போய் பார்க்கவேண்டும்

போய் பார்க்கவேண்டும்

கடைசி நிமிட வாழ்வை முடிக்க போகும் பீடியீன் நுனியில் இருந்த “தீக்கங்கை” இழுத்து முடித்த வீரையன் இருந்திருந்தாற் போல் “கெகெ” என்று சிரித்தான்.
அவனது இந்த சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் எதிரில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த சோமையன் ‘இந்தா எந்நாத்துக்கு’ இப்படி இளிச்சிக்கினு இருக்கே?
அதுவா, மீண்டும் ஒரு “கெக்கெலிட்ட” சிரிப்பை உதிரத்த வீரையன் ‘என்ர’ பையன் பண்ணுனதை நினைச்சுட்டேன் அதான் சிரிப்பு வந்துடுச்சு,
என்னா பண்ணுனான் அப்படி சிரிக்கறதுக்கு?
ஒருக்கா அவன் ஆத்தா, அதுதான் என் பொண்டாட்டி அவன் கிட்டே “எலே” போய் ரேசன்ல சாமான்லாம் போட்றாங்களான்னு பாத்துட்டு வாடான்னு அனுப்பிச்சா, அந்த ராஸ்கோலும் போய் பார்த்துட்டு அவங்க ஆத்தா கிட்ட கடையில எல்லா சாமானும் போடறாங்களாம் சொல்லிட்டு எங்கனயோ ஓடிப்போயிட்டான்.
இவ அந்த வெயில்ல சீமெண்ணை டின், கோதுமை, அரிசி எல்லாம் வாங்கறதுக்கு அடிச்சு புடிச்சு ஓடியிருக்கா, அங்க பார்த்தா ‘ரேசன் கடை’ லீவுன்னு போட்டிருந்துச்சு, “அட கட்டையில போறவனேன்னு வூட்டுக்கு வந்தவ அவனை தேடியிருக்கா?
அப்புறம் என்னாச்சு? கதை கேட்கும் ஆர்வத்துடன் சற்று தள்ளி உட்கார்ந்திருந்த பரமன், அருணாச்சலம் மற்றும் சிலர் இவர்கள் அருகில் வந்து குந்த வைத்து உட்கார்ந்து கொண்டார்கள்.
எழுந்து வர முடியாமல் தூரமாய் படுத்திருந்த ‘சொக்கான்’ இவர்கள் வட்டமாய் உட்கார்ந்து கதை அடிப்பதை பார்த்து கொண்டிருந்தவன், “ஏ என்னாப்பா இங்கன வந்து பேசுங்கப்பா..எனக்கும் கேக்குமில்லை..
க்கும், சொக்கானுக்கு இப்ப என்னமோ இங்க “அவுத்து போட்டு ஆடறமாதிரி” நினைப்பு, பரமன் கொஞ்சம் சத்தமாய் முணுமுணுத்தான்.
“யே பாவம்ப்பா அவனால நடக்க முடியலையின்னுதானே சொல்றான், அருணாச்சலம்.
“ஓ அப்ப நீங்க ரொம்ப வேகமா நடப்பீங்களாக்கும், பரமன் முறைத்தான்.
அப்பொழுது நடக்க முடியாமல் தரையை தேய்த்தபடி வந்த முருகன் என்னாங்கப்பா இதுக்கு போய் சண்டை போட்டுக்கிட்டிருக்கீங்க, கம்முனு இருங்கப்பா, ‘வீரையன்’ கதையை எப்படி முடிக்க போகிறான் என்று அவன் வாயை பார்த்தான்.
இவர்களின் சின்ன சண்டையை சுவாரசியமாய் பார்த்து கொண்டிருந்த வீரையன் “யாராச்சும் பீடி இருந்தா கொடுங்கப்பா” கையை நீட்டினான்.
“சே” இந்த வீரையன் எப்பொழுதும் இப்படித்தான் ஒரு கதையை சுவாரசியமாய் ஆரம்பிப்பான், அடுத்த கட்டத்துக்கு போகும்போது சட்டென நிறுத்தி இப்படி “லாந்தடிப்பான்; முணுமுணுத்தான் பரமன்.
ஏய் பரமா என்னா முணுமுணுப்பு உன்ர டவுசர் பையில பீடி கட்டு வச்சிருக்கயில்லை, எடுத்து கொடுறா.
பரமன் வேட்டியை தூக்கி தன் கையை டவுசர் பையுக்குள் நுழைத்து ஒரு பீடியை மட்டும் உருவி வீரையனின் கையில் திணித்தான்.
பீடியை மட்டும் கொடுத்தா? கங்கு யார் கொடுப்பா,
இந்தாப்பா நா தாறேன், பரமன் அப்பொழுதுதான் தன் வாயில் பற்றவைத்திருந்த பீடியின் ‘கங்கை’ வீரையன் கையில் கொடுத்தான்.
அதை வாங்கி பீடியில் பற்ற வைத்து நீண்ட இழுப்பு இழுத்த வீரையன் “ஹா” வாய் வழியாக புகையை வெளியேற்றியபடியே பீடியை பரமனிடம் கொடுத்தான்.
வீரையன் அப்படியே அவன் வெளியனுப்பிய புகையயை பார்த்தபடியே
“இவ” கையில சீவக்கட்டையோட அவனை தேட அவனோ கூட்டாளிகளோட “றஜினி” படத்துக்கு பறந்துட்டான்.
அவ்வளவுதானா? என்பதுபோல மற்றவர்கள் இவனை பார்க்க, பரமன் என்ர வூட்டுலயும் இதே கூத்துதான் நடக்கும், ஆனா பண்ணுறது என் பொண்ணூ, என்னா பேச்சு பேசுவாங்கறே, ஸ்கோல்ல அவ நல்லா படிக்கறான்னு அவங்க ஆயாட்ட டீச்சரு சொல்லிட்டாங்களாம், வூட்டுல அவ காட்டுன ஆட்டம்..!
அப்புறம்..? இப்போது எல்லோரும் பரமனின் வாயை பார்க்க அப்புறமென்ன, அவ ஆயா, இரண்டு வருசத்துல அவளை ஸ்கோல்ல இருந்து நிறுத்திபுட்டா, குவாரிக்கு கல் உடைக்க துணைக்கு வேணுமின்னு..
“உச்” ஓரிருவர் பரிதாபம் கொட்டினர்.
என்னா பண்ணறது? நானும் கூட என் வூட்டுக்காரிட்ட சொன்னேன், வேணாம், நம்ம மக நல்லா படிக்கற புள்ளை, அப்படீன்னு. “போடா குடிகார நாயே” நீ ஒழுங்கா இருந்திருந்தா..! சொன்னவன் தன் தலையை கவிழ்த்துக்கொண்டான்.
அப்புறம் என்னாச்சு? என்று யாரும் அவனை கேட்கவில்லை, காரணம் இந்த கதையை கிட்டத்தட்ட வந்த நாள் முதல் சொல்லிக்கொண்டிருக்கிறான், அவன் மகள் என்ன செய்தாள்? என்று ஒரே ஒரு முறை மட்டும் அழுதபடி சொன்னான், அதே குவாரியில் வெடி விபத்தில் வேண்டுமென்றே போய் சிக்கி தன்னை மாய்த்துக் கொண்டதை. மற்றபடி மெளனம் மட்டுமே அவனது பதிலாய் இருந்தது.
காரணம் அவன் மனைவியும் அவனை விட்டு வேறொருவருடன் போய்விட்டதை சொல்லாமல் விட்டுவிட்டான், என்றாலும் இங்குள்ளவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது தெரியத்தான் செய்கிறது.
“டிங்க் டிங்க் டிங்க்” மணியோசை கேட்கவும் ஏ மதியம் சாப்பாட்டு வேளை ஆயிடுச்சுப்பா. தடுமாறிக்கொண்டு எல்லோரும் தங்களை பரபரப்பாக்கி கொண்டனர். சொக்கான் கூட யாரும் பிடிக்காமலேயே தன் முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து கொண்டான்.
எல்லாம் வரிசையில அப்படியே உட்கார்ந்துக்குங்க, ஒருவன் வரிசையாய் தட்டை கையில் கொடுத்துக்கொண்டே போக மற்றொருவன் “கலவை சாதம்” பெரிய கரண்டியில் ஒரு ஒரு கரண்டியாக போட்டபடியே பின்னால் சென்றான்.
“சிந்தாம சாப்பிட்டு” அந்த தொட்டிகிட்ட போய் உங்க தட்டை வச்சிட்டு கையை கழுவிட்டு வந்து உட்காந்துக்குங்க. அவர்கள் சொல்லிவிட்டு உள்புறமாய் சென்று விட்டார்கள்.
வர்ற வருசமாவது “அநாதை ஆசிரமத்துல” இருக்கற அப்பனை பார்த்துட்டு வந்துடணும். எங்க நமக்கு இங்க சோத்துக்கே வழியா காணோம், போய் பாக்கணும்னா அஞ்சு பத்தாவது கொடுக்கணுமில்லை, வூட்டுக்காரிய அனுசரிக்க முடியாதுன்னுட்டு போய் உக்காந்துட்டானே, மனதிற்குள் நினைத்தபடி மூட்டை ஒன்றை முதுகில் தூக்கிக்கொண்டு லோடு லாரியை நோக்கி சென்று கொண்டிருந்தான் வீரையனின் மகன் கந்தன்.
கந்தனை போல் பலர் இப்படி நினைத்து கொண்டிருக்கலாம். அவர்கள் சோமையன் முருகன் சொக்கான் இவர்கள் சம்பந்தபட்டவர்களாக கூட இருக்கலாம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-May-23, 10:56 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : ppoi parkkavendum
பார்வை : 122

மேலே