அக்னி நட்சத்திரம்
கோடை வெயில் சுட்டு எரிக்கும் அக்னி நச்சத்திரத்தின் ஒரு நாள், அன்று சூரியன் தன் உக்கிரத்தை சற்று தணித்து கொண்டிருந்த மதிய வேலையில் மீனாட்சி ரசம் சாதம், உருளைக்கிழங்கு கறியை ரெண்டு டப்பாக்களில் அடைத்து அதை ஒரு லஞ்ச் கூடையில் எடுத்து வைத்தாள். வீட்டை வழக்கம் போல் பூட்டிவிட்டு, பூட்டை ரெண்டு மூணு முறை இழுத்து பார்த்துவிட்டு சாவியை பர்சில் வைத்து, பர்சை லஞ்ச் கூடையில் வைத்து கொண்டு நடக்கத்தொடங்கினாள். இந்த வேகத்தில் நடந்தால் பிள்ளைகளுக்கு மதிய உணவு இடைவேளை முடிந்து விடும் என்று எண்ணிக்கொண்டு விர்க்கு என்று நடக்கலானாள். சரியாகா மீனாட்சி பள்ளியை சேர்ந்த இரண்டாவது நிமிடம் ட்ரிங் என்று மணி ஒலித்தது. அம்மா என்று ஓடி வந்து அஞ்சனா, மீனாட்சியின் கால்களை பற்றிக்கொண்டாள். மீனாட்சி அஞ்சனாவின் கையை பற்றிக்கொண்டு கிரௌண்டில் இருக்கும் ஷட்டர் போட்ட இடத்துக்கு போய் அமர்ந்து கொண்டாள்.
"அம்மு அம்மா பாரு உனக்கு புடிச்ச ரசம் சாதம், உருளை கரி எடுத்துண்டு வந்துருக்கேன்" என்றாள். "ஐ அம்மா சூப்பர் என்கிட்ட குடு நானே சாப்டுக்கறேன்" என்றாள் அஞ்சனா. "கைய சுற்றுன்றுவ டீ தங்கம், சூடா இருக்குடா கன்னுகுட்டி" என்றாள் மீனாட்சி. "இன்னிக்கு கிளாஸ் எப்படி டீ போச்சு அஞ்சு" என்று அடுக்கினாள். "மா இன்னிக்கு அந்த திவ்யா இருக்காளே அவ அப்பா அவளுக்கு சக்திமான் போட்ட வாட்ச் வாங்கி குடுத்துருக்கார் அத போட்டுன்வந்து ஓவரா பீத்தறா மா, நானும் செகண்ட் ஸ்டாண்டர்ட் பாஸ் பண்ணா அப்பாவ வாங்கித்தர சொல்றியா மா" என்றாள் அஞ்சனா. "ஆகட்டும் நீ மொதல்ல சாப்டு அப்ரோம் வாட்ச் வாங்கி தரலாம்" என்றாள் மீனாட்சி. அஞ்சனா உணவை சாப்பிட்ட பிறகு "அம்மா வரேன் டீ தாங்கொம்,நன்னா படி, சாயங்காலம் பெல் அடிச்ச ஒடனே பஸ் ஏறிடு,இல்லன்னா டிரைவர் விட்டுட்டு போய்டுவான் நேத்து மாதிரி, என்னை நடக்க வைக்காத" என்று டப்பாவை கழுவி எடுத்து கொண்டு புறப்பட்டாள் மீனாட்சி.
"என்ன வெயில்" என்று முணுமுணுத்தபடி வழியில் வீடுகளில் இருக்கும் தென்னை மரத்தை, செடிகளை கொடிகளை பார்த்துக்கொண்டே கடந்து போனாள். சரியாக ஆலமரத்தை தாண்டி யாரோ ஓடி வருவதை பார்த்தாள். தன் முட்டை கண்களை குறுக்கி பின்பு விசாலமாக்கி பார்த்தாள். சற்று தொலைவில் வந்த உருவம் அவளை கடந்து ஓடி போனது. ஒரு நிமிடம் அவனை எங்கயோ பார்த்து இருப்பதை நினைத்து யோசிக்கலானாள்.
சில மாதங்களுக்கு முன்பு விடிந்தும் விடியாமலும் இருக்கும் காலை வேளையில் வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருக்கும் வேலையில் ரோடில் குறுக்க நெட்டுக்க ஒருவன் ஓடுவதை பார்த்தாள். அவனை இன்னும் சில பேர் துரத்திக்கொண்டு இருந்தனர். செயின் பறிக்க வந்திருப்பார்களோ என்று சுதாரித்து கொண்டவள் படபடத்து போய் சேலையை தோளை சுற்றி போட்டுகொண்டாள். ஓடியவன் அவள் அருகில் வந்து நின்றான். தொண்டைக்குழியில் மூச்சு சிக்கிக்கொள்ள அதிர்ந்து போய் நின்றாள் மீனாட்சி."ஏம்மா கொம்பு இருந்தா குடுமா,புண்ணியமா போகும், உன்ன உசுரு உள்ளவரை மறக்க மாட்டேன் தாயே....... ஒத்தை கொம்பு இருந்த எத்தனை பேர வேணா சமாளிப்பேன் ஆத்தி" என்றான். அவனை துரத்தி வந்தவர்கள் நெருங்கவே மறுபடியும் ஓடத்தொடங்கினான்.
கேட்டை பூட்டிக்கொண்டு வீட்டு உள்ளே நுழைந்தவள் "அண்ணா ரோட்ல ஒருத்தன் ஓடுறான் அவன யாரோ தொரதரா, அவன் எண்டவந்து கொம்பு இருக்கான்னு கேக்கறான் எனக்கு பயமா இருக்கு எந்திரிங்கோ.....அண்ணா எந்திரிங்கோ" என்று சுப்புவை எழுப்பினாள். "அறிவு கெட்டவளே காதுல விழரது அஞ்சு எந்துரிச்சுர போற ஏன் காட்டு கத்து கத்துற" என்று அலுத்து கொண்டு மெத்தையை விட்டு எந்திரித்தான். "என்னடி பிதற்ற" என்றான் சுப்பு மீனாட்சியை பார்த்து. "அண்ணா உண்மையா தான் சொல்றேன், நீங்க வேணா வாசலுக்கு வந்து பாருங்கோ" என்றாள் மீனாட்சி.
படுக்கையறை ஜன்னல் வழியாக வாசலை பார்த்தான் சுப்பு. யாரோ ஓடுவதை போல தெரிந்தது.உடனே வாசலுக்கு சென்று காம்பௌண்ட் உள்ளாக நின்று கொண்டு மீனாட்சியும் சுப்புவும் வேடிக்கை பார்க்க தொடங்கினர். எதிர் வீடு, பக்கத்துக்கு வீடுகளிலும் சிலர் இவர்களை போலவே நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர். ஆனால் இந்த முறை மீனாட்சியிடம் கொம்பு கேட்டவன் கையில் ஒரு தடி இருந்தது,அதை வைத்து அவன் எதிராளிகளை அடித்து கொண்டு இருந்தான். "என்னடா நான் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகிட்டேனு தெரிஞ்சு,உன் அண்ணனை போட்டதுக்கு பழிதீக்க என்ன சுத்து போட்றியா, நான் அகரநாராயணன்" என்றபடி அவன் சிலம்பம் சுழற்றினான். "இவன் பெரிய ரௌடி டீ, அகரநாராயன் சொன்னாலே மில்லத் நகரே நடுங்கு டீ, சிலம்பம் சுத்த தாண்டி குச்சி கேட்ருக்கான் " என்றான் சுப்பு.
அதை இப்போது நினைவு கூர்ந்தாள் மீனா, அவன் அகரநாராயணன் என்று உறுதி செய்துகொண்டாள். ஆலமரம் அடியில் நின்றுகொண்டு அகரநாராயணனை திரும்பி பார்த்தாள். உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடுவது என்னவென்று அவளுக்கு அன்று புரிந்தது. ஆனால் இப்போது அவனை துரத்துவது போலீஸ் ஜீப். சரியாக ரெட்டை பாலம் மேல் அகரநாராயணன் ஓட அவனை துப்பாக்கி கொண்டு சுட்டான் போலீஸ் ஒருவன். கணப்பொழுதில் மண்ணில் சரிந்தான் அகரநாராயணன். போலீஸ் எல்லாம் ஜீப்பில் இருந்து இறங்கி அவன் இறந்ததை உறுதி செய்து கொண்டனர். ஒரு எனவுண்டரை நேரில் பார்த்த மீனாட்சி கண்ணீர் தளும்ப வீட்டுக்கு நடையைக்கட்டினாள்.
வீட்டில் நுழைந்த உடன் லஞ்ச் கூடையை மூலையில் போட்டுவிட்டு "கடவுளே அவர் ஏன் என்கிட்ட வந்து கொம்பு கேக்கணும்,என் கண்ணு முன்னாடி ஏன் செத்து போனும் என்று அழுத படி உரைந்திருந்தாள். சாயுங்காலம் சுப்பு வந்தவுடன், அஞ்சு வெளியே விளையாட சென்றிருப்பதை உறுதிசெய்துகொண்டு நடந்தவற்றை கூறினாள். " ஏன் என்கிட்ட வந்து அவர் கொம்பு கேக்கணும்,என் கண்ணு முன்னாடி ஏன் செத்து போனும்சொல்லுங்கோ அண்ணா" என்றாள் மீனாட்சி. "யாரு கண்டா அவனுக்கும் உனக்கும் பூர்வ ஜென்மத்துல பந்தம் ஏதோ இருந்துருக்கும் அதான் உனையே சுத்தி வந்துருக்கான்" என்று கூறி சிரித்துக்கொண்டே நகர்ந்து போனான்.
மறுநாள் அஞ்சுக்கு மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு சென்ற மீனாட்சி ரெட்டை பாலத்தின் மேல் ரத்தக்கறையை மண் போட்டு மூடி இருப்பதை பார்த்து கொண்டு போனாள். ஸ்கூலில் அஞ்சுவுக்கு உணவு ஊட்டிவிட்டு சிலம்பம் கிளாசில் அஞ்சுவை சேர்த்துக்கொள்ள முடியுமா என்று ஆபீஸ் ரூமில் விசாரிக்கலானாள்.