மகளே என் மகளே
காலம் வகுத்த கணக்குகளில்
ஈவு நான்.
மீதம் நீ!
கண்ணாடி கூண்டுக்குள் கட்டுண்ட
பஞ்சவர்ண கிளி!!
உப்பு வரி கோலம் போடும் உவர் நிலம்
என் விழிகள்!
செப்பும் பேச்சு தேன் சிந்தும்
சிருங்காரம் உன் மொழிகள்!!
அட்டகத்தி நாடகத்தில் ஆளும் வேந்தன் நான்! -என்னை
ஆட்டிவிட்டு அழகு பார்க்கும் தஞ்சாவூர் பொம்மை நீ!!
பட்டதையே பாவடிக்கும் பாமர கிறுக்கன் நான்! - என்
பார்வைக்குள் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி நீ!!
ரணங்களை ரகசியம் காக்கும்
ரசாயன கலவை நான்!-என்
எண்ணங்களை ஏந்தி விண்ணில் பாயும்
ராக்கெட் லாஞ்சர் நீ!!
என் சேமிப்பில் புழுங்கும் ஒற்றை நாணயம்!
என் மௌனத்தை கலைக்க வந்த மத்தாப்பு புன்னகைக்காரி!!
அம்புலி ஒன்று மட்டும் அழகு என்று நானிருக்க - என்னை
வம்பிழுக்க வந்துவிட்ட வட்ட நிலா நீ தானே!!
என் உலகம் உன் ஒருத்திக்காய் விரியுது!
என் வாழ்வும் ஒரு திக்காய் செல்லுது!!