465 நயந்து அறம் செய்யார் நாய்த் தொழில் செய்வார் - அறஞ்செயல் 17
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
இந்துமீன் பருதி பக்கி
= யினவிலங் குகள்ம ரங்கள்
ஐந்துபூ தங்க ளேனை
= யாவுமோ வாதெஞ் ஞான்றுந்
தந்தொழில் செய்து வாழுந்
= தனியறம் புரித லென்னும்
நந்தொழில் புரிகி லேம்யாம்
= நாய்த்தொழி லுடைய நெஞ்சே. 17
- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மனமே! நிலவு, விண்மீன், சூரியன், பறவை இனம், விலங்குகள், மரங்கள், ஐம்பெரும் பூதங்கள் ஆகிய எல்லாம் இடைவிடாது எப்பொழுதும் தத்தமக்குரிய தொழிலைச் செய்து வாழ்கின்றன.
அதுபோல், ஒப்பிலா நன்மை தருகின்ற நம் தொழிலை விழைவுடன் நாமும் செய்கின்றோம் இல்லை.
உண்டு உடுத்து உறங்கிக் கழியும் நாய்த் தொழிலையே நாம் செய்து வருகின்றோம்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
இந்து – நிலவு. மீன் - விண்மீன்; பருதி – சூரியன். பக்கி - பறவை.