பெண் அவள்
அந்தி சாய்ந்து கொண்டிருக்கிறது
தன்னிரு பெருங் கரு விழிகளைச்
சுழற்றிச் சுழற்றிப் பார்த்தபடி
மாலைச் சூரியனின் மங்கும்
கதிர்கள் விழும்
சாலையைக் கடக்கிறாள்
சுழன்ற விழிகள்
நொடிப் பொழுது
நொடிப் பொழுதே தான்
என்மீது விழுந்தன
விழுந்ததில் எழுந்தது எனது
சூரியன்
நான் மெல்லிய புன்னகையோடு
அவள் வதனத்தைப் பார்த்தேன்
சிவந்த கன்னங்கள்
மிரண்டு திரண்டிருந்தன
பாதி தூரம் கடந்தபின்
கசிகிறதொரு சிறு நகை
பத்திரமாய் எடுத்து சட்டைப் பையில்
போட்டுக் கொண்டேன்
சாலையில் கண்டெடுத்த காசை
தொட்டுத் தொட்டுப் பார்க்கும்
சின்னஞ்சிறு சிறுவன் போல
தொட்டுப் பார்க்கிறேன்
கணந்தோறும்
அச்சிறு நகையை