யார் பெரியவன் -அத்தியாயம் ஒன்று
யார் பெரியவன்?
நானா? இல்லை நீயா?
*************************************
இது சாதாரண கேள்வி அல்ல
பல சாம்ராஜ்ஜியங்கள்
சரிந்து போக
சாவுமணி அடித்த கேள்வி.
பல அரண்மனைகள்
அதிர்ந்து போக
அட்சாரமிட்ட கேள்வி.
பல தேசங்கள்
நேசமின்றி போக வைத்த
நாசகரமான கேள்வி.
பல இல்லங்களை
இன்னலுக்கு உள்ளாக்கிய
இடியோசை கேள்வி.
பல உறவுகளை
உலுக்கி போட்டு எடுத்த
உச்சாணி கேள்வி.
நாடாளும் வேந்தன் முதல்
நமோ சொல்லும் ஞானி வரை
சதா நச்சரிக்கும் கேள்வி.
ஏறக்குறைய
எல்லார் மனங்களிலும்
எழுந்து மறையும்
மின்னல் கேள்வி.
******************
ஆம்
அப்படி ஒரு கேள்வி தான்
அன்றும் எழுந்தது
அதுவரையில்
கூடி குலாவி
கும்மாளமிட்ட
பஞ்ச பூதங்களும்
தம்மில் யார் பெரியவன்
என்கிற தர்கத்துக்கு
தம்மை தயார் படுத்திக் கொண்டன
பூதங்களுக்குள்
பூதாகரம் எடுத்தது பிரச்சனை
அதுவரையில்
பாசத்தை பந்தி வைத்த
பங்காளி கூட்டத்துக்குள்ளே
பாக பிரிவினை
பாங்காக தொடங்கியது
அகங்காரம் நெஞ்சிக்குள்
ரீங்காரம் இட ஆரம்பித்துவிட்டால்
ஓம்காரத்தின் நாதம் கூட
ஓசை இல்லாமல் போய்விடும் போல
அங்கும் அதே சூழல் தான்
**************************
முதலில்
காற்று மையம் கொண்டது
***************************
கர்வம் கொண்டவர்களே!
சர்வமும் நான் என்பதை உணராதவர்களே!
உருவம் இல்லாத நான் இல்லாமல் போனால் - இங்கே
பருவம் ஏது? உயிர் கருவும் ஏது?
வளி தானே - உயிர் வாழ்வதுக்கான
வழி நானே
காற்று மேலும்
செருக்குடன் செப்பியது
எங்கும்
பூ மணம் பரப்புபவன் நான் தான்
புல்லாங்குழல் புகுந்து
புது ராகம் படைப்பவனும் நான் தான்
இதயம் அற்றவர்களே!
உங்கள்
இருதயம் இயங்க
காரணமானவன் நானே!
காற்றின் பேச்சில்
காரம் இருந்த்தது
அது
அகம்பாவம் கொண்டது
அதன்
அகமும் பாவம் கொண்டது
நெருப்பு அறியாமல் துருவங்கள் வாழும்
நீர் அறியாமல் சில உருவங்கள் வாழும் - என்
இருப்பு இல்லாமல் போனால்
இந்த பிரபஞ்சம் முழுதும் தாழும்.
புயல் கரையை கடந்து நின்றது
அதுவரையில்
தன்னை அவகாசபடுத்தி கொண்ட
ஆகாயம்
அடுத்து பேச வந்தது
வளியின் பேச்சில்
வலி கொண்ட வானம்
வார்த்தைகளை கோர்த்து
வானுயர பேசலானது
ஆகாயம் நீர் கோர்த்து சிந்தலானது!
கொண்டல் கொஞ்சும் ககனம்
சீண்டல் பேச்சால் சினம் கொண்டு எழுந்தது.
**********************************************
காயம் பட்ட காரணத்தால்
ஆ(காயம்) கண்ணீர் வார்த்தைகளை கொட்டியது
அடே வீணர்களே!
அறிவிழந்த மூடர்களே!!
அத்தனைக்கும் ஆதாரம்
நான் என்பதை அறியாதவர்களே!!!
உப்பிட்ட கடல்நீரை
உளமார உண்டு
உலகம் செழிக்க அமிர்தம்
உமிழும் முகிலை உள்நெஞ்சில் சுமப்பவன் நானே!
அன்றாடம் ஆயிரம் விந்தைகள்
அரங்கேற ஆசனமிட்டு
ஆட்சி புரிபவனும் நானே!!
இடியும் மின்னலும் சப்தஜாலம் காட்டிலும்
என்றும் முடியாய் மகுடம் சூடுபவனும் நான் தானே!!!
வெண்மதி மிதப்பதும்
விண்மீன்கள் விளையாடுவதும்
என்னுடன் அன்றி யாருடன்?
வெளி வெகுண்டெழ -- மற்றவரின்
முழி பிதுங்கியது.
ஊதா கதிர்களின்
உஷ்ணம் தெரியுமா உங்களக்கு?
உலா வரும் கோள்களின்
நாள் கணக்கு தெரியுமா உங்களக்கு?
கேள்வி கணைகளால்
வேள்வி செய்தது வானம்!
உயர்த்தவரும் தர்க்கத்தில் இழப்பது நிதானம்! -- இதுவே
உலகம் உரக்க சொல்லும் நிதர்சனம்!!
வான் முட்டி தள்ளிய வார்த்தைக்களால்
வாயடைத்து நின்ற நிலம் - தன்
வாதத்தை எடுத்து மொழிய
வாய் திறந்து நின்றது.
ஞானம் குன்றி
நால்வர் பேச
ஞாலம் தான் என்செய்யும் பாவம்!
தாங்குதல் தானே
தரணியின் இயல்பு!
அகழ்வாரை மட்டும் அன்றி
இகழ்வாரையும் பொறுத்தல் தானே
புவியின் குணம்.
நிலம் நடுக்கம் காணாமல்
விளக்கும் வகையில் பேசலானது
இன்னும் வ(ள)ரும்