வண்ணத் தமிழெடுப்போம் வானமெங்கும் சிறகடிப்போம்

தொட்டதெ லாம்விலை தோல்விக ளேநிலை
தோன்றிய வாரெமை வாட்டியதால் அன்று
விட்டுவிட் டோடியெம் வீடுக ளோங்கிட
வீழ்ந்ததித் தேசமெம் தேசமென்றே - நாம்
நட்டுவிட் டோமெமை நாளையும் வாழ்ந்திட
நம்மவ ராயிரம் நாடிவந்தால் - சிறு
கட்டிலு மேயிடக் காரண மாகியக்
கட்டிட மாயுயர்ந் தோங்கிநின்றே!
*
நட்டமு மாகிய நாங்களெம் வாழ்வினை
நாட்டமி லாவகை வாழ்ந்திடினும் - ஒரு
வட்டமிட் டேயெமை வாட்டிடும் வேதனை
வற்றிட வேயுழைப் பேந்துகின்றோம் - உடல்
சுட்டிட வேயெழும் சூரிய னோடுயிர்ச்
சுற்றுவ தாலொரு சூரியனாய் - தினம்
திட்டமிட் டேயெழுந் தேவருந்
தேவைகள்
தீர்த்திட வேர்வையில் தீக்குளிப்போம்.
*
பற்பல நாட்டினர் பாங்குட னாடிடப்
பந்துட னேவரும் பாதையெலாம் - அழ
குற்றிட வேயென ஆயிர மாயிரம்
கொட்டிய நாடிதன் கோலமெலாம் - பலர்
நெற்றியின் வேர்வையி னாலுரு வாகிட
நேர்ந்ததற் காயுதை பந்தெனவே - தம்
உற்றவ ரோடுற வானவர்க் காய்தினம்
உள்மனத் தோடுதை பட்டவரே
*
எட்டிட வேயுயர் ஏணியி லேறிய
எங்களின் வாழ்வினைப் பார்ப்பவரோ - பணம்
கொட்டிடப் பூவொடு காய்தர வேயெமைக்
கொண்டுசென் றாரென வெண்ணுகின்றார் - உடல்
சொட்டிடும் வியர்வையி னாலுடல் சோர்ந்திடச்
சுட்டெரித் தாட்டிடும் வெய்யிலிலே - படும்
கட்டமெ லாமறி யாதவ ராமனக்
கட்டமு மேவெளி நாட்டவர்க்கே
*
வெட்கமெ லாந்தொலைத் தேவரும் வேதனம்
வாங்கிட வேவரும் நாளினிலே - படும்
கட்டமெ லாம்மறைந் தோடிட வேவிழி
காண்பது வேயினி தாகுமன்றே - உடன்
இட்டமொ டேதமக் கானவர்க் காயதை
இட்டிடு வாரெனும் போதிலுமே - பின்பு
பட்டினி யோடுழைத் தோங்கிட வேதினம்
பட்டிடும் பாடுக ளாயிரமே!
*
வெளிநாட்டினில் உழைப்பாரினை வெறும்வாயினில் மெல்லும்
வெறுப்பாளரின் திருநாக்குகள் விளையாட்டெனச் சொல்லும்
துளிவார்த்தையின் விசமானது துடுக்காய்மனம் கொல்லும்
துரியோதனத் தனம்நீங்கிட தொலைவானவர் உள்ளம்
உளியாய்தின மடிவாங்கிடும் உழைப்பாளரின் துன்பம்
ஒருநாளினில் விழிகாண்கிற நிலைதோன்றிடு மென்றால்
தெளிந்தேஉயிர் துடித்தேயவர் திகைப்பாவது உண்மை
தெரியாதிதை தெரிந்தேவடு தனையேற்றுதல் மாறும்.
*
கண்ணீர் நதியெனவே கரைபுரண்டு ஓடிவர
கவலை சுமந்தபடி கால்நடக்கும் போதினிலும்
புண்ணாய் வருத்துகின்றப் பொல்லாத மனிதருடன்
பூவாய்ப் போராடும் புயற்காற்று வேளையிலும்
தண்ணீர் குடிப்பதற்கே தவித்திருக்கும் போதினிலும்
தமிழை நீராகத் தானருந்தி உயிர்வாழ
வண்ணத் தமிழெடுப்போம் வானமெங்கும் சிறகடிப்போம்
வாட்டும் துயரனைத்தும் வழிந்தோடச் சிரித்திருப்போம்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Nov-22, 2:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 45

மேலே