ஒரு மனிதன் பிறக்கிறான்
ஒரு மனிதன் பிறக்கிறான்
பெருமாள் காலை ஆறுமணிக்குக் கெல்லாம் தன் டாக்ஸியை வீட்டிற்கு வெளியில் வைத்து கழுவித்
துடைத்து உள்ளே இருக்கும் சில கடவுள் படங்களுக்கு ஒரு ஊதுவத்தி வைத்து விட்டு பின் ஒரு வாய்
காப்பியை அம்மாவிடம் வாங்கிக் குடித்தபின் வண்டியை எடுப்பது வழக்கம். அப்படி எடுத்தபின்
வீட்டிற்கு வருவதற்கு இரவு மணி பதினொன்று ஆகிவிடும்.அவனுடைய அம்மா அவன் எவ்வளவு
தாமதமாக வந்தாலும் கேட்டு திறக்கும் ஓசையைக் கேட்டவுடன் எழுந்து அவனுக்கு ஏதாவது சூடாக
செய்து தட்டில் வைப்பாள். அவன் எவ்வளவு தடவை அவளிடம் தானே வந்து செய்து கொள்கிறேன் நீ
சிரமப்படத் தேவை இல்லை எனக் கூறினாலும் அவள் இதில் என்னப்பா சிரமம் எனக்கு உன்னை
நல்ல படியா பார்த்து உனக்கு என் கையால் எதையாவது வைத்து விட்டு படுக்க போனால் தான்
எனக்குத் தூக்கம் வருகிறது. நான் என்ன பண்ணுவேன் என அவன் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி
வைத்து விட்டு அவன் சாப்பிடும் வரை அங்கேயே உட்கார்ந்து விட்டு பின் தான் தனது அறைக்குத்
தூங்கச் செல்வாள்.
அவர்கள் இருவரும் ஒரு சின்ன ஓடு மேய்ந்த வீட்டில் வசித்து வந்தனர். பணம் அதிகமாக இல்லை
என்றாலும் மகிழ்ச்சிக்குக் குறை ஏதும் இல்லை. அவன் கொண்டுவரும் பணத்தில் வண்டியின்
வாடகை போக தினமும் ஆயிரம் ரூபாய் நிற்கும். வெளியூர் செல்லும் யாரேனும் டாக்ஸியை எடுத்து
விமானநிலையத்தில் இறங்கினால் இரவு நேரம் என சிலர் அவனுக்கு நூறு இருநூறு கேட்ட
வாடகைக்கு மேல் கொடுப்பதும் உண்டு. தான் பள்ளியில் படித்த பொழுது கற்ற ஆங்கிலமும் அக்கம்
பக்கத்தில் வாழும் குடும்பங்களில் பேசும் பொழுது தெரிந்து கொண்ட வடநாட்டு மொழியும் சில நேரம்
பயணம் செய்வோரிடம் பேசுவதற்கு உதவும்.அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சில நோட்டுகளை
அன்பளிப்பாக தருவதும் உண்டு. இப்படி வந்த பணத்தினால் அவர்கள் வாழ்க்கையைக் கடன்
வாங்காமல் நடத்த முடிந்தது. உணவிற்கும் உடுத்தும் துணிக்கும் தட்டுப்பாடு இல்லை. ஒரு நாள் ஒரு
குடும்பம் அவன் வண்டியில் அமர்ந்து விமான நிலையம் செல்ல கூறிட அவனும் அவர்களை ஏற்றிக்
கொண்டு பேசியபடியே ஓட்டிச் சென்றான்.
விமான நிலையத்திற்குப் பத்து கிலோமீட்டர் இருக்கும் வேளையில் மழை பெய்ய ஆரம்பிக்க, எல்லா
வண்டிகளும் மெல்ல செல்ல இரவு விமான நிலையம் செல்லும் பொழுது பதினொன்று ஆகி இருந்தது.
பயணம் செய்தவர்கள் இறங்கிச் சாமான்களை எடுத்துத் தள்ளு வண்டியில் வைக்க,அதுவரை நின்று
பணம் வாங்கி அங்கிருந்து கிளம்பும் பொழுது இரவு பதினொன்று நாற்பது. வீட்டிற்கு விரைந்து
வண்டியைச் செலுத்தி கொண்டிருந்தான் பெருமாள். அந்த நள்ளிரவில் பிரதான சாலையில் ஓரு
பெண்மணி, தெரு விளக்கின் கீழே நின்று கொண்டு கையசைத்து அவனது காரை நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகணும்""நான் வரமுடியாது அம்மா . சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".என்று
கூறியவனிடம்
"என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார்.
அப்பெண்மணி சொன்ன அந்த சொல்லில் அவனுள் ஒரு மனிதாபிமானம் வந்து அவனை அங்கே
நிறுத்தியது.
"நீங்க கூறிய இந்த சொல்லை என் தாய் சொல்லுவதைப் போல எண்ணி நான் வரேன். இங்கிருந்து
ஆஸ்பத்திரி போக ரூபா 500 ஆகும்" என்றான் பெருமாள்.
அப்பெண்மணி 500 ரூபா என்னப்பா 1000 ரூபாய் கேட்டால் கூட சம்மதம் என்பதுபோல்
வேகவேகமாக தலையாட்டி விட்டு வீட்டிற்குள் சென்றாள்.காரில் அவர்களுடன் மருத்துவமனைக்குக்
காரை திருப்பினான். கார் ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட்
மூடப்பட்டது. அந்த கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. இரண்டு ரெயில் வண்டிகள்
எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.
இப்போது காரை இன்னும் சற்று வேகமாக ஓட்டி மருத்துவமனையில் நிறுத்தினான். அங்கு
நின்றிருந்த வெள்ளை ஆடை தரித்தவனிடம் அவனே சென்று பேசி உடனே சக்கர நாற்காலிக்கு வழி
செய்தான். நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர்
மல்க, அந்த பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.
பெருமாள் அமைதியாக அங்கேயே நின்றிருந்தான். அவனது மனம் அந்த இடத்தில் இல்லை அந்த
பெண்ணின் அலறல் அவன் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.அவனை அறியாமல் கடவுளிடம்
தன் வேண்டுதலைத் தெரிவித்து கொண்டிருந்தான். மனதுக்குள் இருந்த ஒரு நெருடல் கண்களில்
நீராகி வழிந்தது.
ஒரு தகவலும் வராததால் அந்த பெண்மணி மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தாள் சற்று நேரத்தில்
மருத்துவர் அந்த பெண்ணிடம் வந்து சுகப்பிரசவம் நடந்துள்ளது, ஆண் குழந்தை பிறந்துள்ளதாக
தெரிவித்தார்.
அந்த பெண்மணி பெருமாளிடம் "தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை
நீட்டினாள். "வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற்று எடுக்க எவ்வளவு
வேதனைப்பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்குப் புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைத்து
கொள்ளுங்க தங்கச்சியை நன்றாக பார்த்துக்குங்க " என்று சொல்லியபடி அங்கிருந்து நடக்க
ஆரம்பித்தான்.
வந்து காரில் உட்கார்ந்தவுடன் தனது கைப்பேசியை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல்
பண்ணினான்.
"ஹலோ முதியோர் இல்லமா?"
"ஆமாங்க நீங்க யாரு இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"
"மன்னிக்கவும். என் பெயர் பெருமாள் இரண்டு நாள் முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தரை
உங்க இல்லத்துல வந்து சேர்த்தேன்.. அவுங்க அனாதை இல்லைங்க அவுங்க என்னைப் பெற்ற தாய்.
நாளைக்குக் காலையிலே அவர்களை கூட்டிட்டு போக வரேன். முதியோர் இல்லத்தின் போன் எடுத்த
அலுவலர் மறுமுனையில் பதில் அளிக்கும் முன்னே கைபேசியைக் கட் பண்ணி விட்டு வண்டியை ஒரு
தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான் பெருமாள்.
மரத்துப் போன இதயமும் கோபம் கொண்ட உள்ளமும் மனிதாபிமானத்தை இழக்கச் செய்து
மனிதனை மிருகமாக்குகிறது.
நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... உண்மையில் ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது' ஆம் இது
உலக நீதி
பெருமாள் இன்று மீண்டும் மனிதனாகப் பிறந்தான்.