கடல் கடந்த பாடல்

"உங்களுக்கு இந்த ஸ்மியுலில் நுழைந்துவிட்டால் நேரம் போவது கொஞ்சம்கூடத் தெரியவில்லை. மாலை ஆறு மணிக்கு ஸ்மியுலில் பாடச்சென்றீர்கள். இப்போது மணி இரவு எட்டு. காலையிலும் ஒரு மணி நேரம் ஸ்மியுலில் ஒரு மணி நேரம் பாடினீர்கள். கொஞ்சம் வீட்டையும் கவனியுங்கள். " என்று அவன் மனைவி ராஜி புலம்பியபோதுதான் ராஜா மீண்டும் இந்த உலகத்திற்கு வந்தான்.

ராஜா ஒரு மத்திய பொதுநலக்கனப் பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான். அவன் வாழ்க்கை ஒரு சாதாரண வாழ்க்கையே. இருப்பினும் அவன் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானதே. அவன் கற்பனை மற்றும் கனவுகளில் தான் அதிகம் வாழ்ந்து வந்தான். ஏனெனில் அவன் விருப்பத்திற்கு ஏற்றவாறு எதுவும் அவனுக்கு நடப்பதில்லை.

சிறு வயது முதலே அவனுக்குத் திரைப்படப்பாடல்கள் கேட்கவும் பாடவும் மிகுந்த விருப்பம் இருந்தது. வீட்டில் வானொலிப் பெட்டி இல்லை என்றபோதும் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து காற்றில் தவழும் திரைப்படப் பாடல்களை ராஜா உன்னிப்பாகக் கேட்பான். கேட்டு விட்டு, யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பாடல்களை பாடிப் பார்ப்பான்.
அவன் அம்மாதான் ராஜாவின் இந்த நடவடிக்கைகளை கவனித்தாள். அவள் ராஜா தனிமையில் அமர்ந்துப் பாடுவதைப் பற்றி மற்றவரிடம் அவ்வப்போது கூறுவாள். இதனால் ராஜாவுக்கு கூச்சமாக இருந்தது. ஏனெனில் மற்றவர்கள் ராஜாவை " ராஜா, நீ மட்டும் தனிமையில் பாடிக்கொள்கிறாய். நாங்களும் கேட்கவேண்டாமா , எங்கள் எதிரிலும் பாடு " என்று கேட்கும்போது அவன் வெட்கபட்டுக்கொண்டு ஓடிவிடுவான். தான் பாடுவதை வேறு யாரும் கேட்பதை அவன் விரும்பவில்லை. ஆனால் எவரேனும் ' நீ நன்றாகப் பாடுகிறாய் என்றால்" அதைக் கேட்டு அவன் மகிழ்ச்சி அடைந்தான்.
பள்ளியில் படிக்கையில்அவனுடைய சகோதரிகள் இருவரும் கர்நாடக இசையைக் கொஞ்சம் கற்று கொண்டார்கள். ராஜாவும், கூச்சம் இருப்பினும், அவர்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ள ஆசைப் பட்டான். ஆனால் கற்றுக் கொடுக்கும் பெண் இசை ஆசிரியர், தான் பெண்களுக்கு மட்டுமே இசை கற்றுத் தருவதாகச் சொன்னார். இதனால் ராஜாவுக்கு கர்நாடக இசைப் பயில வெகுநாள் வரையில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அவன் நான்காம் வகுப்பு படிக்கையில் ஒரு நாள் அவன் வகுப்பாசிரியர் மாணவர்களிடம் " நாளையும் மறுநாளும் தீபாவளிப்பண்டிகைக்காக பள்ளி விடுமுறை. இன்று உடற்பயிற்சி ஆசிரியர் வரவில்லை. எனவே நீங்கள் வகுப்பிலேயே இருக்கவேண்டும். ஒரு மாறுதலுக்காக உங்களில் எவரேனும் பாட விருப்பம் இருந்தால் மாணவர்கள் முன் நின்று பாடலாம்" என்றபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தவன் ராஜாதான். ஆனாலும் அவனுக்கிருந்த கூச்ச சுபாவத்தால் அவன் உடனடியாகப் பாட முன்வரவில்லை. இரண்டு மூன்று மாணவர்கள் பாடியபின் ஆசிரியர் " ராஜா உன் முகத்தில் உள்ள ஆர்வத்தைப்பார்த்தால் உனக்கும் பாடும் ஆர்வம் இருக்கும் என்று தோன்றுகிறது." என்றபோது ராஜா அவனையறியாமலேயே " ஆமாம் சார் " என்று சொல்லிவிட்டான். உடனே ஆசிரியரும் "அப்படியென்றால் இங்கே வா, உனக்குப்பிடித்த பாடல் ஒன்றைப்பாடு" என்றார். ராஜாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனிருந்த மாணவர்களும் " ராஜா போய்ப்பாடு, நாங்கள் உன் பாடலைக்கேட்க ஆவலாக இருக்கிறோம்" என்று துளைத்து எடுக்கவே ராஜா தயக்கத்துடன் ஆசிரியர் அருகே சென்று நின்றான். அவன் கைகால்கள் கொஞ்சம் உதறியது, கொஞ்சம் வியர்த்துக்கொட்டியது. ஆசிரியர் " பயமே வேண்டாம், எல்லாம் உனது தோழர்கள்தான், நானும் உன்னை நன்கு அறிந்த உன் வகுப்பாசிரியர். பாடு , ம்ம் , பாடு." என்று கனிவுடன் சொன்னவுடன் ராஜா " ஆறுபடை வீடு கொண்ட திருமுருகா" என்ற ஒரு பக்தி சினிமாப்பாடலைப் பாடத்துவங்கினான். முதல் இரண்டு மூன்று அடிகள் பாடுகையில் அவன் குரலில் கொஞ்சம் நடுக்கம் இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவன் குரலில் மெருகு ஏறியது. ஆறு சரணங்கள் கொண்ட , ராகமாலிகையில் அமைந்த அந்த மேல்ஸ்தாயி பாடலை ராஜா ஓரளவுக்கு நன்றாகவே பாடினான் என்றுதான் சொல்லவேண்டும். அவன் பாடிமுடித்தவுடன் அவன் வகுப்பாசிரியருடன் சேர்ந்து மற்ற மாணவர்களும் பலமாக கைதட்டி ராஜாவின் பாட்டைப்பாராட்டினார்கள். இதுதான் ராஜா அவன் வாழ்க்கையில் பலருக்கு முன்பு பாடிய முதன் பாடல். இருப்பினும், என்ன காரணம் என்று தெரியவில்லை, அவன் அடுத்த எழுவருட பள்ளி நாட்களில் ஒரு முறைகூட அவன் வகுப்பிலோ வேறு நிகழ்ச்சிகளிலோ பாடவேயில்லை.

ராஜா படிப்பதில் ஒரு சராசரி மாணவனாக இருந்தான். ஆங்கிலம், பூகோளப் பாடங்கள் அவனைக் கவர்ந்தது. பத்தாம் வகுப்புப் படிக்கையில், வருடாந்திர தேர்வுக்கு முன், ராஜாவுக்கு டைபாய்டு (typhoid) காய்ச்சல் வந்து, இரண்டு வாரம் பள்ளி செல்லாமல் இருந்தான். இருப்பினும் ஓரளவுக்குப் படித்து பரீட்சைகளை எழுதினான். ஒரு மாதம் கழித்து ராஜாவின் பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஒரு நாள் ரிசல்ட்: 'DETAINED " என்ற முத்திரையுடன் ஒரு போஸ்ட் கார்டு வந்தது. அதைப்பார்த்துவிட்டு அவனுடைய அப்பா ராஜாவின் மேல் மிகவும் சினம் கொண்டார். அவனை மிகவும் கடிந்து கொண்டார். தன் மகன் சரியாகப்படிக்கவில்லை, எனவே தேர்வுகளைச் சரியாக எழுதவில்லை என்பதால்தான் தோல்வி அடைந்தான் என்று அவர் நினைத்தார். கோவம் வந்தால் அவனுடைய அப்பாவின் முகத்தைப்பார்ப்பதற்கே ராஜாவுக்குப்பிடிக்காது. ராஜாவின் அம்மா "நீ ஒன்றும் கவலைப்படாமல் இரு. நீ தேர்வில் தோல்வி அடைய வாய்ப்பே இல்லை. டைபாய்டு காய்ச்சல் வந்து நீ பதினைந்து நாட்கள் பள்ளி செல்லவில்லைதானே , அதற்கு நாம் வெறும் விடுப்பு விண்ணப்பம்தான் கொடுத்தோம். ஒரு வேளை அதற்கு மருத்துவர் சான்றிதழ் தரவில்லை என்பதால் தான் இப்படிச் செய்துவிட்டார்களோ என்று நினைக்கிறன்" என்றபோது ராஜாவுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..
இந்த விஷயத்தில் தனது மனைவியின் கருத்தை ராஜாவின் அப்பா ஏற்றுக்கொண்டது போல் இருந்தது. அதிக மதிப்பெண்கள் இல்லாவிட்டாலும் குறைந்த பட்ச எண்ணிக்கை ராஜாவுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும், எனவே அவன் தேர்வுகளில் தோல்விப்பெற வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை அவருக்கும் வந்தது. இருப்பினும் அவரது வழக்கமான சுபாவத்தால் ராஜாவைப் பொரிந்து தள்ளிவிட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில் ராஜாவையும் அழைத்து கொண்டு அவர் அவன் பள்ளிக்கூடம் சென்றார். அங்கே அலுவலகத்தில் விசாரித்ததில், ராஜா தேர்வுகளில் பாஸ் செய்து விட்டான். ஆனால் 15 நாட்கள் அவன் காய்ச்சல் காரணமாக எடுத்த விடுமுறைக்கு மருத்துவர் அத்தாட்சி இல்லாததால்தான், அவனுடைய தேர்தல் முடிவை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிய வந்தது. ராஜாவுக்கும் அவன் அப்பாவுக்கும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ராஜா வீட்டிற்குவந்தவுடன் அம்மாவிடம் அவன் தேர்வில் வெற்றிபெற்றுவிட்டான் என்றும் அவன் அம்மா சொன்ன கருது நூற்றுக்கு நூறு உண்மை என்பதையும் மகிழ்ச்சியுடன் கூறினான்.

அடுத்த இரண்டு நாட்களில் அவன் அப்பா மருத்துவரிடமிருந்து தேவையான அத்தாட்சிச் சான்றிதழை வாங்கிப் பள்ளியில் கொடுத்த உடன், ராஜா பதினொன்றாம் வகுப்புக்கு உயர்த்தப்பட்டான்.

ராஜா கல்லூரியில் படிக்கையில் , கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாட விருப்பப்பட்டான். ஆனால் கூட்டத்தில் அனைவரின் எதிரில் பாட வெட்கப்பட்டதால் அவன் பாட இயலாமல் போய்விட்டது. கொஞ்ச நாட்கள் வயதான ஒரு இசை ஆசிரியரிடம் கர்நாடக இசையைக் கற்கத் துவங்கினான். ஆனால் இசை ஆசிரியரின் வயது மற்றும் உடல் நிலை காரணங்களால் மூன்று மாதங்களிலேயே அந்த இசைப் பயணம் நின்றது. பின்னர் மீண்டும் ஒரு வயதான இசை ஆசிரியரிடம் சென்று ராஜா கொஞ்சம் இசையைக் கற்றான். அவன் தவறாகப்படும்போது அவர் அடிக்கடி ராஜாவைக் கிள்ளி விட்டதால் அவரிடம் இசை கற்பதை ராஜ நிறுத்தினான்.

ராஜா கல்லூரி படிப்பு முடிந்து பிகாம் பட்டம் பெற்று சின்ன ஒரு வேலையில் சேர்ந்தான். ரூபாய் 300 மாத சம்பளம் 1980 ஆம் வருடம். அது ராஜாவுக்கு மிகவும் கடினமான நேரம். அவன் தந்தை மறைந்து இரண்டரை ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. வீட்டில் பொருளாதாரம் கொஞ்சம் தள்ளாடிய வண்ணம் இருந்தது. பெரிய குடும்பம் வேறு. இரண்டு சகோதரிகளின் திருமணத்திற்காக வீட்டுப்பக்கத்தில் அவர்களுக்கிருந்த இருந்த காலி மனையையும், சென்னையை அடுத்துள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் இருந்த விவசாய நிலத்தையும் விற்றாகி விட்டது. ராஜாவின் சம்பளம் மாதம் 300 ரூபாயாக இருப்பினும் வீட்டுக் காய்கறி செலவுக்கு உதவியது.

இரண்டு வருடங்கள் உழைத்தபின்னர் , ராஜாவுக்கு அதே தொழிற்சாலையில் உத்தியோகம் நிரந்தரமாகி, ரூபாய் ஆயிரம் சம்பளம் கிடைக்க ஆரம்பித்தது. ஆயினும் ஓராண்டுக்குள், தொழிலாளர் வேலை நிறுத்தம் மற்றும் நிர்வாகத்தின் கடவடைப்பினால் ராஜாவுக்கு மாதாந்திர பணம் ரூபாய் 1000 கிடைப்பதும் தடை பட்டது. இந்த நாலு வருடத்திலும் ராஜா அனுபவித்தது என்று ஒன்றும் கிடையாது. ஐந்து நாட்கள் தொழிற்சாலை சென்று வந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை. அப்போதெல்லாம் ராஜா வெறுமனே தான் வீட்டில் இருப்பான். ஓரிரு நண்பர்கள் மட்டுமே அவனுக்கு. வேலை இருந்தும் இல்லாத அந்த நெருக்கடியான நேரத்தில் தான் அவனுக்கு வட இந்தியாவில மத்தியப்பொது நிறுவனம் ஒன்றில் வேலை ஒன்று கிடைத்தது. அப்போது சென்னையை விட்டு கிளம்பியவன் தான் ராஜா, மீண்டும் சென்னையில் குடி பெயரவில்லை. ஹரித்வார், ஸ்ரீசைலம், ராஜஸ்தானில் பாண்ஸ்வாடா மற்றும் ஜான்சி போன்ற இடங்களில் அவன் பணிபுரிந்து பின்னர் அதே நிறுவனத்தின் ஹைதராபாத் கிளையில் இருபத்தியேழு வருடங்கள் உத்தியோகம் பார்த்துவிட்டு பதவிஓய்வுப் பெற்றான்.

ராஜா அவனின் பாடும் ஏக்கத்தைத்தணித்துக்கொள்வதற்காக, வருடம் 2016 இல் ஸ்மியுல் என்கிற ஒரு நேரடியாகத் (ஆன்லைன் ஆப்) திரைப்பட பாடல்கள் பாடும் வலைத்தளத்தில் பதிவு செய்துகொண்டு, நிறைய தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்பாடல்களை வீட்டிலிருந்தபடியே கரோக்கே ட்ராக்கில் பாடிய வண்ணம் இருந்தான். அவன் இந்த வலை தளத்தில் நுழைந்த சில நாட்களிலே அவனுக்குச் சில ரசிகர்கள் சேர்ந்தார்கள். அதில் தேவி என்கிற இலங்கையைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர். ராஜாவின் பாடல்களை, குறிப்பாக ராஜாவின் குரலை அவள் மிகவும் விரும்பினாள். ராஜாவின் பாடல்களைக் கேட்டுத் தனது பாராட்டையும் நல்ல விமர்சனத்தையும் ராஜாவுடன் தளத்தில் பகிர்ந்துக் கொண்டாள். தேவி இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். இவளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

அடுத்த ஆறு மாதத்தில் தேவி ராஜாவின் மிகவும் தலையாய இசை விசிறியானாள். ராஜாவுடன் இணைந்து ஸ்மியுல் வலைத்தளத்தில் அவ்வப்போது திரைஇசைப் பாடல்களை பாடிய வண்ணம் இருந்தாள். மெல்ல மெல்ல தேவி ராஜாவிடம் மிகுந்த அன்பு கொண்டாள். அவர் வயது 54 என்றாலும், 58 வயதான ராஜாவிடம் அவள் மிகவும் அன்பு செலுத்தினாள். அவன் மீது மிகுந்த மரியாதையையும் வைத்திருந்தாள்.

எந்த அளவுக்கு அவளின் அன்பு என்றால், அடுத்த ஆறு மாதத்திற்குள் தேவி அவளது குடும்பத்தாருடன் ஹைதராபாத் சென்று ராஜாவை அவர் வீட்டில் சந்தித்தாள். ராஜாவின் மனைவி ராஜியும் அவர்களை நன்கு உபசரித்தாள்.
இரண்டு நாட்கள் ராஜாவின் வீட்டிற்கு தேவி குடும்பத்தினருடன் வந்து சென்றார். ராஜாவைப் பிரிந்து ஸ்ரீலங்கா செல்லுகையில், தேவி மிகவும் வேதனையுடன் அழுதாள். அவள் ஹைதராபாத்திலேயே தங்கிவிடுவதாகவும் கூறினாள். அப்படி செய்ய இயலாது என்பதை ராஜா அறிவான் , தேவியும் உணர்ந்திருந்தாள்.

இந்தப் பயணத்திற்குப்பிறகு தேவி ராஜாவிடையே அன்பு இன்னும் அதிகமாகியது. இருவரிடையே ஒரு பக்குவமான மேம்பட்டக் காதல் உருவாகியது என்றே சொல்லலாம். இருவரும் மீண்டும் சேர்ந்து வலை தலையத்தில் பாடல்கள் பாடத் துவங்கினர். தேவி ராஜாவை அவளது தெய்வமாகவே நினைக்கத்தொடங்கினாள். ஏறக்குறைய அவள் கணவன் இறந்து இருபத்தியேழு வருடங்கள் ஆனபிறகு தான் ஏன் அப்படி மாறினாள் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ராஜா ஆரம்பகட்டத்தில் அவளைத் தனது மிகச்சிறந்த இசை ரசிகையாக மட்டுமே நினைத்தான். ஆனாலும் சில நாட்களில் அவன் தேவியின் உண்மையான அன்பின் பிடியில் விழுந்தான். இருவரிடையே வாட்சாப் செய்தி பரிமாற்றமும் ஆரம்பித்து அந்தத் தொடர்பு மிகவும் உறுதியாகவும் தொடர்ந்தும் நீடிக்கத்தொடங்கியது.

ஒரு முறை ராஜாவின் செல்போனில் கொஞ்சம் பழுது வந்ததால், அதைச் சரிசெய்ய அவன் வெளியே கொடுத்திருந்தான். அந்நேரத்தில் அவன் பாடுவதற்காக ஸ்மியுல் ஆப்பை ராஜியின் செல்போனில் டவுன்லோட் செய்து வைத்திருந்தான். அந்த நேரம் பார்த்து தேவி ராஜாவுக்கு அனுப்பிய ஒரு அன்புத் தமிழ்ச் செய்தி ராஜியின் கண்களில் எப்படியோ பட்டுவிட்டது.

ராஜி பதட்டம் அடைந்தாலும் உடனடியாக உணர்ச்சிவசப்படவில்லை. ஒரு வாரம் கழித்து ராஜாவுடன் தனியாக வெளியே செல்லும்போது இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுக் கதறி அழுது, அவள் மனவேதனையை ராஜாவுக்குத்தெரியப்படுத்தினாள். ராஜா " ராஜி உன் வேதனை எனக்குப்புரிகிறது. ஆனால் நீ நினைப்பதுபோல எங்களிடையே எந்தவிதத் தவறும் நடக்கவில்லை. ஆனால் தேவி என்னை அவளது தெய்வம்போலத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் என்னுடைய பரம விசிறி என்பதையும் நீ நன்கு அறிவாய்.எனவே நீ கவலை அடையவேண்டாம்" என்று பலவிதமாக ஆறுதல் கூறியும் ராஜி மனம் உடைந்துதான் போனாள்.

இச்சம்பவம் நடந்த ஒருமாதத்திற்குப்பிறகு ராஜி ஒரு நாள் ராஜாவிடம் " நீங்கள் இனி ஸ்மியுல் வலைத்தளத்தில் பாடுவதை நிச்சயமாகவே குறைத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய தினசரி வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது. நீங்கள் மும்புபோல சரியாகத்தூங்குவதில்லை. இதனால் எனக்கும் நிம்மதியில்லாமல் இருக்கிறது. ஏற்கெனவே நமது இளைய மகன் கல்லூரிப்படிப்பை இடையே விட்டுவிட்டு ஒரு இசைக்குழுவில் சேர்ந்து கிடார் வாசித்துக்கொண்டிருக்கிறான். அவன் வாழ்க்கை எப்படி அமையப்போகிறது என்று நினைத்துப்பார்க்கையில் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் நீங்களும்
ஸ்மியுலே கதி என்று எந்நேரமும் இருந்தால் எனக்கு தாங்கமுடிவதில்லை." என்று அழுது புலம்பியபோது ராஜாவால் அவளது கருத்துக்களை நிராகரிக்கமுடியவில்லை. ராஜா கூறினான் " இன்னும் ஒரு வாரத்தில் என்னிடம் நீ மாற்றங்களைக்காண்பாய்".

அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குப்பிறகு ராஜா ஸ்மூலில் பாடும் நேரத்தை பாதிக்குப்பாதி குறைத்தான். ராஜி தன்னிடம் சொன்ன விஷயங்களை ராஜா தேவியுடன் வாட்சப்பில் பகிர்ந்து கொண்டான். தேவி நடந்தவற்றிற்கு மிகவும் வருந்தினாள். ஆனால் அவள் ராஜாவை நினைக்காமல் உயிர்வாழ இயலாது என்பதையும் அவள் அன்புகலந்த உறுதியுடன் தெரிவித்தாள். இதனால் தேவி ராஜவிற்கிடையே சிறிதான இடைவெளி வரத்தொடங்கியது.

வருடங்கள் ஐந்து பறந்தன. ராஜாவும் தேவியும் ஸ்மியுல் வலைத்தளத்தில் இணைந்து பாடி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ராஜாவும் இரண்டு வருடங்களாக இந்த தளத்தில் பாடுவதை நிறுத்திவிட்டான். இருப்பினும் இவர்களது நட்பும் அன்பும் இன்றும் தொடர்ந்து வருகிறது.
தேவி ஸ்ரீலங்காவில் பலவித உடல்நலக்கோளாறுகளுடன் வாழ்ந்து வருகிறாள். தினமும் அவள் ராஜாவுக்கு வாட்ஸாப்பில் காலை வணக்கம் மெசேஜ் வைக்காமல் எந்தக்காரியத்தையும் செய்வதில்லை. ராஜாவும் அவளுக்குப் பதில் கொடுப்பான். வருடத்தில் இரண்டு மூன்று முறை இருவரும் தொலைபேசி மூலம் தங்களின் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். " உங்கள் குரலைத்தான் உங்களைவிட நான் அதிகம் நேசிப்பது. அந்தக்குரலில் எங்கோ ஒரு மூலையில் ஒரு தெய்வீகம் இருப்பதை நான் சத்தியமாக உணருகிறேன். உங்கள் பாடல்களைக்கேட்கும் பிறரும் நீங்கள் பாடும் விதத்தைக் மிகவும் கூர்ந்து கவனித்துக்கேட்டால் அத்தகைய ஒரு அலாதியான உங்கள் குரலின் தன்மையை உணரமுடியும்." என்ற கருத்தை அன்று மட்டும் அல்ல இன்றுகூட தேவி கூறுவாள். " உங்கள் பாடல்களைக்கேட்டுக்கொண்டே என் உயிர் புரியவேண்டும்" என்பதே அவள் வாழ்நாளின் ஒரே ஆசை என்பதை அவள் எவ்வளவோ முறை ராஜாவிடம் தெரிவித்தவண்ணம் இருந்தாள், இருக்கின்றாள் கூட. தற்போது இருதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளுடன் அவள் தேசத்தில் தனிமையில்தான் வாழ்கிறாள்.

ராஜீயைப்பொறுத்தவரை ராஜா மீண்டும் அவளுக்கே உரிய கணவனாக மாறிவிட்டான். தேவியைப்பொறுத்தவரை ராஜா என்றும் அவளது தெய்வீகக்காதலனாக இருக்கிறான். ராஜாவைப்பொறுத்தவரை அவனுக்கு வாழ்க்கையில் எல்லாமே ராஜிதான். ஆயினும், தேவி அவனது இரு விழிகளில் ஒரு விழி போல என்பதை அவனால் இன்று மட்டும் அல்ல என்றும் மறுக்கமுடியாது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-Jan-23, 8:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 194

மேலே