தேவதையின் தேவதை---வெண்பா---

"புன்னகையில் நீவரும் போதுபூ நாணிமூடும்"

கவின் சாரலன் ஐயா எழுதிய வெண்பாவின் முதலடி, எனை ஒரு வெண்பாவை எழுதத் தூண்டியது.

**************

நேரிசை வெண்பா :

பொன்னிலவாள் கண்மருளும் பொய்யிடையாள் உட்பறந்து
கன்மனத்தில் தேன்குடிக்கும் கார்விழியாள் - புன்னகைத்தாள்
மெய்வெளியில் புள்ளினங்கள் மென்சிறகில் பண்ணெழுப்பும்
வெய்யவனும் தண்ணளிப்பான் வீழ்ந்து.

மருளும் - மயங்கும், இடை - இடுப்பு, கன்மனம் - கல் மனம், கார் - கருமை, புள்ளினங்கள் - பறவைகள், பண் - இசை, வெய்யவன் - சூரியன், தண் - குளிர்ச்சி.

பொருள் :

அவள் பொன் நிலவைப் போன்று இருப்பவள். அவளுக்கு இடை இருக்கிறதா? இல்லையா? என்று, பார்க்கும் கண்களை மயங்க வைக்கும் அளவிற்கு இடையை உடையவள்.

கல் போன்று உறுதியான இறுகிய மனதிற்குள் நுழைந்து தேன் குடிக்கும் கருமையான விழிகளைக் கொண்டவள்.

அவள் சிரித்துவிட்டால் போதும், என் உடம்பு முழுதும் பறவைகள் தன் மென்மையான சிறகுகளால் இசையெழுப்பிப் பறக்கும்.

வெப்பக் கதிர்களை வீசும் சூரியனும் குளிர்ச்சி தந்து அவளிடம் தோற்பான்.
அத்தகைய அழகை உடையவள் அவள்.

(கசா/சா/உ0ருச)

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (17-Jun-23, 7:30 pm)
பார்வை : 3191

மேலே