நீலப் பெருவெளியில் ஒருநாள்

நீலப் பெருவெளியில் ஒருநாள்
---------------------------------------------------------

எதையும் அனர்த்தாமல்
பார்வை ஒருமித்த சிலகால பயணம் அது

ஆட்டோ க்ராஃப் குறிப்பேட்டொன்றின்
கடைசிப் பக்கத்தை
அழகாய் முறுவலித்து
ஒரு ஹாய் சொல்லி நீட்டிடும்போது
அதுநாள்வரை
அவனைப் பற்றிய
தோன்றுதல்கள் எதையும்
ரத்தின சுருக்கத்தில் நிரப்பிடமுடியாதவளாய்
ஏதும் எழுதாமல் விட்டுவிட்டேன்.
என்ன நினைத்திருப்பானோ தெரியவில்லை.

தூர இருந்தே பார்த்துவிட்டு
அருகி வரும்போது
எதையும் ஏறெடுத்துப் பார்க்கமுடியாமல்
கண்களின் கனத்தில்
நின்றதெல்லாம்
காட்டிக் கொடுத்துவிடுமோ என
தவிர்த்திருந்தேன்

இனி இருக்கின்ற நாளெல்லாம்
எங்கேப் போய்விடப் போகிறது
என்பதைப்போல்
அந்தநாட்களின்
இதயம் தடதடத்த இரவுகள்
ஆறுதல் சொல்லியேப் போயின

வாழ்க்கை அதுநகர்தலின் ரசனை மாறிப் போகும்போது
காட்சிக்கு அத்தனை
சுவை அளிப்பதில்லை என்பதாலோ?
இதயத்திற்கு அத்தனை
இதம் இருப்பதில்லை என்பதாலோ ? என்னவோ ம்
உலகத்திலுள்ள
அத்தனை அழகானவற்றையெல்லாம் காணுகிறபோது
அவற்றிடம்
ஏதும் கேட்காமலும், சொல்லாமலும்
ரசித்தவாரே
பேச்சற்று கடந்துவிடுகிறோம்.
இப்படித்தான்
அசைவற்றிருந்த அவனின்
அழகிய தருணம்.

ஏதோ ஒரு மரக்கிளையின்
பெயர்த்தெரியாத பூ ஒன்று ,
தானுதிர்த்துப்போன
அழகிய நறும்புதல் போல்
இளமை விட்டுச்சென்ற இடத்திலேயே
இருக்கிறேன்.

இத்தனையும் காலத்திரையினிடையில்
எதிலும் வாசனை மாறாமல்
திரும்பிய பக்கமெல்லாம்
வெறும் ஞாபகங்களால் மாத்திரமே
நிறைந்திருப்பது என்பது சாத்தியம்தானா?
சாத்தியப் படுத்திக் கொண்டிருந்தான்

அது
பெயரிடப் படாத
நவீன வளாகமாயிருந்தது,
இரசனைத் தின்றுதீர்த்த தவறுகளாய்
மகளுடன்
Cinic Car லிஃப்டின் முன்புற கதவோரம்
நின்றிருந்தான்.
அது அவன்தானா ?

ஊடுருவுகிறேன்..
என் மென் மெளன நேரங்களுக்குள்
ஒரு நீர்நிறை
கண்ணாடிக் குடுவையின் ஊடே
ஜனக் கூட்டங்களுக்கிடையில்
எண்ணற்ற நிறமாலைகள்போல்
கட்டுப்பட்டிருந்தான்
அது, அவன்தானா ?

என் கண் கண்ணாடி மாற்றிட வேண்டுமாய்
வீட்டில் அவர் சொல்லியிருந்தார்
சோம்பல் மெருகேற போகட்டும் பார்க்கலாம் என அவதானிக்கிறேன்

மனமும் உடலும் ஒரு சேர பயணிக்க
மறுக்கிறது.

அதே அருகல்.

காதோர நரை.
மகளின் அணைப்பிற்குள்
செல்லத்தொப்பையை
மறைத்திருந்தான்.
மேற்கன்னங்களின் தடித்த
மேடுகளில்
குடித்திருந்ததிற்கான அடையாளமாய்
கருவளைந்திருந்தது
புருவங்களின் குறுமறைவுகள்.
தெத்துப்பல் இதழ்க் கிள்ளும் முறுவல்களால்
கருவிழி நடனங்களால்
அது, அவன்தான் எனச் சொல்லிக் கொண்டிருந்தான்.

லிஃப்டின் நகர்வறை விசாலமாகியிருந்தது
நகர்ந்து நகர்ந்து கடைசியாய்
ஒரு ஒளிவிற்கு இடம் தெரியாமல் தேடுகிறேன்.
அறிமுகம் மறந்ததுபோல்
அவனையேப் பார்வைக் குள்ளாக்கியிருந்த
நான்
அன்றும் இன்றும்
அவன் பொறுத்தவரையில் யாரோதான்

கதவுத் திறந்ததும்
முண்டியடித்துக் கொண்டுத் தொடரவேண்டும்.
எத்தனிக்கிறேன்.
புடவையை உதரிக் கொண்டவளாய்
எங்கே என
திரும்பிப் பார்க்கும் முன்
வான்போல் நீண்டிருந்த ஆறாம் தளத்தின்
நீலப் பெருவெளிகளுக்குள்
மினுக்கங்களாகி மறைந்துவிட்டான்.

யாரைத்தான் தேடுகிறாள்?
யாரைத்தான் நேசிக்கிறாள்?
கேட்கிறவரிடம்
நேற்று அவனை
இதோ இன்று உங்களை
நாளை உங்களிடத்தில் இருந்துகொண்டே
இன்னும் அவனை ம் .

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள்-பைராக (30-Sep-22, 4:44 am)
பார்வை : 37

மேலே