பத்து பைசாவுக்குக்கூட உபயோகம் இல்லாத பத்து ரூபாய் நாணயம்

பத்து ரூபாய் நோட்டை வாங்கும் கோவை வியாபாரிகள், பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை. சரி, இருக்கும் பத்து ரூபாய் நாணயங்களை பிச்சைக்கார்களிடமாவது கொடுத்தால் கொஞ்சம் தருமமாக இருக்கும் என்று அவர்களுக்கு கொடுக்கப்போனால் அவர்களும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். அவர்கள் வாங்க மறுக்கும்போது நாம் அப்படியே போய்விடமுடியுமா? கைவசம் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தையோ அல்லது பத்து ரூபாய் அல்லது இருபது ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டுதான் செல்வோம்.
கோவை மக்கள்தான் பத்து ரூபாய் நாணயத்தை செல்லாத நாணயங்களாக நினைக்கிறார்கள் என்றால், மதுரை திருச்சியிலும் இதே நிலைதான். எனவே சமீபத்தில் சென்னை சென்றிருந்தபோது கைவசம் இருந்த பத்து ரூபாய் நாணயங்களை செலவழித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சென்னையில் இருந்தபோது பத்து ரூபாய் நாணயத்தை எடுத்து செலவழிக்கவேண்டும் என்ற நினைவே இல்லாமல் போய்விட்டது. மாறாக பேருந்துகளில் பயணித்தபோதும், நகர் மின்சார ரயிலில் பயணித்தபோதும் நான் பயணசீட்டு வாங்குவதற்கு கூட இந்த பத்து ரூபாய் நாணயங்களை உபயோகிக்கவில்லை. நடந்த வேடிக்கை என்னவென்றால், நான் என்னிடம் உள்ள பத்து ரூபாய் நாணயங்களை கொடுப்பதற்கு பதிலாக பிறரிடமிருந்து பத்துக்கும் மேலான பத்து ரூபாய் நாணயங்கள் எனக்கு கிடைத்தது.
மீண்டும் என் ஊரான கோவைக்கு வந்து பார்க்கும்போதுதான், வெளியே தள்ளிவிடவேண்டிய இருபதிற்கும் மேற்பட்ட பத்து ரூபாய் நாணயங்களுக்கு பதில் இன்னும் பத்து பத்துரூபாய் நாணயங்கள் சேர்ந்து இப்போது முப்பது பத்து ரூபாய் நாணயங்கள் என்னிடம் சேர்ந்துவிட்டது.

இதை மாற்றுவதற்காக எனக்கு இருக்கும் வழிகள் இரண்டுதான். ஒன்று ஏதேனும் தேசிய வங்கிக்கு சென்று இவற்றை கொடுத்து அதற்கு ஈடான நோட்டுகளை பெற்றுக்கொள்ளவேண்டும். இரண்டாவது நான் மீண்டும் எப்போது சென்னை செல்கிறேனோ அங்கு இந்த நாணயங்களை செலவிடுவது அல்லது தர்மமாக கொடுத்துவிடுவது.

இப்போதைக்கு என்ன செய்வது? பத்து பைசாவுக்கு கூட உபயோகம் இல்லாத இந்த பத்து ரூபாய் நாணயங்களை வீட்டின் நுழைவாயில் அறையில் அலங்காரமாக வைப்பதுதான். ஒரு வேளை உங்களுக்கு ஏதாவது நல்ல ஆலோசனை தோன்றினால் எனக்கு தெரியப்படுத்துங்களேன். நல்ல ஆலோசனை என்றால் உங்களுக்கும் ஒரு பத்து ரூபாய் நாணயத்தை பரிசாகத் தருகிறேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (4-Mar-23, 7:33 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே