ஒத்தையடி பாதையில

ஒத்தையடி பாதையில
ஒத்தையா நான் போகையில
உள்ளுக்குள்ள நோகுதம்மா
என்னோட மனசு - மனசு
மானங்கெட்டு பறக்குதம்மா
என்னோட உசுரு.

குருக்ஷேத்த்ர போரினிலே
குருதிப்புனல் ஓடயில
தன்கொலம் ஜெயித்திடத்தான்
தன்தலைய பலிகொடுத்தான்
அரசமகன் அரவானின்
ஆசையத்தான் பெருமாளும்
மோகினியா உருவெடுத்து
திருமணந்தான் செஞ்சாரே

அர்ஜுனன் உலுப்பி மகன்
அரவான் அரசனத்தான்
புருஷனா நெனைச்சி நாங்க
பூச்சூடி சிரிச்சோமே
காலையில கல்யாணம்
மாலையிலே கருமாதி
தாலியத்தான் அறுத்துப்புட்டு
தனிமரமா நின்னோமே.

பத்துமாசம் சொமந்தவளும்
ஒதுக்கித்தான் வெச்சாளே
கூட பொறந்த பொறப்புந்தான்
கை கழுவி போனதுவே
யாரைத்தான் நோவுறது?
யாரைத்தான் நம்புறது?
என் விதியை படைச்ச - அட
ஆண்டவனே பதில் சொல்லு.

ஆணுக்குள்ள பெண்ணுமுண்டு
பெண்ணுக்குள்ள ஆணுமுண்டு
ரெண்டும் சேர்ந்து வந்தாக்க
ரோட்டுலத்தான் எடமுண்டு
என்னான்னு தெரியலையே
ஒன்னுந்தான் புரியலையே
அர்த்தநாரி ஆண்டவனே அதன்
அர்த்தத்த நீ சொல்லு

பொறப்புக்கும் இறப்புக்கும்
எங்க சனம்தான் கூத்தடிக்கும்
கல்யாணம் வளைகாப்பு
அத்தனைக்கும் கொட்டடிக்கும்
கூடிநின்னு ஆட்டம் ஆடி
காசத்தான் வாரி எரச்சி
கொண்டாட்டம் முடிஞ்சதுமே
எச்சிஎலையா தூக்கியெறியும்

அரிது அரிது மானிடராய்
ஆதல் அரிது அவ்வைமொழி
அத்தனையும் பேப்பரிலே
படிக்கும்போது நல்லமொழி
பழகிப் பார்க்கையிலே
பார்த்துதான் பேசையில
பாழாய் போய் மனம்
குப்பையென நாறிடுமே

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-Jun-23, 8:34 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 83

மேலே