நமக்கான உலகை சமைப்போம்
பட்டதெல்லாம் போதும் மகனே...
எட்டி உதை உன் சோகத்தை
சட்டென விரி உன் சிறகை
எட்டிவிடு சிகரத்தை
எல்லோரும் வியக்க
தட்டு... உனக்கான கதவுகள் திறக்கும்
கேள்... உனக்கான விடைகள் கிடைக்கும்
பார்....உனக்கான பாதைகள் விரியும்
எழு.... உனக்கான உலகங்கள் விடியும்.
உனக்கான உணவை
நீதானே தேடவேண்டும்
உனக்கான அங்கீகாரத்தை
நீதானே உருவாக்க வேண்டும்
உனக்கான சிலுவையை
நீதானே சுமக்க வேண்டும்.
உனக்கான பாதையை
நீதானே சமன் செய்ய வேண்டும்.
சோர்ந்து விடாதே..!
துள்ளி எழு..!
வயிற்றில் எரியும் நெருப்பை
உடலெங்கும் எரிய விடு.
தகுதியில்லை என ஒதுக்கும்
இந்த பாழாய்ப் போன சமுதாயத்தை
எரியும் நெருப்பில் பொசுக்கிவிடு.
எழுந்து வா.... தோழா...
நமக்கான உலகை சமைப்போம்.