காரணம் புரிந்தது இன்றன்றோ

ஆதவன் அஸ்தமிக்கும் அந்திப்
பொழுதில் மனதை கரைக்கும்
மாலைத் தென்றல் மேனியைத்
தழுவி இதயத்தில் ஊடுருவ
வண்ண மலர்கள் நிறைந்த
பூஞ்சோலையில் நுழைந்தேன் !

தடம் பதித்த தருணம் மேனி
குளிர்ந்திட உள்ளம் உறைந்தேன் !
விழி மூடி அனுபவித்த சுவாசம்
மெய்சிலிர்க்க வைத்தது !

காலை மலர்ந்த பூக்கள் யாவும்
மாலை நேரத்தில் கவிழ்ந்த நிலை
என்னை வருகவென வரவேற்றன !
குயில்களின் கூவல் இன்னிசையாகி
தேனில் தோய்த்த பலாச்சுளையாக
இதயம் இதமாகி இனித்தது !

கனத்திருந்த நெஞ்சம் கரைந்தது
உறைந்திருந்ந உள்ளம் உருகியது
மாற்றம் தந்த இயற்கை சூழல்
கல்லான மனதும் நீரோடையாக
மாற்றுமென தெளிவு பிறந்தது !

காதலர்கள் பூங்காக்களின்
புல் தரையில் காலம் கடத்துவதும்
பெரியவர்கள் கல் மேடையில்
அமர்ந்து நினைவுகளை அலசுவதும்
சிறார்கள் விளையாடி மகிழ்வதும்
காரணம் புரிந்தது இன்றன்றோ !


பழனி குமார்
29.06.2023

எழுதியவர் : பழனி குமார் (29-Jun-23, 5:23 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 102

மேலே