காதலும் மறைந்திடுமா காணல் நீராக

1. திலோத்தமா

உய்........... என்ற உச்சமான சத்தம் காதை பிளந்து கொண்டிருந்தது. இருபது இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் கூட்டமாக ஒருவரை ஒருவர் இடித்து, சீண்டி விளையாடிக் கொண்டும், குதித்து கும்மாளம் இட்டுக் கொண்டிருந்தனர்.

பெரிய ஐ டி நிறுவனத்தின் பார்ட்டி ஹால் ஒன்றில் தான் இந்தக் காட்சி அரங்கேறியது.

எப்பொழுதும் குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அமைதியாக வேலை நடக்கும் நிறுவனத்தில் இன்று மட்டும் ஏன் இந்த ஆர்பாட்டம் என்று தோன்றுகிறதா?
எனக்குள்ளும் அதே கேள்விதான். பார்போம் வாங்க.

ஹேய் திலோ என்னப்பா உன் ஆளு இன்னும் வரலை. எவ்வளவு நேரம் தான் காத்திருக்கிறது என்றாள் ஒரு பாப் கட்.

ஹேய் திலோ உன் பாய் ஃபிரெண்ட் எப்பதான் வரப்போறார் என்றான் ரித்தேஷ். ஹே பாய்பிரண்ட் இல்ல, இது அரேன்ஜ் மேரேஜ்யா "உட்பி" ன்னு சொல்லு என்று கிண்டலாக சிரித்தபடியே பாவ்னா பாதி ஆங்கிலமும் பாதி தமிழிலும் மிழற்றினாள்.

திலோ அனைவரையும் புன்னகையுடன் பார்த்தபடி இருந்தாள். முக்கியமாக அவர்களின் உற்சாகத்தை ரசித்துக்கொண்டு இருந்தாள்.

அவளுமே அவளின் மனம் கவர்ந்த நாயகனுக்காக காத்துக்கொண்டு இருந்தாள், இல்லை இல்லை ஏக்கத்துடன் காத்திருந்தாள் என்று தான் கூறவேண்டும்.

ஆனால் வெளியில் நார்மலாக இருப்பது போல் காட்டிக்கொண்டு இருந்தாள். அவளின் ஆர்வம் தெரிந்தால் அதை கூறியே அவளை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள்.

சில நேரங்களில் இவர்களின் ஆர்பாட்டம் கண்டு இவளே சரியான வானரங்கள் என்று மனதில் நினைத்துச் சிரித்துக் கொள்வாள்.

அதனாலேயே அவள் முன்னெச்சரிக்கையாக இருந்து விடுவது. இல்லையெனில் இவர்களிடம் மாட்டிக் கொண்டு சரிசமமாக மல்லு கட்ட இவளால் முடியாது. அது அவள் சுபாவமும் இல்லை.

வாசலில் ஒரு கண்ணும் இவர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு கண்ணையும் வைத்தபடி திலோ அமர்ந்திருந்தாள்.

தன்னுடன் வேலை செய்யும் கலீக்ஸ் எல்லோரையும் பார்த்தாள் ஒருபுறம் அனுதாபமாக கூட இருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியே தங்கி வேலை பார்ப்பவர்கள்.

தானே சமைத்து, வேலைக்கும் வந்து என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு இருக்கவேண்டிய சூழலில் இருப்பவர்கள்.

ஆகையால் தான் சிறு இடைவெளி கிடைத்தாலும் கத்தி, கூச்சல் இட்டு தன் மன அழுத்தத்தை குறைக்கும் முறைகள் தான் இவையாவும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனாலும் ஐ டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் உயிரையே பிழிந்து எடுத்து விடுகிறார்கள் என்று வருத்தத்துடன் மனதிற்குள் நினைத்தாள்.

ஆனால் நம் ஹீரோயின் திலோ என்று அனைவராலும் பாசமாக சுருக்கி அழைக்கப்படும் திலோத்தமாவுக்கு அப்படி இல்லை. சென்னையிலேயே பெரிய தொழிலதிபரின் ஒரே மகள் திலோ.

வீட்டில் இருந்து ஆபீஸில் கொண்டு விடவும் திரும்பி அழைக்கவும் அவளுக்கு தனியாக கார் அமர்த்தி இருந்தார் அவள் தந்தை.

ஆனால் அவள் காரில் வராமல் பஸ்ஸில் வருவதையே விரும்புவாள்.
பணத்தின் பகட்டு சிறிதும் வெளிப்படாமல் எளிமையாக இருப்பதே திலோவின் குணம்.



தொடரும்...

எழுதியவர் : கவிபாரதீ (8-May-23, 2:26 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 106

மேலே