தேடுகிறேன் உன்னை

எங்கே சென்றாய் நீ
தேடுகிறேன் உன்னை !

சுழலும் பூமியை நிறுத்தி
சுழலிலும் வேகமாக நான்
சுழன்றிடும் சூறை காற்றாய்
தேடுகிறேன் !

சூரியன் வீசம் கதிர்களின்
ஒளியில் நான் தேடுகிறேன் !
இரவு உமிழ்ந்த இருட்டிலும்
துயிலைத் துறந்து நான்
தேடுகிறேன் !

உயிராய் உலவிய உலகத்தில்
பற்றிய எனது கரங்களுடன்
சுற்றித் திரிந்த இடங்களிலும்
தேடுகிறேன் !

காணாத எனது விழிகள்
வந்து விழுகின்ற அருவியாக
விழலுக்கு இறைத்த நீராக
சிந்தும் கண்ணீர் துளிகளுடன்
தேடுகிறேன் !

விட்டுச் சென்றாய் நீயும்
விலகி மறைந்தாய் நீயும்
தனித்து நிற்கும் தனிமரம்
தேடுகிறேன் !

தேடுவது இல்லாத காதலியா
கனவில் தோன்றிய காரிகையா
பார்வையில் பட்ட பாவையா
கற்பனையில் வடித்த உருவமா
ஒன்றுமில்லை என்றுமில்லை !

அன்புடன் அமுதூட்டி வளர்த்த
பண்புடன் பாசமுடன் ஆளாக்கி
காற்றில் கலந்து மறைந்த
ஆருயிர் அன்னையை நான்
தேடுகிறேன் !


பழனி குமார்
05.05.2023

எழுதியவர் : பழனி குமார் (6-May-23, 7:55 am)
Tanglish : thedukiren unnai
பார்வை : 731

மேலே