இறுதி நொடிகள்
வாழ்பவர் எவரும்
வாழும்வரை மனிதர்
மரணம் தழுவினால்
பெயரும் மறந்திடும் !
கூறுவர் பிணமென்று
எரியூட்டி அழித்திடுவர்
நாதியற்ற உடலதுவும்
நாறுகின்ற மணமாகும் !
மரிக்கும் நொடிமுன்னே
எரிக்கும் நிகழ்வதுவும்
தோன்றும் கண்முன்னே
விழிகளும் கேணியாகும் !
சுற்றிலும் காத்திருப்பர்
மரணமதை உறுதிசெய்வர்
இயல்பாக இறப்பவர்களின்
இறுதிநேர காட்சிகளிவை !
மணித்துளிகள் அழுதால்
மனங்களும் லேசாகும்
விழிநீர் வற்றிவிட்டால்
கூக்குரல்கள் நின்றுவிடும் !
முகமறியா முகங்களும்
முகம் காண வந்திடுவர்
கண்டதும் சென்று விடுவர் !
உறவுகளில் சிலர் மட்டும்
அமர்ந்து உரையாடி செல்வர்
அழுதழுது களைப்படைபவர்
கழுவியதும் கலைந்திடுவர் !
ஆழ்ந்த நட்புகள் அழுதிடுவர்
கடந்த நாட்களை நினைப்பர்
கூடுகின்ற கூட்டம் வீடுவரை
கனத்த உள்ளங்கள் காடுவரை !
வாழும் மனிதனே உணர்ந்திடு
பாழும் மனதினில் நிறுத்திடு
ஆதிக்கம் ஆணவம் களைந்திடு
அகங்காரம் அறவேத் துறந்திடு !
எல்லா மனிதர்க்கும் இந்நிலை
எடுத்து செல்வது ஏதுமில்லை
உடன் வருவது ஒன்றுமில்லை !
பழனி குமார்
23.05.2023