலவில்லா வானை
ஒளியூட்டும்
நட்சத்திரத் தோட்டம்

கதிரவன் கைபட்டு மின்னும்
புல்லின் பனித்துளி மூக்குத்தி

நீலவானத்தோடு கைகோர்த்து
நித்தம் கதை பேசும் கடல்

இரவெல்லாம் இதழ்விரித்து
கொழுநன் தொழுது எழும் மங்கையாக
தண்டின் தாளில் மலர் தூவி நிற்கும் 
பன்னீர் மரம்

இருப்புபாதையில்
நடை பழகித் தேயும்
ரயில்கள்

ஹார்மோனின் கனிவால்
மீசை அரும்ப
பூத்த முதல் காதல்

கண்களால் உண்டு
நினைவுகளாய் அசைபோட்டாலும்
அலுக்காத அழகுகள்

எழுதியவர் : K.நிலா (8-Sep-22, 9:34 pm)
சேர்த்தது : Kநிலா
பார்வை : 183

மேலே