நண்பா சில வெண்பா
செய்ந்நன்றி:
மெட்ராசு வந்திறங்கித் துட்டுக்குப் போராடிப்
பட்ட துயரத்தில் நண்பர்கள்- இட்டதொரு
நல்பிச்சை தானின்று நான்வாழக் காரணமே
அல்லாது வேறொன்று இல்.
பராய்க்கடன்:
எங்கள் இறைவா பலநூறு கோடிபேரின்
பங்கள் ஒளித்தெங்கு நீவைத்தாய்- இங்கெம்
கடைக்கண்ணில் காட்டிவிட்டால் கைம்மாறாய் நாங்கள்
இடுவோமே உண்டியலில் காசு.
ஏக்கம்:
காந்தவல்லி உன்கண்கள் சொல்லுகின்ற சொல்கேட்டுப்
பூந்தமல்லி வாங்கிவந்து வைத்திடுவேன்- சாந்தமான
ஏந்திழையே நீயேசொல் என்செய்யும் பாவம்உன்
கூந்தலில் ஏறா மலர்.
புது வாழ்வு:
திசையன் விளையில் பிறந்து வறுமை
பசியின் பிடியில் வளர்ந்து- கசிகின்ற
கண்ணீர் நதியைக் கடந்து கரையேறி
மீண்டும் எடுப்பேன் பிறப்பு.
நிலை:
ரோட்டோரம் வாழ்கின்ற நண்பர்தம் வீட்டுக்குப்
பூட்டேதும் தேவை கிடையாது- நாட்டில்
சொமட்டோவில் பீட்சாவும் கோலாவும் ஏழை
அமைக்கின்ற நாளேநன் னாள்.