112 மணத்தின்பின் குணங்குற்றம் மனங்கொளாது வாழ்க - கணவன் மனைவியர் இயல்பு 4
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
தவனாட்டி யிருவரினற் குணமுளார் இலரென்னுந்
..தன்மை நோக்கல்
நவமணஞ்செய் முன்னன்றிப் பின்னுன்னிற் பயனுளதோ
..நாவாய் தன்னை
உவராழி நடுவினன் றன்றெனக்கை விடத்தகுமோ
..உடல்பன் னோய்சேர்ந்(து)
அவயவங்கள் குறைந்தாலு மதையோம்பா(து) எறிவாரோ
..அவனி மீதே. 4
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்,
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பொருளுரை:
முன்செய்த புண்ணியத்தால் அமைந்த திருமணத்தில், இருவரிலும் நற்குணம் உள்ளவர் இவர், குணம் இல்லாதவர் இவர் என்ற தன்மையை ஒருவரை ஒருவர் ஆராய்வது புதுமணம் செய்து கொள்வதற்கு முன்னரேயாம். திருமணத்தின் பின் ஆராய்வது பயன் உள்ளதாகாது!
கப்பலை உப்பு நிறைந்த நடுக்கடலில் ஆராய்ந்து இது நன்றாயில்லை என்றால் கை விட்டுவிட முடியுமா! கண்டாலும் விடமுடியாமையும், உடலில் பல விதமான நோய்கள் ஏற்பட்டு, உறுப்புக்களில் குறைபாடு ஏற்பட்டாலும், அவற்றைக் கவ்னித்து மருத்துவம் செய்து சரி செய்யாமல் அக்குறைபாடு உடைய உறுப்பைத் தூக்கி எறிந்து விட முடியுமா? என்றும் இந்நூலாசிரியர் கேட்கின்றார்.
குறிப்பு:
இக்காலத்தில் உடல் நோய்க்குத் தகுந்த மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தென்றால், தகுந்த அறுவை மருத்துவம் மூலமாக பாதிக்கப்பட்ட உறுப்பையும் எடுத்து விட்டு, உயிரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
அதுபோல கணவன், மனைவிக்கிடையில் சிற்சில அபிப்பிராய பேதங்கள் வரலாம். தங்களுக்குள் கலந்து பேசியோ அல்லது மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைப்படியோ சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் முயன்று வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விவாக ரத்து என்றோ, தற்கொலை என்ற முடிவோ எடுக்காமல் வாழ்க்கை வாழ்வதற்கே என்று துணிய வேண்டும்.
நவமணம் - புதுமணம். நாவாய் - கப்பல். உவராழி - கடல்.