95 பெண்களுக்குக் கல்வி அளிக்க மறுப்பது கண்பறித்தலாம் – மாதரைப் படிப்பித்தல் 2
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
பெண்மகள் கெடுவளென் றஞ்சிப் பெற்றவன்
உண்மைநூ லவட்குணர்த் தாமை தன்மனைக்
கண்மறு புருடரைக் காணு மென்றதை
எண்மையாய்த் தவன்பறித் தெறிதல் ஒக்குமே. 2
– மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பெண் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்று அஞ்சி, பெற்றவன் உண்மையான கல்விச் செல்வத்தை அவர்களுக்குத் அளிக்காமலிருப்பது, தன் மனைவிக்குக் கண்கள் இருந்தால் மற்ற ஆண்களைக் காண்பாள் என்று கருதிக் கணவன் அவள் கண்களை எளிமையாகப் பிடுங்கி எறிவதைப் போலாகும்” என்று பெண்களுக்கு கல்வி தேவை என்பதை இப்பாடலாசிரியர் உணர்த்துகிறார்.
மறுபுருடன் - மற்ற ஆண், அயலான். தவன் - கணவன். எண்மை – எளிமை, பறித்தல் - பிடுங்குதல்.

