கடனீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி – நாலடியார் 382

இன்னிசை வெண்பா

குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள். 382

- நாலடியார்

பொருளுரை:

குடத்திலுள்ள நீரையே காய்ச்சிப் பருகிப் பசியாறும் இன்னாக் காலத்தும் கடல் நீர் முழுமையும் உண்டு பசியாறுதற்குரிய அத்தனை உறவினர் ஒரே நேரத்தில் விருந்தாக வந்தாலும், தன் கடமையாகிய விரும்தோம்பும் இயல்பைச் செயல்முறையாக மேற்கொள்கின்ற மென்மையான சொற்களையுடைய பெண்ணே இல்லற வாழ்க்கைக்குரிய மாட்சிமை உடையவளாவாள்.

கருத்து:

எந்நிலையிலும் விருந்தோம்பும் இயல்பே மனைமாட்சி ஆகும்.

விளக்கம்:

நீரையேனும் நிரம்ப உண்டு பசியாறுதல் கருதிக் ‘குடம்நீ' ரெனப்பட்டது. உறவினர்க்கு விருந்தோம்பல் இயலாத நிலையே இல்லறத்தார்க்கு இடுக்கண் என்பதாகலின் வறுமைப் பொழுதை ‘இடுக்கட்பொழுது' என்று விதந்தார். ‘கடனீரறவுண்ணும்' என்றது கேளிரின் பன்மை உணர்த்துகின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே