தந்தையை தேடி வந்தவள்

தந்தையை தேடி வந்தவள்
பல்கலைக்கழக் ஆராய்ச்சி மாணவனான எனக்கு புரொபசர் இராமமூர்த்தி யிடமிருந்து இந்த நேரத்தில் அழைப்பு வந்தது ஆச்சர்யமாக இருந்தது.
அப்பொழுது வாசித்து கொண்டிருந்த ‘ஐரோப்பிய வரலாற்று’ நூலை மூடி வைத்து விட்டு உறங்க முற்பட்டவனின் செல்போன் கிண்கிணிக்க எடுத்து பார்த்தேன். சரித்திர பேராசிரியர் இராம்மூர்த்தி பெயரை பார்த்தவுடன் ஆச்சர்யமானேன்.
அவர் எதற்கு இந்த நேரத்திற்கு என்னை கூப்பிடவேண்டும்? மனதில் சந்தேகம் வர போனை எடுத்தவனிடம் இராம்மூர்த்தியின் நிதானமான குரல் சூழ்நிலையின் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
சத்தியா நாளைக்கு உனக்கு வகுப்பு இருக்கா?
இல்லை சார், ஆனா பதினோரு மணிக்கு ‘சென்ட்ரல் லைப்ரரி’ போலாமுன்னு இருக்கேன். கூட உமா வர்றேன்னா, ஏன் சார் ஏதாவது விசேஷமா?
ஒண்ணுமில்லை ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும்..இழுத்தார்.
சொல்லுங்க சார்.
நாளைக்கு பத்து மணிக்கு கனடாவுல இருந்து ஒரு பொண்ணு வருவா, அவளை பிக்கப் பண்ணி வீட்டுக்கு கூட்டி வர முடியுமா.
ஷ்யூர் சார், நாளைக்கு ஒன்பது மணிக்கு மேல ஏர்போர்ட் போனா போதுமா?
போதும், போதும், சாரி உன்னை தொந்தரவு பண்ணிட்டேன். நானே போகலாமுன்னுதான் நினைச்சேன், ஆனா எதிர்பாராம எனக்கு ஒரு வேலை வந்துடுச்சு.
கண்டிப்பா நான் போய் கூப்பிட்டுட்டு வர்றேன் சார்.
தேங்க்ஸ் சத்தியா, சாரி உன்னை இந்த நேரத்துல தொந்தரவு பண்ணிட்டேன். மீண்டும் ஒரு மன்னிப்பை கேட்டு விட்டு. போனை வைத்தார். போனை அணைத்தேன்.
ஏர் போர்ட்டில் அந்த கனடா நாட்டு பெண்ணை அறிமுகப்படுத்தி கொண்டேன். சிறு பெண்ணாக இருந்தாள். பதினாறு அல்லது பதினெட்டு வயது இருக்கலாம். அவளை காரில் அழைத்து வந்து வடவள்ளியில் இருந்த புரொபசர் இராம்மூர்த்தி வீட்டில் விட்டேன். வாசலிலேயே எங்களை எதிர்பார்த்து காத்திருந்தவர், இரு சத்தியா காப்பி சாப்பிட்டு விட்டு போகலாம், உபசரித்தார்.
அந்த பெண் ஆழ்ந்த சிந்தனையுடன் காப்பியை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். டயானா? வாட் யூ ஆர் திங்கிக்? இராம்மூர்த்தியின் கேள்விக்கு ஒண்ணுமில்லை, அங்கிள், அடுத்து என்ன செய்யணும்னு யோசிச்சிகிட்டிருந்தேன்.
அந்த பெண்ணின் கொஞ்சும் தமிழ் என்னை ஆச்சர்யப்படுத்தியது. ரொம்ப நல்லா தமிழ் பேசறீங்க, அவள் புன்னகையுடன் என் அப்பா ஒரு தமிழர்.
என் வியப்பை பார்த்த இராம்மூர்த்தி இதுக்கு ஆச்சர்யப்படாதே சத்தியா, டயானா இங்க வந்திருக்கறதே அவங்க அப்பாவ கண்டு பிடிக்கத்தான்.
அங்கிள் நான் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கலாமா? அவளின் கேள்விக்கு ஷ்யூர் வா உன்னோட அறையை காட்டறேன், சத்தியா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, டயானாவை அவ ரூம்ல விட்டுட்டு வந்துடறேன்.
நான் கீழ்த்தளத்தில் முன்னறையில் காத்திருந்தேன். அவர்கள் இருவரும் உள் புற மாடிப்படியில் ஏறி மேல் மாடி அறைக்குள் நுழைவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.
பத்து நிமிடங்கள் ஆனது. இராம்மூர்த்தி இறங்கி வந்தவர், சாரி சத்யா உன்னை காக்க வச்சுட்டேன். ஆயாசமாய் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
நான் அவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். முகம் கொஞ்சம் கவலையில் காணப்பட்டது போல் தோன்றியது. என்ன சார் ஏதாவது பிராப்ளமா?
ஒண்ணுமில்லை இந்த டயானாவை நினைச்சுத்தான், பெருமூச்சு விட்டவர் அவங்கம்மா நான் கனடா போயிருந்தப்ப என்னோட தீசிஸ்க்கு ரொம்ப ஹெல்புல்லா இருந்தாங்க. அவங்கதான் போன் பண்ணி டயானா அவங்க அப்பாவோட ஊரை பாக்கணும்னு விரும்பறதா சொல்லிகிட்டு இருக்கா, அவளை அங்க அனுப்பி வைக்கறேன். பத்திரமா பாத்துக்குங்க அப்படீன்னு சொன்னாங்க. இப்ப எனக்கு இருக்கற வேலை பிசியில அவ கூட எப்படி போறதுன்னுதான்..
நான் அவர் தோளை தொட்டு நான் ஹெல்ப் பண்ணறேன். எனக்கு தீசிஸ் மதியத்தோட் முடிஞ்சிடும், அப்புறம் சும்மா தான் இருக்கேன்,
முக மலர்ச்சியுடன் ரொம்ப தேங்க்ஸ் சத்தியா, அவகிட்டே சொல்லிடறேன். நீ இப்ப உன் ரூமுக்கு போ, நான் கூப்பிடறேன்.
என் அறைக்கு வந்த போது உமா காத்திருந்தாள். என்னோட முனைவர் பட்டம் பெற படித்து கொண்டிருக்கும் தோழி.
எங்க போனே சத்யா? அவளின் கேள்விக்கு பொறு, பொறு நம்ம இரண்டு பேருக்கு ஒரு வேலை வந்திருக்கு என்று நேற்று இரவு புரொபசர் இராம்மூர்த்தி போன் செய்த்து முதல் இது வரை நடந்தது அனைத்தும் சொன்னேன்.
ஆழ்ந்த யோசனையுடன் கேட்டுக்கொண்டிருந்த உமா, பொண்ணு என்ன பண்ணிகிட்டிருக்கா?
அவ அங்க காலேஜ்ல படிக்கிறதா புரொபசர் சொன்னாரு, என்ன படிக்கிறா அப்படீன்னு கேட்க மறந்துட்டேன்.
சரி இப்ப லைப்ரரி போலாமா வேண்டாமா?
போலாம் வா, இருவரும் மத்திய நூலகத்தை நோக்கி காரில் சென்றோம். நூலகத்தில் இருக்கும் போது செல்போன் அழைக்க எடுத்து பார்த்தேன். புரொபசர் இராமமூர்த்தி அழைத்திருந்தார்.. சத்யா இங்க வர முடியுமா?
ஷ்யூர் சார், உமாவையும் அழைத்துக்கொண்டு அவர் வீடு நோக்கி சென்றோம்.
டயானாவும் இராம்மூர்த்தியும் காத்திருந்தார்கள். என்னுடன் உமாவை பார்த்ததும் டயானாவின் முகம் மலர்ந்ததை என்னால் உணர முடிந்தது. உமாவை டயானாவுக்கு அறிமுகப்படுத்தினேன்.
வாங்க பேசிகிட்டிருக்கலாம். அப்புறம் லஞ்ச் நம்ம வீட்டுலயே முடிச்சுக்கலாம்.
நான் உமாவின் முகத்தை பார்க்க அவள் தோளை குலுக்கி என்க்கு அடுத்து ஒரு புரொக்ராமும் இல்லை.
அப்புறம் என்ன? முன்னறையில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம்.
மீண்டும் தன் முகத்தை தீவிரமாக்கிக்கொண்டாள் டயானா. நான் அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன். வெளுப்பும், சிவப்பும் கலந்து இருந்த்து. தமிழின கலப்பு என்று கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. மிகவும் சிறிய முகம். உதடுகளும் கண்களும் சிறியதாய் இருந்தன.. இந்த வெயில் சூழ்நிலையில் அவள் எத்தனை நாள் தாக்கு பிடிப்பாளோ என்று என்று எனக்கு தோன்றியது. காரணம் ஒரு நாள் வெயிலுக்கே அவளது தோல்கள் கன்னி சிவந்தது போல் தோற்றமளித்தன.
அடுத்து என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் டயானா? உமாவிடமிருந்து கேள்வி அவளை நோக்கி வந்தது.
தெரியவில்லை. எனக்கு விவரம் அறியும் பொழுது என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் என்று அம்மா தெரிவித்தார். அதற்கு பிறகு என் அம்மாவிற்கு இரண்டாம் திருமணம் நடந்தது, ஆனால் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை. எனக்கு மட்டும் என்னுடைய பிறப்புக்கு காரனமானவரையும் அவரது ஊரையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசை.
உன் தந்தை அங்கு என்ன செய்து கொண்டிருந்தார், அவர் பெயர்?
அம்மா சொன்னார்கள்.அவர் பெயர் சுப்பிரமணியம், அவரும் அம்மா படித்த யூனிவர்சிடியில் அப்பொழுது படித்து கொண்டிருந்தார்கள். இருவரும் ஒன்றாக தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள். அம்மா சோஷியலிலும், இவர் வேதியல் படித்துக்கொண்டிருந்திருக்கின்றனர்.
இருவரும் முது நிலை முடித்து அவரவர்கள் ஒரு வேலையை தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்புறம்தான் நான் பிறந்திருக்கிறேன். அதன் பின்னால் எனக்கு ஏழு வயது இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதன் பின்னால் அவர் எங்கள் வீட்டுக்கே வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அம்மாவிடம் விவாகரத்து வாங்கி விட்டார் என்று.
உங்கள் அம்மா அவருடன் சண்டை போட்டாரா? இல்லை இருவருக்குள்ளும் அடிக்கடி விவாதங்கள் வருவதுண்டா? புரொபசர் இராமமூர்த்தி
கொஞ்சம் யோசனையானாள். ஒரு சில நேரங்களில் இருவருக்கும் வாக்குவாதம் வந்திருப்பதை அந்த வயதில் பார்த்திருக்கிறேன். அதன் பின் இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.
நீ தமிழ் நன்றாக பேசுகிறாயே.
அவருடன் இருந்த்தில் என் அம்மாவிற்கு தமிழ் நன்கு பழகியிருந்தது, எனக்கும் அப்படி வந்திருக்கலாம், அம்மா என்னிடம் சில நேரங்களில் தமிழில் உரையாடியி ருக்கிறார்கள். அதை விட என்னுடைய பள்ளித் தோழி ஒருவள் நன்கு தமிழ் பேசுவாள். அவள்தான் எனக்கு கற்று கொடுத்தாள். அவளிடமிருந்துதான் நான் ஏன் என் தந்தையை பற்றி அறிந்து கொள்ளக்கூடாது என்று ஆலோசனையை பெற்றேன்.
சரி அவர் யார் எந்த ஊர் என்றாவது விவரங்கள் இருக்கிறதா? போட்டோ ஏதாவது இருக்கிறதா? நான்
உதட்டை பிதுக்கினாள். போட்டோ ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் கோயமுத்தூரில் இருப்பதாக அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். சுலர் என்னும் ஊர் சொன்னதாக ஞாபகம்
சுலர்..சுலர்.. இரண்டு முறை சொல்லி பார்த்த உமா, சட்டென்று பிரகாசமாகி சூலூராய் இருக்கலாம்.
டயானா முகம் பிரகாசமாகி இருக்கலாம் என்றாள். வேறு ஏதாவது அவர் ஊரை பற்றி சொல்லியிருந்தாரா?
இல்லை ஞாபகம் இல்லை என்று அம்மா சொன்னார்கள். விமான நிலையம் விரிவு படுத்த எங்கள் ஊருக்குள் இருக்கும் நிலங்களை எடுக்கப்போவதாகவும், அதற்கு எங்கள் பூர்வீக நிலங்களை கூட அரசாங்கம் எடுத்து கொள்ள போவதாகவும் ஒரு முறை அம்மாவிடம் சொல்லியிருக்கிறார்.
அப்படியானால் அவர் ஊர் சூலூரை சுற்றித்தான் இருக்க வேண்டும் நான்.
அதற்குள் புரொபசர் இராமமூர்த்தியின் மனைவி சமையல் தயாராகிவிட்டதாக வந்து சொல்லவும் நால்வரும் டைனிங் அறைக்கு விரைந்தோம்.
டயானா மதிய உணவை எப்படி எடுத்து கொள்ளப்போகிறாள் என்கிற சிந்தனை எங்களுக்கு இருந்தது.
நாங்கள் பயந்த அளவு அவள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. கொஞ்சம் அரிசி சாதமும், பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த ரொட்டியில் நான்கைந்தை எடுத்து, அதில் வெண்ணையை தடவி சாப்பிட ஆரம்பித்தாள்.
மறு நாள் எங்களது தேடும் படலம் ஆரம்பமானது. சுப்பிரமணியம் என்னும் ஒரு பெயர், போட்டோ கூட கிடையாது. தொண்ணூறாம் வருடத்துக்கு மேல் கனடா சென்றிருக்க வேண்டும், அதுவும் படிப்பதற்காக, அல்லது வேறு எங்காவது சென்று விட்டு கனடா போயிருக்கலாம். ஒவ்வொரு குடும்பமாக அலசாமல் ஊர் பெரிய மனிதரை அணுகி யாராவது அவர்கள் ஊரில் வெளி நாடு சென்றிருக்கிறார்களா என்று விசாரித்தோம்.
கண்னை கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. ஏனெனில் கிட்டத்தட்ட இருபத்தி ஒன்பது வருடங்கள் ஓடியிருக்கிறது. ஆனால் வீட்டிற்கு ஒருவர் வெளி நாட்டில் இருக்கிறார். அதனால் போன தலைமுறை வெளி நாடு சென்றதை அவர்கள் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை. என்றாலும் ஒவ்வொரு ஊரிலும் கிடைத்த தகவலை சொன்னார்கள்.
என்ன வாழ்க்கை டயானாவின் தாய் தமிழகத்தை சேர்ந்த ஒருவருடன் வாழ்ந்திருக்கிறாள். அவள் மட்டுமென்ன நம் நாட்டிலும் அப்படித்தானே ? காதலிப்பதாக சொல்லி யாரோ ஒருவருடன் இருந்து குடும்பம் நடத்தும் பெண்கள் எத்தனை பேர் அவனை பற்றிய முழு விவரங்களை தெரிந்திருப்பர்.
கிட்டத்தட்ட பத்து நாட்கள் அலைந்தோம். சூலூர் சுற்றியுள்ள கிராமங்களில் எங்களது விசாரணை நடைபெற்றது. ஆனால் நிறைய் சுப்பிரமணியர்கள் கிடைத்தார்கள், அவர்களில் கனடாவிலும் வசிப்பவர்கள் கிடைத்தார்கள். ஆனால் அவர்கள் இளைய தலைமுறையாய் இருந்தார்கள். எங்களுக்கும் தேடும் சுவாரசியம் குறைய ஆரம்பித்தது..
டயானா ஒன்று செய்யலாம், நீ அடுத்த முறை வரும் பொழுது உனது தந்தை படித்த யூனிவர்சிடியில் அனைத்து விவரங்கள் இருக்கலாம், அதனை சேகரித்து கொண்டு வா, கண்டு பிடித்து விடலாம். கவலைப்படாதே எங்களுக்கு விவரம் கிடைத்தவுடன் உனக்கு தகவல் தெரிவிக்கிறோம்.
ஒரு நாள் முழுக்க ஏதோ யோசனையில் இருந்த டயானா, மறு நாள் தெளிந்த முகத்துக்கு மாறி விட்டாள். அவள் தாய் அவளை வர சொல்லி போன் செய்து விட்டாள்.
ஏர் போர்ட்டில் வழி அனுப்ப நின்று கொண்டிருந்த நான், உமா, புரொபசர் இராம மூர்த்தி மூவருக்குமே இந்த பதிமூன்று நாட்கள் டயானாவுடன் இருந்தது கனவு போல இருந்தது. குட்டிப்பெண், துரு துருவென தன் தந்தையின் வேரை கண்டு பிடிப்பதற்காக துணிச்சலாய் தேடி வந்தவள்.
எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது, சே அவளுக்கு சரியான விவரம் கிடைக்கவில்லை, இதற்கு உதவ முடியாமல் போய் விட்டதே என்று.
டயானா எங்கள் அனவருக்கும் நன்றி சொன்னவள், நான் ஒரு உண்மையை சொல்கிறேன். என் தந்தையை தேடி வந்தது பாசத்துக்காக அல்ல, அவரை கோபத்துடன் பேசத்தான். இந்தியர்களே அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எல்லோருமே இப்படித்தானோ என்று எண்ணி இங்கு வந்தேன்.
ஆனால் புரொபசர் இராம்மூர்த்தியின் உபசரிப்பும், சத்யா, உமா இவர்களின் துணையை பார்த்தவுடன் நான் உங்களை பற்றி எவ்வளவு கீழாக நினைத்து விட்டேன் என்று வெட்கப்படுகிறேன். அவளின் குரலில் தன் தந்தையை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் மெல்லியதாக இருந்ததாக எனக்கு புரிந்தது.
அதை விட எங்களுக்கு ஆச்சர்யம் ஒரு சிறு பெண் எந்த அளவுக்கு தெளிவாக பேசுகிறாள். அவளை ஆறுதல் படுத்தும் விதமாக நீ எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு வரலாம்.நாங்கள் உதவ காத்திருக்கிறோம்
விமானம பறந்து சென்று வீடு திரும்பிய பின்னாலும் டயானாவின் நினைவுகள் ஒரு மாதத்திற்கு மேல் எங்களிடம் இருந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Feb-23, 3:45 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 148

மேலே