517 விலங்கினை வாட்டுவோர் மக்களையும் வாட்டுவர் - விலங்கினத்துக்கு இடர் செய்யாமை 4
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
ஊமரைப் பித்து ளாரை
..யுணர்வில்சே யரைமின் னாரைப்
பாமரர் தம்மை மிக்க
..பரிவொடுங் காத்தல் போல
நாமற விலங்கைக் காப்பர்
..நல்லவர் அதைவ ருத்துந்
தீமன முடையோர் துன்பஞ்
..செய்வர்மா னிடர்க்கும் அம்மா. 4
- விலங்கினத்துக்கு இடர் செய்யாமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
ஊமைகளை, பித்துக் கொண்டோரை, அறிவு நிரம்பாத பிள்ளைகளை, மாதரை, அறிவிலாப் பெருமக்களை மிகுந்த இரக்கத்துடன் பாதுகாப்பதுபோல, நல்லவர் விலங்கினங்களை அச்சம் நீங்கும்படிக் காப்பர்.
அவ் விலங்கினங்களைத் துன்புறுத்தும் கொடுமனம் உடையோர், அப் பழக்கத்தால் மக்களுக்கும் துன்பஞ் செய்வர்.
நாம் - அச்சம்.