சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாள் - பழமொழி நானூறு 255

நேரிசை வெண்பா

சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத்
திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். 255

- பழமொழி நானூறு

பொருளுரை:

தான் கூறுவதற்கு முன்னரே முகம் நோக்கி மனக் குறிப்பினை அறியும் பண்பினை உடைய தன் மனைவியே வந்த விருந்தினர்களுக்கு வேண்டுவன செய்து ஓம்ப,

அதனால் செல்வத்துடன் துன்பமின்றி இன்பமுற்று வாழ்ந்தவர்களே நாடோறும் கடலிலுள்ள நீரைத் துலா இட்டு இறைப்பவரோடு ஒப்பர்.

கருத்து:

குறிப்பறிதலும், விருந்தோம்பலும் உடைய இல்லாளோடு செல்வத்துடன வாழ்பவர்களே நீங்காத இன்பமுடையார்.

விளக்கம்: 'ஏமம் + ஆர்ந்திருந்தாரே' ஏமாந்திருந்தாரே எனத் தொக்கது. 'கடலுள் துலாம் பண்ணினார்' என்றது, கடல் நீரை இறைக்கப் புகுவார் நீர் குறைதல் இன்றி எஞ்ஞான்றும் பெறுதல் போல, எஞ்ஞான்றும் நீங்கா இன்பம் எய்துவர் என்பதாயிற்று.

நாளும் கடலுள் துலாம் பண்ணினார்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-23, 8:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே