பிரிவு

பிரிவு

விழிப்பு வந்த போது தான் எங்கிருக்கிறோம்? இந்த மனநிலையில் தான் இருந்தார் இருளப்பர். இப்பொழுதெல்லாம் ஒரு வாரமாய் அடிக்கடி இந்த எண்ணம் விழிக்கும் போது அவருக்கு வரத்தான் செய்கிறது.
முன்னர் விழிக்கும் போது அவரை தொட்டவாறு உட்கார்ந்திருப்பாள், அல்லது படுத்திருப்பாள் மாசி, அவளது உடலின் அருகாமை அவருக்கு இரவு எங்கு படுத்தோம் என்பதை சட்டென நினைவுக்கு கொண்டு வந்து விடும்.
இந்த எண்ணம் எப்பொழுது தோன்ற ஆரம்பித்தது? போனவாரத்தில் அந்த நாள் கடந்த பின்புதானே..!
இருளப்பர் அன்று விழிக்கும்போது மாசியின் மீது வழக்கம்போல உரசியபடிதான் படுத்திருந்தார், ஆனால், அவளது உடலென்னவோ குளிர்ந்தது போல் இவருக்கு தோன்றியது, ஆம் அவளின் உடல் குளிர்ச்சிதான் இவரை எழுப்பி இருக்க வேண்டும், சுற்றும் முற்றும் மலங்க மலங்க விழித்து பார்த்தார். எப்பொழுதும் விடியலில் தலைக்கு மேல் கூப்பாடு போட்டு கொண்டிருக்கும் பறவைகளின் கூச்சல்களை காணோம். அப்படியானால் தான் சீக்கிரமாகவே விழித்திருக்க வேண்டும்.
காரணமில்லாத கோபம் வந்தது மாசி மீது. அவள் உடல் குளிர்ச்சிதான் தன்னை எழுப்பி இருக்கவேண்டும். கோபத்துடன் அவளை தொட்டு எழுப்ப முயற்சித்தார். அதிக குளிர்ச்சியாக இருந்தது அவள் உடல். மாசி..மாசி..ஏ மாசி.. அசைவில்லாமல் இருந்தாள். அவருக்கு உள் மனம் ஏதோ பயங்கரத்தை உணர்த்தினாலும் அதை வெளிக்காட்ட மறுத்து மாசி மாசி,, சப்தமிட்டவாறு அவளை கைகளால் புரட்டி கொண்டிருந்தார்.
விடியலின் அறிகுறிகள் தோன்றியபடி இருந்தது. அவரை தாண்டி இரண்டு மூன்று சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தன. இவர் கூப்பாட்டுடன் கைகளால் அவளை போட்டு புரட்டி கொண்டிருப்பதை பார்த்து விட்டு “உச்” கொட்டியபடி தாண்டிக்கொண்டிருந்தார்கள்.
நல்ல வெளிச்சம் வந்திருந்தது. வந்திருந்த “மாநகராட்சி ஊழியர்களால்” அவரை மாசியிடமிருந்து சிரமப்பட்டு விலக்கி வைத்து விட்டு மாசியை தூக்கி செல்வதை பார்த்து கொண்டிருந்தார். அப்படியானால் மாசி இனி என்னுடன் இருக்க மாட்டாளா?
அவள் என்னுடன் எத்தனை வருடங்கள் கூட இருந்தாள்? நாற்பது ஐம்பது, இல்லை அதற்கு மேல் இருக்கலாம்..! திடீரென்று அவள் இப்பொழுது யாருடனோ போவது போல தோன்றியது. அழுகை வரவில்லை. வராது இத்தனை வருடங்களில் அவர் அழுதது கிடையாது, அவரால் கோபப்பட மட்டுமே முடியும், அதுவும் மாசியிடம் மட்டுமே அவரின் கோபத்தை காட்ட முடியும். ஏசவும் முடியும். போகும், அல்லது கேட்கும் இடங்களிலெல்லாம் கிடைக்கும் அவமானம், பேச்சு, ஏச்சுக்களை இவளிடம் வந்து கொட்டி தீர்த்துகொள்ளத்தான் முடியும்.
பத்து வருடங்களாக இந்த இடத்தில் மாசியுடன் படுத்துறங்கி பழகிப்போன இடம், அன்று இரவு தூக்கம் வரவில்லை. மாசியை திட்டிக்கொண்டும், அவ்வப்போது அவளை அடித்துக்கொண்டும், பழைய அலுமினிய தட்டில் சாப்பிடுவதற்கு எதையாவது வைத்து அவள் வாயில் ஊட்டியபடி இருந்தது, பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி வந்து அவள் வாயை கழுவி விட்டு விட்டு அப்படியே அவளை நகர்த்தி பாத்ரூம் போக வைத்து விட்டு அதை தண்ணீர் விட்டு அலசி விட்டு மீண்டும் நகர்த்திக்கொண்டு வந்து படுக்கவைத்ததும், ஞாபகம் வந்தது.
இன்று என்னவோ சக்கடை நாற்றம் மூக்கை துளைத்தது.
நேற்று வரை இங்குதான் இருந்தோம், இதே நாற்றம் இருந்திருக்கும், ஆனால் தெரியவில்லையே? அவருக்கு திடீரென்று இந்த எண்ணம் வந்த போது, ஆறுதலாய் இப்படி தோன்றியது, மாசி இருந்தாள் அதனால் தெரியவில்லை, இன்று காலையில் அவள்தான் என்னை விட்டு போய் விட்டாளே..!
சட்டென எழுந்தார், இனி இங்கு படுப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது புரிந்தது, பக்கத்தில் மூட்டையை பார்த்தார். மாசியுடையது, அவசரமாய் பிரித்தார், இருந்த மெல்லிய வெளிச்சத்தில் புரட்டி பார்க்க, எல்லாம் பழந்துணிகளாய் இருந்தது. ஒவ்வொன்றும் ஒரு வண்ணமாய் தெரிந்தது. சிரிப்பு வந்தது, எல்லாம் மூட்டைக்குள் வைத்து இருக்கி கொள்ள மட்டுமே அவளால் முடிந்திருக்கிறது. ஐந்து வருடங்களாய் நடமாட்டம் போன பின்னால் இந்த மூட்டை அவள் அணைத்து பிடித்தபடி தூங்கவும், குளிருக்கு பாதுகாப்பு கொடுக்கவும் மட்டுமே இருந்திருக்கிறது.
“சலங்” சத்தம் மெல்ல அதை தேடி எடுத்து தடவி பார்க்க அது கொலுசு என்று புரிந்தது, சின்ன கொலுசு, அடேயப்பா..! நாற்பது வருடங்களாவது இருந்திருக்கும் அந்த கொலுசுக்கு..! இவர்களுக்கு பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு ஆசையாய் ஊரை விட்டு இந்த நகரத்துக்கு வரும்போது தோளில் போட்டு தூக்கி கொண்டு வந்தது, அதிலும் ஒரு கொலுசை காணோம், அது எங்கு போனதோ தெரியவில்லை, இந்த ஒன்றை பத்திரமாக வைத்திருக்கிறாள், பாவம் குழந்தையை பத்திரப்படுத்த முடியவில்லை. அவள் இருந்திருந்தால்..! தங்கள் வாழ்க்கை..!
வாழ்க்கை எப்படி எப்படியோ ஓடிப்போயிருக்கிறது. அவருக்கு ஞாபகம் வர வர அதன் வேகம் தாங்காமல் எழுந்தவர் அந்த மூட்டையை அப்படியே விட்டு விட்டு அந்த கொலுசை சாக்கடையில் வீசிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
மாசி அவரை விட்டு போய் ஆறு நாட்கள் ஓடித்தான் போயிருந்தது. அவள் மட்டும் நினைவில் இருந்தாள். எல்லா இடங்களிலும் சுற்றிக்கொண்டு, கிடைத்த இடத்தில் படுத்து அப்படியே உறங்கினாலும் விழிக்குபோது தான் எங்கிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்.
இன்று என்னவோ அதிகமாக மாசியின் எண்ணம் வருகிறது, கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் பிடித்து வைத்த தண்ணீரை மட மடமடவென குடித்தவர், மயக்கம் வருவது போல இருக்க சட்டென ஒரு இடத்தில் அமர்ந்து கொள்கிறார்.
சாப்பிட்டு இரண்டு மூன்று நாட்களாயிருக்குமா? மாசி போனதில் இருந்து தனக்கும் அவளுக்கும் ஏதாவது சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் போய் விட்டது, அந்த நேரத்திலும் அவருக்கு சிரிப்பை தந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவர், மெல்ல எழுந்து ஒரு வித வைராக்கியமாய் நடப்பது போல நடந்து செல்ல ஆரம்பித்தார்.
“காலை விடிந்திருந்த போது, சாக்கடை ஓரமாய் இருந்த அந்த இடத்தில், பிரித்து போட்டிருந்த மூட்டையில் மிச்சம் மீதியிருந்த துணிகளை அணைத்து பிடித்தபடி உடல் விரைத்து கிடந்தார் இருளப்பர்”
மாநகராட்சி ஊழியர்கள் அவரது உடலை வண்டியில் வைத்து எடுத்து செல்லும் போது அந்த தெருவாசிகள், போவோரும் வருவோர் சொல்லிக்கொண்டிருந்தது “ ரொம்ப வருசமா புருசனும் பொண்டாட்டியுமா இந்த பிச்சைகாரங்க இங்கதான் இருந்தாங்க” அந்த பொம்பளைக்கு கையும் காலும் வேலை செய்யாது, அந்த ஆளுதான் அங்கயும் இங்கயும் பிச்சை எடுத்துட்டு வந்து இந்த பொம்பளைய கவனிச்சுகிட்டிருந்தாரு, போன வாரம் அந்த பொம்பளை செத்து போன பின்னாடி எங்கியோ போயிட்டாரு இந்த ஆளு, ஆனா சரியா அந்த பொம்பளை செத்து ஒரு வாரத்துல இங்கயே வந்து செத்து கிடக்கறாரு
ஆச்சர்யமாக பேசிக்கொண்டார்களா,அதிசயமாக பேசிக்கொண்டார்களா? என்றாலும் மாநகராட்சி ஊழியர்களிடம் அந்த வழியாக வந்து சென்று கொண்டிருந்த ஒரு சிலர் பணம் கொடுத்து, அந்தாளுக்கு நல்லபடியாக காரியம் செய்து முடிக்க சொன்னதும் அங்கு நடந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Nov-22, 3:14 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : pirivu
பார்வை : 88

மேலே