தாலாட்டு

தா...................லாட்டு !
சன் டிவி விளம்பரமல்ல இது !
தாலாட்டு.....................!
கருவறையில் சுமந்த தாய்
கருணை மனதில் பெருகிட
ஆழ்மனதின் உணர்வை
அடிவயிற்றில் இருந்து
ஆராரோ பாடலை பாடி
சேயை உறங்க வைக்க
பாசமுடன் பாடுவது !
தாலாட்டு...................!
எச்சொற்கள் எடுபடுமா
மழலையை மயக்க வைக்குமோ
மெய்மறந்து உறக்கம் தூண்ட
தமிழன்னை நமக்களித்த
திகட்டாத தமிழ் வார்த்தைகளை
கோர்த்த மல்லிகை பூச்சரமாய்
வார்த்தெடுத்த தங்கத் தமிழாக
வாஞ்சையுடன் பாடுவதே
தாலாட்டு !
குறை காண முடியுமா நாமதில்
குற்றம் தான் கூற இயலுமா ?
தாய்க்கு மட்டுமே சொந்தம்
சேய்க்கு மட்டுமே பொருந்தும்
ஊற்றாக பெருகிடும் உணர்வு
மாற்றாக நினைத்தால் சேராது
தமிழ் கூறும் நல்லுலகின்
தாய்மாரின் கரையாத சொத்து தாலாட்டு !
தாலாட்டின் பெருமைதனை
கூறவந்த நான் இப்பொழுது
தாலாட்டு பாடல் வரிகள்
சிந்தையில் ஒலிக்கக் கேட்டு
மொந்தை சோமபானம் அருந்தி
சந்தையில் வீழ்ந்தவனாய்
மெத்தையில் விழுந்தேன்
தழுவிய உறக்கத்தால் !
பழனி குமார்
23.04.2023