அடுக்குமாடி இல்லங்களில் நடக்கக்கூடிய சில விஷயங்கள்

அடுக்குமாடி சங்கச் செயலாளர்: "சார், உங்க வீட்டில் இரவில் மிகவும் அதிக சத்தமாக வைத்துப் பாடல்களைக் கேட்பதாகப் பக்கத்துக்கு வீடுகளிலிருந்து புகார் வருகிறது."
வளாகத்தில் குடியிருப்பவர்: "என்ன சார் சொல்லுறீங்க?"
அடுக்குமாடி சங்கச் செயலாளர் (உரத்த குரலில்): "உங்க வீட்டில் இரவில் மிகவும் அதிகமாக சத்தம் வருகிறது என்று பலர் புகார் கூறுகிறார்கள்".
வளாகத்தில் குடியிருப்பவர்: "ஆமாம் சார், இரவில் புகாரி ஹோட்டல்களில் அதிகமாக கூட்டம் இருப்பதால் சத்தம் இருக்கும். அதனால் நான் அந்தமாதிரி ஹோட்டலுக்கெல்லாம் போவதே இல்லை".
அடுக்குமாடி சங்கச் செயலாளர்: " கொஞ்சம் உங்க மனைவியை வரச்சொல்லுங்க"
வளாகத்தில் குடியிருப்பவர்: "நிச்சயமாக. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், சில பேருக்கு இறைவன் கெடுத்த வரம்".
அடுக்குமாடி சங்கச் செயலாளர்( சைகையுடன்): "ஏன்யா செவிட்டு டமாரங்கள் எல்லாம் அபார்ட்மென்டுக்கு வந்து உயிரை எடுக்கிறீங்க".
வளாகத்தில் குடியிருப்பவர்: "இங்கே குரோட்டன் செடி வைக்கவே இடம் இல்ல. எங்கே போய் எட்டு மரங்களை நடுவது".
அடுக்குமாடி சங்கச் செயலாளர் ஏதோ முனுமுனுத்துக்கொண்டே அங்கிருந்து வேகமாக வெளியேறுகிறார்.
வளாகத்தில் குடியிருப்பவர் (தனக்குத்தானே) : "சொல்றதை உரக்க சொல்லாமல் தனக்குத்தானே பேசிக்கொண்டு சென்றால் எப்படி என் காதில விழும்?"
&&&

ஸ்விக்கி உணவு தருவிப்பவர்: "சார் இது சுப்ரமணியன் வீடுதானே?"
வீட்டிலிருப்பவர்: "ஆமாம் நான்தான் குரு சுப்ரமணியன்"
ஸ்விக்கி தருவிப்பவர்: "இந்தாங்க நீங்க ஆர்டர் பண்ண உணவு".
வீட்டிலிருப்பவர்: "நான் சமோட்டோவில்தானே ஆர்டர் பண்ணினேன்".
ஸ்விக்கி தருவிப்பவர்: "இல்லை சார், நீங்க தப்பாக சொல்லுறீங்க. ஸ்விக்கியில் தான் பண்ணியிருப்பீங்க".
அந்த நேரத்தில் ஸ்விக்கி உணவு தருவிப்பருக்கு ஒரு போன் வருகிறது.

உடனே அவர் "சாரி சார், உங்கவீட்டுக்குக்கீழே இருக்கும் புரு சுப்ரமணியம்தான் இந்த ஆர்டர் பண்ணினாராம்."
அப்போது சமோட்டோ உணவு தருவிப்பவர் குரு சுப்ரமணியன் வீட்டிற்கு வருகிறார்: "சார் இந்தாங்க உங்க ஆர்டர். நான் தவறிப்போய் கீழே உள்ள புரு சுப்ரமணியம் வீட்டிற்கு இதைக் கொண்டுபோனபோது அவர் "நான் இந்த ஹோட்டலிலிருந்து ஆர்டர் பண்ணவில்லையே" என்று சொல்லி மாடியில் உங்க வீட்டில் கொடுக்கச்சொன்னார். நீங்கள் டெலிவரி அட்ரஸில் கீழே உள்ள புரு சுப்ரமணியம் வீட்டு நம்பரைக் கொடுத்துவிட்டீர்கள்".
குரு சுப்ரமணியன்: "ரொம்ப நன்றிப்பா. ஸ்விக்கி பார்சல் ரொம்ப சின்னதாக இருந்தது என்பதால் சந்தேகம் வந்தது" .
குரு சுப்ரமணியன் வீட்டுப்பக்கத்து வீட்டுக்காரர் திருசுப்ரமணியன் ஸ்விக்கி தருவிபரிடம்: "என்னோட ஆர்டர் ஏன் இன்னும் வரவில்லை?"
ஸ்விக்கி தருவிப்பவர்: "இதோ சார் உங்க ஆர்டர் , இங்கே கொஞ்சம் பிரச்சினை ஆகிவிட்டதால் நேரமாகிவிட்டது".
திருசுப்ரமணியன்: "என்னப்பா பார்சல் ரொம்ப சின்னதாக இருக்கிறது. நான் ஆறு மசால் தோசை, பத்து வடை, அஞ்சு பிளேட் பூரி மசாலா ஆர்டர் பண்ணியிருந்தேனே. இந்தப் பையில் ரெண்டு பிளேட் இட்லி மட்டும்தானே இருக்கிறது".
ஸ்விக்கி தருவிப்பவர் அவசரஅவசரமாக குரு சுப்ரமணியன் வீட்டிற்குப்போய் "சார், சாரி சார், உங்க பக்கத்துவீட்டு திருசுப்ரமணியன் பார்ஸலை தவறிப்போய் உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். அந்த பார்ஸலைக் கொடுங்கள்"
குரு சுப்ரமணியன்: "அடாடா, என் மனைவி இப்போதான் ரெண்டு பிளேட் பூரி மசாலாவை முழுங்கினாள், சாரி, சாப்பிட்டுவிட்டாள், ஆங்கிலப்புதுவருடம் என்பதால் ஹோட்டலில் பூரியும் தோசையும் இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று நினைத்துவிட்டாள். இன்னும் மூன்று பிளேட் பூரியும் நாலு மசாலா தோசையும் பிரிக்கலாமலே இருக்கிறது. இதைக்கொண்டு பக்கத்துக்கு வீட்டில் கொடுத்துவிடு. என்னுடைய ரெண்டு பிளேட் இட்லியையும் அவர்களுக்கே ஃபிரீயாக கொடுத்துவிடு".

அந்த நேரம் திருசுப்ரமணியம் குரு சுப்ரமணியம் வீட்டிற்குள் மனைவியுடன் நுழைகிறார்: "பரவாயில்லை சுப்ரமணியம். இப்போ இருக்கிற பூரியையும் தோசையையும் நாங்கள் உங்களுடனேயே சேர்ந்து சாப்பிடுகிறோம். மதியம் எங்கள் லஞ்சிற்கு நீங்கள்தான் ஸ்விக்கியில் ஆர்டர் பண்ணி தருவிக்கவேண்டும். லன்ச் முடித்துவிட்டுத்தான் நாங்கள் வீட்டிற்கு செல்வோம்".

குரு சுப்ரமணியத்தின் மனைவி, வாயில் அடைத்த பூரி மசாலாவுடன் குருசுப்ரமணியத்தை முறைத்துப் பார்த்தாள். குரு சுப்ரமணியன் ஒன்றும் தெரியாததுபோல் மசாலா தோசையை விண்டு வாயில் போட்டுக்கொண்டு ஜன்னல்வழியாக ஒன்றும் தெரியாததுபோல் வெளியே வேடிக்கை பார்த்தார். ஆனால் அவர் மனதில் மதியம் மிகவும் சிக்கனமாக எந்த ஹோட்டலிலிருந்து உணவு தருவிக்கவேண்டும் என்ற நினைவுதான் இருந்தது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (12-Jan-23, 10:51 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 77

மேலே