கண்ணீர் சொல்லாத காதலை கண்கள் சொல்லி விடும்
கண்ணீர் சொல்லாத காதலை
கண்கள் சொல்லி விடும்.
”ஒலகம் ரொம்ப கெட்டுக் கெடக்கு, பாத்துப் போ மக்கா”
என்ற சியாமளாவின் சங்கீதக் குரலுக்கு,
”சரிம்மா” என பதில் அளித்த நீலாம்பரி, உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.
“ நீ நிக்கிற நிலையும் நெல்லு விக்கிற வெலையும், எதுவுமே சரியில்லே. நானும் உன் அக்காமார் ரெண்டு பேரையும் வளர்த்துட்டுதான் இருக்கேன். ஆனால் ஒன்ன மாதிரி எனக்கு யாரும் கவலை கொடுக்கல்ல” என்றாள் சியாமளா. அவள் அப்படி சலித்துக் கொள்ளக் காரணம், நீலா போட்டிருந்த உடைதான்.
வாசலில் கிடந்த ‘ப்ளாட்ஃபார்ம்” எனப்படும் மூன்று அங்குல குதிக்கால் கொண்ட செருப்பினைக் குனிந்து வார் மாட்டி நிமிர்ந்தாள் நீலா. காப்பர் சல்ஃபேட் வண்ணத்தில் மடிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட ’அம்ப்ரெல்லா’ ஸ்கர்ட்’ என்ற பளபளக்கும் வழுவழுப்பான துணியில் தைத்த குட்டைப் பாவாடையும், சிக்கெனப் பிடித்த மாதிரி திமிறிக் கொண்டு இருக்கும் மார்பகங்களை இழுத்துக் கட்டி வைத்த வகையில் ஒரு ரோசாப்பூ வண்ண மேல் சட்டையும் அணிந்து இருந்தாள். குதிரை வால் கொண்டையும் போட்டு அந்தப் பதினான்கு வயது சிறுமி, ’தங் தங்’கென பாதங்களை அழுத்தி வைத்து நடந்தாள். அந்த மாதிரி நடப்பது குடும்பத்துக்கு ஆகாது என அவளது அம்மா பல முறை கூறி இருப்பினும் அவள் அதைக் காதில் வாங்குவதே இல்லை. ப்ளஸ்-2 இறுதி தேர்வு முடிந்த விடுமுறையில் எப்படி பொழுதை போக்குவது என அவள் திணறிக் கொண்டு இருந்தாள். ஒரு தேவாலயம் அவள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருந்தது. தேவாலயத்திற்கு அவள் செல்வதே தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமென வேண்டிக் கொள்ளத்தான். கூடுதலாக, அங்கு ஒரு இளம் ஃப்ரென்சுக்காரர், ‘வெள்ளைக்கார குட்டிச் சாமியார்’ என்று அன்பாக அழைக்கப்பட்டவர் இருந்தார். அவ்வப்போது அந்த இளம் துறவியைக் கண்டால் அவள் புன்னகை புரிவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
”உங்கள் கோவிலுக்குப் போகாமல் இங்கு ஏன் வருகிறாய்”?
என அவர் நீலாவைக் கேட்டபோது, தான் படித்த பள்ளியில் மாதாவிடம் வேண்டிக் கொள்ளும் பழக்கம் தனக்கு வந்து விட்டது என்றும் எல்லா அம்மனும் ஒன்றுதானே எனவும் பதில் அளித்தாள்.
’மா நிறமானாலும் நீலா அழகிதான்’ என அவளது பள்ளித் தோழிகள் அவளுக்கு உசுப்பேற்றி விட்டிருந்தனர். ’பாட்டு டீச்சர்’ என அந்தப் பகுதியில் அனைவராலும் அழைக்கப்படும் சியாமளா, தன் பிள்ளைகளுக்கும் ராகங்களின் பெயரைத்தான் வைத்து இருந்தாள். நீலாம்பரிக்கு முந்தையவள், பைரவி என்றால், அவளுக்கும் மூத்தவள் கல்யாணி. அக்காக்கள் இருவரும் போல் நீலாவுக்கு மோஹனன் என ஒரு தம்பியும் இருந்தான். இருப்பினும் அழகில் இவள் மட்டுமே குறைந்தவள் என அவளது அம்மாவே அடிக்கடி சொல்வதால் அவள் அவர்களை விட்டு விலகியே இருக்கலானாள். தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சிவப்பும்(அப்படி ஒரு நினைப்பு) போய் விடக் கூடாது என்ற பயத்தில் அன்று அவள் வழக்கத்திற்கு மாறாக நிழலைத் தேடித் தேடி நடக்கலானாள்.
சுள்ளென அடித்த மே மாத வெயிலை தன் உள்ளங்கைகளை தூக்கி மறைத்தாலும், வெக்கை என்னவோ அதிகமாக ஏறிக் கொண்டே இருந்தது, அவளைத் தாண்டி ஒரு ஹோண்டா சிட்டி கார் விர்ரெனக் கடந்து சென்றது. ஏற்கெனவெ அது அப்படிச் சென்றதாக அவளுக்கு நினைவுப் பொறி தட்டியது. பத்தடி தூரம் சென்ற போது மீண்டும் அது அவளருகில் வந்து நின்றது. சன்னல் கண்ணாடிகளில் கருப்பு வண்ணப் பிலிம் ஒட்டி இருந்ததால் டக்கென அவளால் காரில் யார் இருக்கிறார்கள் என அறிய இயலவில்லை. காரின் கதவு திறந்தபோது அவள் சிறிதும் எதிர்பாக்காத ஒரு அழகிய இளைஞன் அவளைப் பார்த்து முறுவலித்தான். எட்டாத உயரத்து நிலவாக அவனைப் பற்றி அவளது அக்காக்கள் பேசி இருப்பதை அறிந்திருந்த அவள், பேசுவதற்கு வாயைத் திறக்கு முன் அவன்,
“ஹாய் நீலா, எங்கே போற” என்றான்
”என்னது என் பேர் உனக்குத் தெரியுமா ராஜா?”
”என் பேர் உனக்குத் தெரியும் போது உன் பேரை நான் தெரிந்து வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம். சரி சரி, நீ எங்கே போகிறாய் சொல் உன்னை அங்கே விட்டு விடுகிறேன் “ என்றான்.
”இந்த சாலை முடிவில் ஒரு தேவாலயம் இருக்கிறது”
“சரி வா உன்னை அங்கு இறக்கி விடுகிறேன், வா தயங்காதே, ஏறிக் கொள்”
அவள் ஏதொ கடவுளே வந்து தன்னை திடீர் பணக்காரி ஆக்கி விட்டதாக நினைத்து மெல்ல ஏறி அவன் அருகில் அமர்ந்தாள்.
மிகப் பிரபலமான நடிகர் ஒருவரின் மகனான ராஜா அழகாலும் அந்தஸ்தாலும் அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு கனவுக் கண்ணனாக காட்சி அளித்தான். அவன் வயதொத்த இளம் பெண்கள், அவனைக் காணவும் அவனுடன் நட்பு பாராட்டவும் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அழகில் குறைந்த தன்னை அவன் இப்படி அழைத்துச் செல்வது அவளைக் கனவின் மாய உலகில் மூழ்கடித்தது. அவன் சொன்னதுபோல், கார் தேவாலயத்திற்கு செல்லாமல் அதனையும் தாண்டி நடிகருக்குச் சொந்தமான பண்ணை வீட்டிற்குள் நுழைந்தது. வண்ணப் பூஞ்செடிகளுக்கும் செழிப்பான மரங்களுக்கும் நடுவே அலங்காரமாய் வீற்றிருந்த கப்பல் போலிருந்த, அந்த கண்ணாடி மண்டபம் போன்ற வீட்டின் போர்டிகோவில் கார் நின்றது. அவன் அவளது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு நேரே படுக்கை அறைக்குச் சென்றான். குடிக்கக் கொடுத்த கூல் ட்ரிங்கில் என்ன மாயத்தைக் கலந்தானோ, கொஞ்ச நேரத்தில் போதையில் அவள் தானே தன் சட்டையை அவிழ்த்துக் கொண்டாள். சின்னஞ் சிறியவர்களின் அந்தரங்கத்தை நாம் பார்க்கக் கூடாது. அன்று ஒரு மணி நேரம் தாமதமாக பிரமை பிடித்தவள் போல் ஒன்றும் பேசாமல் வீடு திரும்பினாள். வீட்டில் அல்லது நட்பு வட்டத்தில் ஒருவரிடமும் இதைப்பற்றி மூச்சுக் கூட விடவில்லை. அதன் பின், அவனை அவள் பார்க்கவில்லை.
ஒரு மாதம் கடந்து போனது. நடிகர் நடிகைகள் சிலரை ஏற்றி வந்த மிகப் பெரிய கார்களும் பேருந்துகள் பலவும் அவளது வீட்டுப் பக்கம் இருக்கும் பிடாரிப் புளிய மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தன. அவர்களைக் காண எங்கு இருந்தெல்லாமோ வந்த கூட்டம் அலை மோதியது. அந்த நடிகரை வைத்து பல படங்களை எடுத்து மிகப் பெரிய டைரக்டர் எனப் பெயர் வாங்கியவரின் மகளுக்கும், அந்த நடிகரின் மகனாகிய ராஜாவுக்கும் திருமண நிச்சயம் நடப்பதாக கூறினர். அது ஒரு பிசினஸ் ஒப்பந்தம், திருமணம் என்ற பெயரில் நடக்கிறது என மக்கள் பரவலாகப் பேசுவதாக ஊடகங்கள் கூறின. நீலாவின் அக்காக்களான பைரவிக்கும் கல்யாணிக்கும் கூட அந்த ராஜாவின் மீது ஒரு கண் இருந்துள்ளது என்பது
“ இனி நமக்கு வாய்ப்பே இல்லை” என்று அவர்கள் வாய் விட்டே கூறியதில் தெரிந்தது. நீலா மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், கழுத்தில் முள் சிக்கியவளைப் போல் கழிவறை கொடுக்கும் தனிமையில் சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.
அவனிடம் போய் தன்னை ’ஏன் மறந்தான்’? எனக் கேட்க அவளிடம் என்ன இருக்கிறது. எப்படிப் போவாள்?, எங்கு சந்திப்பாள்?. ஒன்றுமே புரியவில்லை. பரஸ்பர மயக்கத்தில், வயதுக் கோளாறில் ஒரு நாள் இருவரும் மனமொப்பி செய்த தவறு அது. அதைப் பெரிது பண்ண என்ன இருக்கிறது என எண்ணினாள். தேவாலயம் செல்வதை அவள் நிறுத்தவில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது என அவளுக்குத் தெரியும்.
ஒரு நாள் மதிய வேளையில், பக்கத்து வீட்டு சுட்டிப் பையன் விஜியுடன் அவள் மணலில் கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் ஆடிக் கொண்டு இருந்தாள். அப்போது அந்த பொடியன் நீலாவைப் பார்த்து,
”என்ன அக்கா, இவ்ளோ குண்டாயிட்ட…..வயிறு கூட பலூன் மாதிரி உப்பி இருக்கிறது” என்றான்.
சமையல் அறையில் மாவாட்டிக் கொண்டிருந்த சியாமளா அம்மா காதில் அது விழுந்து தொலைத்தது. இடியுண்ட நாகம் போல் துடித்து எழுந்து வந்தவள், நீலாவினை தர தரவென இழுத்துக் கொண்டு உள் அறைக்குள் கூட்டிச் சென்று மேற்சட்டையினைத் தூக்கி ஆராயலானாள்.
“என்ன ஒரு தாய் நான். மாதா மாதம் எல்லாம் ஒழுங்காய் நடக்கிறதா என கவனிக்கத் தவறி விட்டேனே’ என தன்னையே நொந்து கொண்டாள்.
”என்ன ஆச்சு சொல்லுடி, யாருடி அவன்?”
நீலா அன்று நடந்த அந்த நிகழ்வினை ஒன்று விடாமல் கூறினாள். தனது மற்ற பிள்ளைகளுக்குத் தெரியாமல் சியாமளா அவளை டாக்டரிடம் கூட்டிச் சென்று காட்டினாள். அவளை சோதித்துப் பார்த்த டாக்டர் ஜேம்ஸ்,
”அவளுக்கு கரு உருவாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. கருவை கலைக்க முடியாது. தாய் உயிருக்கு ஆபத்து நேரிடும்” என்றார்.
”கலைக்க வேண்டாம் அம்மா, எனக்கு என் குழந்தை வேண்டும்” என நீலா தீர்க்கமாக கூறியபோது அவளைக் கொன்று விடுவது போல் பார்வையால் எரித்து விட்டு,
“அப்ப என்னதான் செய்ய முடியும் டாக்டர்?” என சியாமளா டாக்டரிடமே ஆலோசனை கேட்டாள்.
“காதும் காதும் வைத்ததுபோல், சத்தம் காட்டாமல் கலியாணம் செய்து வைத்து விடுங்கள் “
”இவளை இந்த நிலையில் எவன் கட்டிப்பான். ஆண்டவா, இது என்ன கொடுமை. இவளுக்கு முன்னால் குத்துக் கல்லாட்டம் ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்கு. எல்லாம் என் தலை விதி என்று கூறினாள்.
நீங்கள் அந்தப் பையனின் வீட்டில் பேசிப் பாருங்களேன்” என்ற டாக்டரின் ஆலோசனை அப்போதைக்கு ஒரு தீர்வாக இருந்தது
அந்தப் பையனிடமே கேட்டுப் பார்க்கிறேன்” என்று டாக்டரிடம் கூறி விட்டு இருவரும் மொளனமாக வீடு சேர்ந்தனர்.
ஆனால் சியாமளாவுக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்து விட்டது. சரி பார்ப்போம். ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு காரியத்தில் இறங்க வேண்டியதுதான்.
எப்பொதும் போல் அல்லாமல் கோடையில் அன்று காலையில் மழை பெய்திருந்தது. ஒரு வித சிலுசிலுப்புடன் குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்தது. காலை ஒன்பது மணி ஆகியும் சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. தூரத்தில் இருந்த டீக் கடையில் இருந்து “பூ மாலையில் ஒரு மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது. எந்தன் வீடு தேடி வந்தது. என்னை வாழ வா என்றது” என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது. இது தனக்காகவே கடவுள் அனுப்பிய பாடல், நல்ல சகுனம், என நீலா நினைந்தாள். நீலாவை ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டே நடந்த அவளது தாய்,
“நான் இல்லாத சாமியையெல்லாம் கூப்பிட்டுக் கொண்டு பயத்தில் நடக்கிறேன், நீ பாட்டை ரசிக்கிறாய். கொஞ்சம் கூட கவலையே இல்லை உனக்கு. எல்லாம் என் தலை எழுத்து, கண்ட கண்ட நாய் காலெல்லாம் நான் பிடித்து அழனும்” என சொல்லி முடிக்கும்போது ராஜாவின் வீடு வந்து விட்டது.
வாசலில் நின்றிருந்த காவலர், அவர்கள் அம்மாவைப் பார்க்க வேண்டும் எனக் கூறியதால் ஏதொ நன்கொடை கேட்க வந்தவர்கள் போலும் என நினைத்து இண்டர்காமில் உள்ளே அனுப்ப அனுமதி கேட்டார்.
”அவர்களை உள்ளே அனுப்பு” என்ற கட்டளைப்படி உள்ளே அனுப்பினார்.
எதோ சொர்க்கத்தில் இருப்பது போல் பளபளவென இருந்த பித்தளை பூச்சாடிகளும், வண்ணத் திரைச் சீலைகளும், சோஃபா செட்டும், அலங்காரத் தொங்கு விளக்குகளும் பார்த்து வாயடைத்துப் போய் நின்றாள் சியாமளா
தயங்கி தயங்கி உள்ளே வந்து நின்றவர்களைப் பார்த்து ”உட்காருங்கள்” என்றார் நடிகரின் மனைவி. அவரும் ஒரு முன்னாள் நடிகை என்பதால், அவரும் ஆச்சரியமாகப் பார்க்க வேண்டிய காட்சிப் பொருளாக மிளிர்ந்தார்.
”வீட்டில் ராஜா இல்லையா? என்று நீலாவின் அம்மா கேட்ட உடனேயே இது ஏதோ விவகாரம் என உணர்ந்த அந்த முன்னாள் நடிகை, ”இல்லையே” எனச் சொல்லி மாடியைப் பார்க்க அங்கு அவன் நீலாவைப் பார்த்து
“ஹாய் “எனக் கையசைத்துக் கொண்டிருந்தான்.
”ஓ, வந்து விட்டாயா?” என சமாளித்து,
”என்ன விஷயம் சொல்லுங்கள். நன்கொடை ஏதாவது வேண்டும் என்றால் அது அவர்தான் கொடுப்பார். வேறு கல்லூரி நிகழ்ச்சிகள் என்றால் என்னிடம் கூறுங்கள்” என்றார்.
“அம்மா, இதுதான் அந்த நீலா, ப்லீஸ் மா, இவளையே எனக்கு கட்டி வைத்து விடு.” என்றான் ராஜா.
”சரி சொல்லுங்க. என்ன விஷயம், பொன்னு குளிச்சு எத்தனை மாசம் ஆவுது? எவ்வளவு பணம் வேணும்?
நேரடியாக விஷயத்துக்கு வந்து விட்டார் அந்த பணக்கார நடிகை. கற்பு என்பதெல்லாம் கால் தூசுக்குச் சமம் என்பது அவர் பேசும் தொனியில் தெரிந்தது.
”எங்களுக்கு பணம் ஏதும் வேண்டாம். எங்க பொண்ணை ஒங்க பையனுக்கு கட்டி வையுங்க, உங்களுக்கு கோடி புண்ணியம் வரும்.” என்றார் சியாமளா.
அந்தப் பக்கம் திரும்பி, நீலாம்பரியை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையாலேயே அளந்த அந்த நல்ல பெண்மணி,
“இது ஒன்னும் நல்ல பொண்ணு மாதிரி தெரில. உங்க வீட்டுப் பொண்ணுங்க வெளயாடுரதுக்கு என் பையந்தான் கெடச்சானா.?”
திமிராக பேசி விட்டு மலத்தை மிதித்தவர் முகத்தைச் சுளிப்பது போல் முகம் சுளித்தார் அந்த கற்புக்கரசி.
“அம்மா, அம்மா, எனக்கு அந்த கல்யாணம் வேண்டாம்மா” என்றான் ராஜா.
”என்னடா, நீ என்ன சொல்ற, ஏதாவது புரிஞ்சுதான் பேசுறியா? ஒங்க அப்பாவை எதிர்த்து நீ இந்த பொண்ணை கல்யாணம் பன்னா ஒனக்கு ஒரு பைச கூட கெடைக்காது. நானும் ஒங்கூட சேர்ந்து பிச்சைதான் எடுக்கனும்.
“இல்லமா எனக்கு நீங்க நிச்சயம் பண்ணது ஒரு வியாபார ஒப்பந்தம் அவள் ஒரு காட்டேரி. கண்டபடி கண்டவன் கூட சுத்துறா. கேட்டா போடா ஒன் யோக்கியதை எனக்கு தெரியும்கிறா. அவள் வேண்டாம்ம்மா, ப்ளீஸ்”.
”சரி, ஒங்க அப்பாகிட்ட நான் இதைப் பத்தி பேசறேன். நீங்க போங்க, நல்ல சேதியே வரும்.” அவர்களை துரத்தாத குறையாக வாசலுக்கு வந்து நின்றதில், சியாமளா நம்பிக்கை ஏதுமின்றி நடந்தார்..
எதிர்பாராத இந்த திருப்பத்தில் கால்கள் தரையில் பாவாமல் நீலா மிதக்கலானாள். அடுத்த நாள் காலையிலேயே ராஜா அவள் கோவிலுக்கு செல்லும் வழியில் அவளைப் பார்த்து,” எல்லாம் ஓகே” என்றான். தைரியமாக அவளை இழுத்துக் காரில் போட்டுக் குலவினான்.
பத்து நாட்கள் போயிருக்கும். நடிகருக்கும் அந்த டைரக்டருக்குமான சம்பந்தம் உடைந்தது என்று தினசரித் தாள்களில் செய்தி வெளி வந்தது. ஆயினும் டைரக்டரின் இரு மகன்களும் ராஜாவுக்கு நல்ல நண்பர்கள் என்பதால், புத்தாண்டு பார்ட்டிக்கு வருவாயா என அவனைக் கேட்டனர். அவர்களது தங்கையை அவன் நிராகரித்து விட்டாலும் பழைய நட்பு மாறாமல் அவர்கள் இருந்ததால், ராஜாவும் வருவதாகச் சொல்லி விட்டான்.
இரண்டு மணி நேரத்தில் சென்று விடக்கூடிய மலை வாசஸ்தலத்தில் ஒரு பயணியர் விடுதியில் அந்த பார்ட்டி ஏற்பாடாகி இருந்தது. டைரக்டரின் மகன்கள் இருவரும் ராஜாவை தங்கள் காரிலேயே ஏற்றிக் கொண்டு சென்றனர். நகர எல்லை தாண்டியதுமே, பீர் பாட்டிலைத் திறந்து குடிக்க ஆரம்பித்து விட்டனர்,
ஒரு நீண்ட கொண்டை ஊசி வளைவில் ராஜா காரில் இருந்து வெளியே வீசப்பட்டு எதிரில் வேகமாய் வந்த லாரியில் தலை நசுங்கி இறந்து போனான்.
என்னதான் அந்த லாரி அந்த டைரக்டருக்கு சொந்தமானது என்றாலும், குடித்திருந்த ராஜா தலத்தில் இறந்து விட்டதால் லாரியில் விழுமுன் உயிர் இருந்ததா அல்லது இறந்தபின் லாரியின் முன் வீசப்பட்டானா என்பதெல்லாம் பெருங் கேள்விகளாகி பத்திரிகைகளுக்கு நல்ல அவல் கிடைத்தது., டைரக்டருக்கோ பல லட்சங்கள் குறைந்து, அவருடைய மகன்கள் கொலைகாரர்கள் என்ற பட்டம் வராமல் தப்பினர்.
நீலா நிலை தடுமாறாமல், ஒன்றுமே நடவாதது போல் இருந்தாள். கண்ணீர் விடக் கூட இல்லை. சியாமளா அப்படியே ஆடிப் போய் விட்டாள்.
”நீ செத்தாலும் பரவாயில்லை, கலச்சுடலாம்” என சியாமளா மீண்டும் கூறிய போது, அந்தப் பிள்ளை தனக்கு வேண்டும் எனப் பிடிவாதமாகக் கூறினாள் நீலா.
வீட்டில் அவள் வேண்டாத பொருளாகி, அக்காமார் கையில் அடி உதை என வாங்கி கட்டிக் கொண்டாள்.
”பேசாமல் நீ செத்துத் தொலச்சிருக்கலாம். இப்ப எங்களை எவனும் கட்டிக்க மாட்டான்” எனச் சொல்லி சொல்லி அவளை எல்லோரும் அடித்தனர். அனைத்தையும் அவள் எப்படித்தான் தாங்கி கொண்டாளே, அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
அவமானம் தாங்காமல் அவர்கள்,இருந்த இடத்தை விட்டு முன் பின் தெரியாத அடுத்த ஊரில் வாடகை வீட்டுக்கு குடியேறினாலும், மருத்துவ மனைக்கு பழைய ஊருக்கே செல்ல வேண்டி இருந்தது.
காலம் யாருக்காகவும் காத்திருக்காது. நேரம் வந்தது, நீலாவுக்கு வலி ஏற்பட டாக்டர் ஜேம்ஸ் பணி புரியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
குழந்தையும் நல்ல நேரத்தில் பிறந்தது. ஸ்டாஃப் நர்ஸ் ஸ்டெல்லா குழந்தையைக் குளிப்பாட்ட எடுத்துச் சென்று, சிறிது நேரத்தில் கொண்டு வந்து கிடத்தினாள். அங்கு வந்த டாக்டரும் சரி, செவிலித்தாயும் சரி அந்த குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். சற்றே கண் விழித்த நீலாவும், வெள்ளை வெளேரென வெள்ளைக்கார பிள்ளை போல் நீலமணிக் கண்கள் கொண்டு அந்தக் குழந்தை மிக மிக அழகாக இருப்பதைக் கண்டு மீண்டும் மயங்கி விட்டாள். டாக்டர் ஜேம்ஸ் மற்றும் அந்த செவிலியரும் அர்த்த புஷ்டியாக சிரித்து விட்டு,
“அந்த மிஷினரி ஃபாதர் இப்படி எத்தனை பேருக்கு பிள்ளை கொடுத்தாரோ”? எனக் கேட்பது நீலாவின் அம்மா காதுகளிலும் விழுந்தது. அவள் அப்படியே உறைந்து போனாள். ராஜா கொலையுண்டு இறந்தபோது நீலாவின் கண்களில் வராத கண்ணீர் சொல்லாத, இல்லாத, பாழாய் போன ‘காதலை’ இந்த குழந்தையின் கண்கள் சொல்லி விட்டதென அவளுக்கு உண்மை நிதர்சனமாகப் புரிந்தது. நீலாம்பரி எனப் பெயர் வைத்து விட்டு நான் அவளை சரியாக வளர்க்காமல் உறங்கி விட்டேனே என எண்ணியவள், விடு விடென வீடு நோக்கி நடக்கலானாள். மனித வாழ்வின் சிக்கல்களை சிக்கல்கள் இல்லாத உரை நடையில் நான் உலகுக்கு எப்படிச் சொல்வேன் என எண்ணியவாறே அவள் நடந்தாள். என்ன செய்யப் போகிறாளோ அது அந்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும்.