அவளை கண்டால்
ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....
வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...
பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....
வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...
அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...
துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...
தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...
அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...
அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...
கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...
அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...
நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...
தாலி கட்டியவனின்
திதி நாளாய் இருக்கலாம்...
உடலும் உள்ளமும்
தேய்ந்து
வாழ்க்கையுடன் போராடும்...
அவளை கண்டால்
கண்களால் எரித்து விடாதீர்...
இராமனென
நம்பும் சீதைகளை
தீக்குளிக்க விடாமல்...
அகிலத்தை எரித்த கண்ணகியாய் அவளை
கண்களில் நிறுத்துங்கள்...
அவர்கள் முள்கிரீடம்
சுமந்தவர்கள்...
தினம் தினம்
இரத்தத்தை சிந்தி...
வாழ்க்கையுடன் போராடும்
அவளை
கண்டால்....
கையெடுத்து கும்பிடா விட்டாலும் சொல்லம்புகளால்
தைத்துவிடாதீர்கள்...
போராடி போராடி
நரையும் திரையும்
தேய்ந்து போகும்
அவளுக்கு....
ஆறுதலையும் அன்பையும் தந்து
தேவதைகளென
துதிபாடுங்கள்...