மறுமையும் தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு - பழமொழி நானூறு 346

இன்னிசை வெண்பா

இம்மைத் தவமும் அறமும் எனவிரண்டும்
தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயு மன்றி மறுமையும்
தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு. 346

- பழமொழி நானூறு

பொருளுரை:

தம்மை வீட்டின்கண் செலுத்தும் விருப்பம் உடையார் தாம் இப்பிறப்பின் கண்ணே செய்யும் தவமும் அறமும் ஆகிய இவ்விரண்டு நெறியின் கண்ணும் அவற்றை வஞ்ச மனத்தராய்ச் செய்தல் இம்மையின்கண் பழியை உண்டாக்குதலே யல்லாமல் மறுபிறப்பிலும் நிரயத்தினின்றும் தாம் வெளியேறாதவாறு தம்மை இறுகக் கட்டி வீழ்த்தும் கயிறாகவும் ஆகும்.

கருத்து:

வஞ்ச மனத்தராய்த் தவமும் அறமும் புரிந்தொழுகுவார் பழியையும், நிரயத்தையும் அடைந்து துன்புறுவர்.

விளக்கம்:

தவத்தின்கண் வஞ்சமாய் ஒழுகுதலாவது, புலி பசுவின்தோலைப் போர்த்து மேய்ந்தாற்போல, அதற்குரிய வேடம் புனைந்து அதற்காகாதன செய்தொழுகுதல்.

அறத்தின்கண் வஞ்சமாய் ஒழுகுதலாவது, பிறர் அறியும் பொருட்டு ஆரவார நீர்மையராய் மனவிருப்பமின்றி அறஞ்செய் தொழுகுதல். இவ்விரண்டினும் பழியும், நிரயமும் வந்து எய்தும்.

'தம்மைத் தாம் ஆர்க்குங் கயிறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jun-23, 7:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே