79 எதிர்நோக்கா அன்புதவி ஈன்றாரே செய்வர் - தாய் தந்தையரை வணங்கல் 6

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் காய்ச்சீர் வரலாம்)

ஈங்கெதி ருதவி வெஃகா(து)
..எவருமே ருதவி செய்யார்
ஓங்குஞ்சேய் வாழும் வீயும்
..உடலெய்க்கும் பொழுது தம்மைத்
தாங்கிடுந் தாங்கா தென்னுந்
..தன்மைநோக் காது பெற்றோர்
பாங்குடன் வளர்க்கு மன்பு
..பரவலாந் தகைமைத் தன்றே. 6

- தாய் தந்தையரை வணங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”இவ்வுலகத்தில் பலனை விரும்பி எதிர்பாராது எவருமே உதவி செய்வதில்லை.

வளர்ந்த பிள்ளைகள், வாழ்வுக்கும் சாவுக்கும் இலக்காகிய தம் உடம்பு தளர்ந்த காலத்துப் தம்மைக் காப்பாற்றுவார் காப்பாற்றமாட்டார் என்ற தன்மையைப் பாராது பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் அன்பு அளவிட்டுக் கூறமுடியாத தன்மையுடையது” என்று பலனை எதிர்பாராத அன்பையும் உதவியையும் பெற்றோர்களால்தான் செய்ய முடியும் என்கிறார் இப்பாடலாசிரியர்.

வெஃகல் - விரும்பல். வீதல் - சாதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-23, 2:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே