நவராத்திரி

படிக்கட்டுகளில்
உயிரற்ற பொம்மைகள் அடுக்கி
உயிருள்ள பொம்மைகள் கொண்டாடும்
கொண்டாட்டமே நவராத்திரி.
பிறப்பை முதல் படியில் தொடங்கி
ஒவ்வொரு படியாய் ஏறி - முடிவில்
மேற்படியில் இறையோடு இணைவது
நவராத்திரி சொல்லும் படிப்பினை.
ஒவ்வொரு படியும் ஏறுதலுக்கு
வயதும் அனுபவமும்
அனுகூலமாகும் உண்மை.
கொலு பொம்மைகள் சொல்லும்
தத்துவமும் அதே.
வாழ்க்கை சுழற்சியை
காட்சி படுத்துவதே அதற்கு சாட்சி.

குழந்தை கிருஷ்ணன்..
அன்னை கையில் குழந்தை
தவழும் குழந்தை...நடைவண்டி
தள்ளும் குழந்தை...
அந்த பருவத்தின் விளையாட்டுகள்
பல்லாங்குழி..பச்சைக்குதிரை...
தவ்வாட்டம்..பரமபதம்..தாயம்
முதற்படியை அலங்கரிக்கும் பொம்மைகள்
வாழ்வின் ஆதாரமாய்
விவசாயம்..செய்யும் தொழில்
விஞ்ஞான முன்னேற்றங்கள்
உழைக்கும் பொம்மைகள்
அடுத்த படியில்...

நம்மை ஆண்ட அரசர்கள்
அவர்கள் கட்டிய ஆலயங்கள்
வாழ்ந்த அரண்மனைகள்
அடுத்ததில்.
வாழ்க்கைக்கு எருவாகும்
வாழ்வை நெறிப்படுத்தி
உயர்ந்திட அனுபவங்களை
வேதமாய் விட்டு சென்ற
நம் முன்னோர்கள்...தியாகிகள்..
ஞானிகள்...சித்தர்கள்
விஞ்ஞானிகள்...தலைவர்கள்
தொடர் படியில் ...

தியாகம்...மனிதநேயம்...
இறைப்பற்று...என்று
ஒவ்வொரு படியாய் ஏறி
மேற்படியில்
பரமாத்மாவோடு இணைவதுதான்
வாழ்க்கையின் பயன்..கடமை..
என கொண்டாடுவதுதான்
நவராத்திரி.

ஒன்பது இரவுகளிலும்
ஒன்பது சக்திகளையும்
ஒன்றாய் நிலைநிறுத்தி
பெண்மையை தெய்வமாய்
வணங்கும் வளரியல்பு
வருடத்திற்கு ஒரு முறை
வந்தாலும் அதை
வாயும் வயிறும் நிறைய
இனிப்பும்..சுண்டலும்..
செவி குளிர
இசையும்... பாட்டும்...
கண் விரிய
நாட்டியமும்...அலங்காரமும்..
வீடு நிறைய
சொந்தமும் நட்பும்
ஒன்று சேர
கொண்டாடுவதுதான்
நவராத்திரி.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Sep-22, 7:42 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 93

மேலே