கடவுளுக்கும் அடி சறுக்கும்

நரகத்தில் பாவிகளைப் பொரித்தெடுக்கும் எண்ணெய் தீர்ந்துவிட்டதால் பூலோகம் வந்திருந்தார் கடவுள்.

நேராக ஒரு வீட்டுக்கு சென்று ரேசன் கார்டை திருடி எடுத்துக் கொண்டார். அதன்பிறகு ரேஷன் கடையில் வரிசையில் நின்றார்.

குடும்ப அட்டையில் உள்ள குடும்ப தலைவரின் உருவத்தில் மாறுவேடம் பூண்டிருந்ததால்
கடவுளை யாரும் கண்டு கொள்ளவில்லை.

பத்து மணி ஆகியும் ஊழியர் வராததால் கட்டம் போட்ட சட்டைக்காரரிடம் "செய்யதுபீடி" வாங்கி பற்றவைத்து
மனதைச் சாந்தப்படுத்தினார் கடவுள்.

வெகு நேரம் கழித்து வந்த ஊழியர் ரேஷன் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பிக்கிறார்.

ஆட்கள் மெல்ல நகர நகர குறுநகை புரிந்தார் கடவுள்.
கொண்டு வந்த மஞ்சப்பையிலிருந்து கார்டை வெளியிலெடுத்து நிம்மதியடைகையில்
அவருக்கு முன்பு நின்றிருந்த உயரமான ஆளோடு தீர்ந்து போகிறது
பாமாயிலும் பற்ற வைத்திருந்த பீடியும்.

ஆவேசத்தில் ஊழியரைக்
கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு
அழுதுகொண்டே வீடு திரும்பினார் கடவுள்.

எழுதியவர் : மன்னை சுரேஷ் (19-May-23, 7:48 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 344

சிறந்த கவிதைகள்

மேலே