பொங்கட்டும் பானை பொங்கட்டும் மனித நேயம்
மனிதநேயம் மறைவதில்லை பூமியில் இருந்து
மிளிரத்தான் செய்கிறது எக்காலமும் இக்காலமும்
அனாதையாய் பெற்றோரை விட்டோரும் உண்டு
அரவணைத்து காத்திடும் காப்பகமும் உண்டிங்கு
காசுக்கு கல்வியை விற்போரும் உண்டு
கடமையாய் கற்றுக் கொடுப்போரும் உண்டிங்கு
இரத்ததானம் செய்பவன் யோசிப்பது இல்லை
இரத்தம் கொடுப்பது யாருக்கு என்று
உற்ற வருமானம் கிட்டா விடினும்
உழவுத் தொழிலின் சக்கரம் நின்றதில்லை
புசிப்பது யாரென்று பாரான் விதைப்பவன்
புவியின் பசியொன்றே சிந்தனையில் நிற்கும்
நல்லெண்ணம் வித்திட்டு தீயெண்ணம் களைந்தால்
நல்லறுவடை ஆவது அன்பும் மனிதநேயமும்
பொங்குவது பொங்கப்பானை மட்டுமே அல்ல
பூரித்த நெஞ்சங்களும் தான்